மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?

குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?

ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு டீ கிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா - ஓவியம்: ரமணன்

குழந்தைகள் உள்ள வீடு கலகலப்பாக இருப்பதைப் போல களேபரமாகவும் இருக்கும். காலையில் நேர்த்தியாக அடுக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் அடுத்த அரை மணி நேரத்தில் வீடெங்கும் இறைந்துகிடக்கும். மடித்துவைத்த துணிகள் கலைந்து சிதறும். பென்சில் கிறுக்கல்கள் சுவர்களை நிறைக்கும். வீட்டைச் சுத்தப்படுத்தியே ஓய்ந்து போவார் அம்மா.  

குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?

குழந்தைகளுக்கெனத் தனி அறையை ஒதுக்கி அவர்களுடைய பொருள்களை அங்கே வைத்துக்கொள்ளப் பழக்குவது இதற்கான முதல் தீர்வு. அவரவர் பொருள்களையும் இடத்தையும் அவரவர் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் கற்றுக்கொடுப்பதும் அதற்கு உதவுவதும் பொறுப்பு உணர்வைக் கூட்டும்.

திட்டமிடுதலில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்!

வீட்டில் தேவையில்லாத தட்டுமுட்டுச் சாமான்கள், டிரெட்மில், இத்யாதி இத்யாதிகளை எல்லாம் குழந்தைகளின் அறையில் போட்டுவிட்டு, அவர்கள் தம் அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? குழந்தைகளின் அறையில் அவர்கள் உபயோகிக்கிற பொருள்கள் மட்டும் இருக்கட்டும்.

குழந்தைகளுக்கான அறையை ஒதுக்கும் போதோ, திட்டமிடும்போதோ அதில் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். நமக்குக் குப்பையாகத் தெரிகிற ஒன்று அவர்களுக்குப் பொக்கிஷமாகத் தெரியலாம். குழந்தைகளை ஈடுபடுத்தி அவர்களது அறையைச் சுத்தம் செய்கிறபோது அவர்களுடைய பொறுப்பு உணர்வு அதிகரிக்கும். பத்திரப்படுத்த வேண்டி யவை எவை, அப்புறப்படுத்த வேண்டியவை எவை என்கிற தெளிவு அவர்களுக்கு வரும்.

நெகட்டிவ் அணுகுமுறையைத் தவிருங்கள்!

குழந்தைகளிடம் எந்த விஷயத்தையும் எப்படி அணுகுகிறோம் என்பது முக்கியம். ‘உன் ரூம் எவ்ளோ குப்பையா இருக்கு பார்த்தியா... கண்டதையும் ரூம்ல அடைச்சு வெச்சிருக்கியே... அறிவிருக்கா’ என்றெல்லாம் கடுமையாகவும் நெகட்டிவாகவும் சொல்ல வேண்டாம். அடிக்கடி அறையைச் சுத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்குப் புரிகிறவிதத்தில் எடுத்துச் சொல்லலாம். 

குழந்தைகள் அறை களேபரம் தவிர்ப்பது எப்படி?


நம் குழந்தைக்குத் தேவையில்லாத பல பொருள்கள், வேறு குழந்தைகளுக்குப் பயன்படும் என பாசிட்டிவாகச் சொல்லிப் புரியவைத்தால் தயக்கமின்றி நிறைய கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வார்கள்.

உயரத்தைக் கவனத்தில்கொள்ளுங்கள்

புத்தகங்களுக்கு, துணிகளுக்கு, பொம்மைகளுக்கு எனத் தனித்தனியே இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம். குழந்தையின் அறையில் அதற்கான இடவசதி இல்லாவிட்டால் ரெடிமேடாகக் கிடைக்கிற அலமாரிகளை வாங்கிக்கொடுக்கலாம். அப்படி நீங்கள் வாங்கும்போது குழந்தைகளின் உயரத்தையும் கருத்தில்கொள்ளுங்கள். எட்டு வயதுக் குழந்தை என்றால் மூன்று அல்லது நான்கு அடியில் உள்ள அலமாரிகளை வாங்கிக் கொடுக்கலாம்.

தேவையானவை, தேவையற்றவை எனப் பிரித்த பிறகும் தேவையானவை பட்டியலில் நிறைய இருப்பதாக உணர்கிறீர்களா? உதாரணத்துக்கு பொம்மைகள். அவற்றை இரண்டாகப் பிரியுங்கள். முதல் செட்டை குழந்தைகளிடம் கொடுத்துச் சில மாதங்களுக்கு விளையாடச் சொல்லுங்கள். அந்த பொம்மைகள் போரடிக்கும்போது, அடுத்த செட் பொம்மைகளைக் கொடுத்துவிட்டு, பழைய பொம்மைகளை வாங்கிவிடுங்கள். இப்படிச் செய்தால் அவர்களுக்கு பொம்மைகள் போரடிக்காது. இடமும் அடையாது.

குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் உள்ள அலமாரிகளில் அவர்கள் அடிக்கடி உபயோகிக்காத பொருள்களை வைக்கலாம். உங்கள் உதவியில்லாமல் அவர்கள் எடுக்கக் கூடாது என்பனவற்றை அதுபோன்ற இடங்களில் வைக்கலாம்.
குழந்தைகளுக்குத் தனி அறை ஒதுக்கும்போது அதில் குட்டியாக ஒரு கண்ணாடியுடன் டிரஸ்ஸிங் டேபிளும் வைத்துக்கொடுக்கலாம். அதில் அவர்களுடைய க்ளிப், நகைகள், சீப்பு போன்றவற்றை வைத்துக்கொள்ளப் பழக்கலாம். குழந்தைகளுக்குப் பொதுவாகவே நன்கு டிரஸ் செய்துகொள்ள விரும்புவார்கள். அதனால், இதை என்ஜாய் செய்வார்கள்.

ஆர்வத்தை வளருங்கள்

பெரிய குழந்தைகளுக்கான அறை களில் இதர ஆர்வங்கள் தொடர்பான விஷயங்களுக்கும் இடம் ஒதுக்குங்கள். உதாரணத்துக்கு ஸ்போர்ட்ஸ், இசை போன்றவற்றுக்கான பொருள்களை வைக்கவும் பாடவும் ஆடவும் கொஞ்சம் இடம் ஒதுக்கிக்கொடுங்கள். உங்கள் குழந்தைகள் பியானோ வாசிப்பார்களா? வரவேற்பறையில் இருப்பதைவிட,  அதைக் குழந்தைகளின் அறையிலேயே வைக்கலாம். அவர்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் வாசிப்பார்கள். அது தங்களுடையது என்கிற எண்ணம் அந்தத் துறை சார்ந்த அவர்களது ஆர்வத்தையும் அதிகரிக்கும்.

டி.வி, கம்ப்யூட்டர்... உஷார்!

குழந்தைகளின் அறையில் இருக்கவே கூடாத பொருள்கள் டி.வி-யும், கம்ப்யூட்டரும். உட்கார்ந்த இடத்தில் உலகமே அவர்களின் கைகளில் தேடி வருகிற நிலையில் குழந்தைகளைப் பல்வேறு ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய, கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குக் கூடியிருக்கிறது. எனவே, டி.வி-யும் கம்ப்யூட்டரும் உங்கள் பார்வையில் படும்படியான இடத்தில் இருப்பதுதான் சிறந்தது.

ரோல் மாடலாக இருங்கள்


குழந்தைகளின் அறையை அவர்களது சம்மதத்தோடு சுத்தம் செய்து கொடுக்கும் போது பார்க்க அழகாக இருக்கும். அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்ற பொறுப்பையும் அவர்களுக்குக் கற்றுத்தரலாம்.

பெரியவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே குழந்தைகளும் செய்வார்கள். எனவே, ஒரு விஷயத்தைக் குழந்தை களுக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டு, அதை நாம் பின்பற்றாமல்விட்டால் அவர்களும் செய்ய மாட்டார்கள். வீட்டைப் பராமரிப்பதிலும் இது பொருந்தும்.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்)