மகனாக வந்தவனால் நொறுங்கியது மனது !ஓவியம்: ராமசந்திரன்
வாசகிகள் பக்கம்
##~## |
முதுமையின் துன்பத்திலும்... தனிமை யின் துயரத்திலும் துவண்டு இருந்த நேரத்தில், எனக்கு ஆறுதலாக வந்தவனை, பெறாத மகன் என்றே நினைத்து கொண்டாடி னேன். அவனே இன்று என்னை ஆறாத மன வருத்தத்தில் தள்ளியிருப்பதுதான் கொடுமை!
இப்போது அறுபது வயதைக் கடந்திருக்கும் நான், இருபது வருடங்களுக்கு முன்பே கணவரை இழந்துவிட்டேன். என் மகளும், மகனும் திருமணமாகி தத்தமது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். 'அம்மாவுக்கு ஊரில் சொத்து இருக்கிறது... செலவுக்குப் பணம் அனுப்புகிறோம்... என்ன குறை அவருக்கு?' என்பது அவர்களின் நினைப்பு. ஆனால், என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் வாழக் கொடுத்து வைக்காத கவலை எனக்குத்தானே தெரியும். அதை மறக்க, ஆன்மிகத்தில் நாட்டம் செலுத்தினேன் நான்.
பஜனை ஒன்றில்தான் எனக்கு அறிமுகமானான் ஓர் இளைஞன். அவன் பக்தியும், அவன் என் மேல் வைத்திருந்த மரியாதையும் என்னை நெகிழவைத்தது. பாசத்துடன் 'அம்மா...’ என்றழைத்தான், வீட்டுக்கு அடிக்கடி வந்து நலம் விசாரித்தான், மருத்துவமனை செக்கப்களுக்குகூட அழைத்துச் சென்றான். இப்படி எல்லா வகையிலும் எனக்கு அனுசரணையாக இருந்தான். அவன் காட்டிய இத்தகைய அன்பு, அவனை பெறாத பிள்ளையாக நினைக்க வைத்தது. பிள்ளைகள் குறித்த என் மன வருத்தங்களை மட்டும் அல்ல, என் சேமிப்புப் பணம், சொத்து விவரங்கள் ஆகியவற்றையும்கூட அவனிடம் பகிர்ந்தேன்.

சில மாதங்களுக்கு முன், சொந்த ஊரில் இருக்கும் என் நிலத்தை விற்று, அந்தப் பணத்தை ஏதாவது ஆசிரமத்துக்குக் கொடுக்கும் என் எண்ணத்தை அவனிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொன்னேன். அதற்கான வேலைகளில் அவன் இறங்கியதாகத் தெரியவில்லை. இழுத்தடித்துக் கொண்டே இருந்தான். திடீரென ஒரு நாள், ''அம்மா, ஏன்னு தெரியல இந்த வேலை லேட்டாயிட்டே இருக்கு... வாங்க ஒரு தடவை சுவடி ஜோசியம் பார்த்துட்டு வரலாம்'' என்று அழைத்துச் சென்றான். அங்கோ, 'நிலத்தை நம்பிக்கையான ஒருவரின் பெயருக்கு பவர் ஆஃப் அட்டர்னி எழுதிக் கொடுக்கவும்’ என்றது சுவடி. வீட்டுக்குத் திரும்பும்போதே, ''நிலத்தை என் பெயருக்கு பவர் ஆஃப் அட்டர்னி எழுதிடுங்களேன்மா...'' என்று பேச்சை ஆரம்பித்தவன், தொடர்ந்து அதுபற்றி என்னிடம் நச்சரித்துக் கொண்டே இருந்தான்.
ஏதோ நெருட, விசாரித்தபோது அந்த சுவடி ஜோசியம் இவனின் 'ஏற்பாடே’ என்று தெரிந்தது. அன்பைக் காட்டி, என்னை அவன் ஏமாற்ற நினைத்தது தெரிந்தபோது, உடைந்தேவிட்டேன். பெற்ற பிள்ளையைப் போல் நினைத்த என்னிடம், பணத்துக்காக அவன் பாசம் காட்டியது... என் முதுமையை இன்னும் தளர்த்திவிட்டது.
ஆனாலும், அவனை அத்தனை சீக்கிரமாக என்னால் தூக்கி எறியமுடியவில்லை. 'மகன் தவறு செய்தால் மன்னித்து ஏற்கமாட்டோமா..? அப்படி இவனையும் மன்னித்தால் என்ன..?’ என்று தவிக்கிறது என் தாய் மனம். தெளிவுற வழி என்ன தோழிகளே..?!
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு...சிநேகிதிக்கு...
என் டைரி 265 ன் சுருக்கம்

''நான் பிறந்த சில தினங்களிலேயே அப்பா இறந்துவிட, இன்று வரை என்னையும் அம்மாவையும் பாரம் பார்க்காமல் தாங்கிக் கொண்டிருப்பவர் என் மாமா. தற்போது, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த தன் மகனுக்கும், பட்டதாரியான எனக்கும் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். 'அவங்க இல்லைனா நாம இல்ல.. கல்யாணம் பண்ணிக்கோ’ என்ற அம்மாவின் கெஞ்சலும், 'கல்யாணத்துக்கு பிறகு உன் படிப்பு உன் கணவருக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டு பண்ணும்’ என்கிற தோழிகளின் அட்வைஸும் என்னை குழப்புகின்றன! பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவரை நம்பி, நன்றிக்கடனுக்காக மட்டுமே என் வாழ்க்கையை எப்படி ஒப்படைப்பது? தெளிவுபடுத்துங்கள் தோழிகளே!''
வாசகிகளின் ரியாக்ஷன்
பணமும் படிப்புமே வாழ்க்கையல்ல!
பணமும் படிப்பும் மட்டுமே வாழ்க்கை இல்லையே தோழி. இரு மனங்களின் சங்கமமே திருமணம். லட்சங்களில் சம்பளம் வாங்கும் தம்பதிகள், மனப்பொருத்தம் இல்லை என்பதற்காக டைவர்ஸ் வேண்டி கோர்ட் செல்வது தற்போது அதிகமாகிவிட்டது. அதை நீயும் கவனித்திருப்பாய்.
எம்.காம். படித்த என் தங்கையும், நான்காம் வகுப்பு படித்திருக்கும் அவளுடைய கணவரும் பதினைந்து ஆண்டுகளாக... இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பணத்தை வைத்து வீடு கட்டலாம், கார் வாங்கலாம். ஆனால்... அன்பான கணவனை வாங்க முடியாது என்பதை உனக்கு சொல்ல விரும்புகிறேன். அன்பான கணவர் அமைவது வரம். அம்மா, தோழிகள் சொல்வதைஎல்லாம் வைத்து முடிவெடுக்காமல்... நீயே நன்கு யோசித்து முடிவெடு!
- 'அவள் விகடன்' பேஸ்புக் மூலமாக... நெல்லூரைச் சேர்ந்த உமா ராஜ்
நீயே முடிவெடு!
நீ எழுதியிருக்கும் விதத்தை வைத்துப் பார்த்தாலே திருமண விஷயத்தில் நீ தெளிவான முடிவில் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் பெற்றவள் சொல்கிறாள், நண்பர்கள் சொல்கிறார்கள் என்று சப்பை கட்டு கட்டிக்கொண்டு இருக்கிறாய். எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள் என்று பெற்றவளிடமும், மாமாவிடமும் கேள். உன்னைப் போலவே, மாமா பையனுக்கும் திருமணம் தொடர்பான ஏதாவது மாற்றுக் கருத்து இருக்கலாம். எனவே, உன் முடிவை மாமா பையனிடம் சொல்லி, அவர் மனதை சுக்குநூறாக்கி விடாதே. அவர் மனதில் உள்ள எண்ணங்களை தெரிந்து கொண்டு, நிதானமாக யோசித்து உன் முடிவை தீர்க்கமாக எடு. முடிவு எடுத்த பிறகு அதைப் பற்றி யோசிக்கக்கூடாது என்பதில் மட்டும் தீர்மானமாக இரு.
- சுதா, மதுரை
மாமாவிடம் பேசு!
உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றே தெரிகிறது. உன்னை வளர்த்த மாமாவிடம், பக்குவமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து இதைப் பற்றி நீயே நேரடியாக பேசு. திருமணத்துக்குப் பிறகு எந்தளவுக்கு படிப்பு விஷயம் ஒரு பிரச்னையாக இருக்கும் என்பதை அவருக்கு புரிய வை. உன்னை வளர்த்தவர் நிச்சயம் உன் மனம் கோண நடக்க மாட்டார். பேசினால் தீராத பிரச்னைகளே இல்லை. உன் விருப்பபடியே உன் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!
- எஸ்.பாரதி, சென்னை-106