மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!
பிரீமியம் ஸ்டோரி
News
எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? யாழ் ஸ்ரீதேவி

ண் குழந்தைகளின் நட்பு வட்டத்தை வைத்தே அவர்களைப் புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு அவர்களின் உயர்விலும் தாழ்விலும் அந்த நட்பு ஆதிக்கம் செலுத்தும். அதைப் பெற்றோர் எப்படிக் கையாள வேண்டும்? விடையளிக்கிறார், மனநல மருத்துவர் ஷாலினி.

டீன் ஏஜ் பருவத்தில் ஆண் குழந்தைகள் நண்பர்கள் சொல்வதையே அதிகம் கேட்பது ஏன்?

குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்வரை அப்பா அம்மா சொல்வது சரியாக இருக்கும் என நம்புவார்கள். 12 வயதுக்குப் பின், இந்த மனநிலை மாறும். அப்போதுதான் பருவமடைவதற்கான ஹார்மோன் சுரப்பினால் மூளையின் தகவமைப்பு மாறும். தங்கள் வயதையொத்த பையன்கள் என்ன சொல்கிறார்களோ, செய்கிறார்களோ, அதோடு தானும் பொருந்திப்போக வேண்டும் என்கிற உந்துதல் அவர்களுக்குள் உண்டாகும். நண்பர்களைப்போலவே தாங்களும் இருக்க விரும்புவார்கள்.

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!

நல்லதொரு நட்புச் சூழலை அவர்கள் அமைத்துக்கொள்ள, பெற்றோர்களால் உதவ முடியுமா?

13 வயதில் இருக்கும் பையனிடம், ‘ஃப்ரெண்ட்னா இப்படியெல்லாம் இருக்கணும், அப்போதான் அவன் நல்லவனா இருப்பான்’ என்றால், உங்கள் மகன் அதற்குச் செவிமடுப்பது கடினம். ஆனால், ஐந்து வயது முதலே அவனுக்கு நட்புக் கதைகள் சொல்லி வளர்ப்பதன் மூலம், நல்ல நட்பு என்றால் என்ன என்கிற அடிப்படையை அவனுக்குப் புரியவைக்க முடியும்.

அதென்ன நட்புக் கதைகள்?

அம்மாவும் அப்பாவும் தங்களின் நண்பர்கள், தோழிகளுடனான கதைகளை அவர்களுக்குச் சொல்லலாம். நட்பு விஷயத்தில், ஆண் குழந்தைகள் அம்மாவைவிட அப்பாவின் வார்த்தைகளையே அதிகம் உள்வாங்குவார்கள் என்பதால், இதில் அப்பாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கலாம். ‘எனக்கு இப்படி ஒரு ஃப்ரெண்ட் இருந்தான், அவன்கிட்ட இருந்துதான் நான் இந்த நல்ல விஷயங்களை எல்லாம் கத்துக்கிட்டேன், அவன் அவசர நேரங்களில் எல்லாம் எனக்கு உதவி செய்து பக்கபலமா இருந்தான்’ என்று சொல்லலாம். அதேபோல, ‘டீச்சர்ஸை மரியாதை இல்லாம பேசுறது, கேர்ள்ஸை டீஸ் பண்றதுனு எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். அவன் பண்ணின விஷயங்கள் எல்லாம் தப்பு என்பதாலே, அவன்கிட்ட இருந்து நான் விலகிட்டேன். எப்பவும் நல்ல நண்பர்கள்கூடதான் நாம இருக்கணும்’ என்று ஃப்ரெண்ட்லியாக குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். இதில் அறிவுரை டோன் இல்லாமல், கதை சொல்லல் சுவாரஸ்யம் இருக்க வேண்டியது முக்கியம்.

பதின்பருவ ஆண் குழந்தைகளின் நட்பைக் கண்காணிக்க வேண்டுமா?

நிச்சயமாக... `Never underestimate the influence of people you allow in your life' என்றொரு பொன்மொழி உண்டு. நம் வாழ்க்கைக்குள் நாம் அனுமதிப்பவர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆண் குழந்தைகளின் நண்பர்கள், அவர்களின் கேரக்டர் பில்டிங்கில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே, அந்த நட்பு வட்டம் ஆரோக்கியமானதாக இருக்கிறதா என்பது, பெற்றோர்களின் கவனத்துக்கு உட்பட்ட விஷயமாக இருக்க வேண்டும். நட்பு மிகவும் முக்கியமானது; அதேநேரம், கவனமாக இருப்பதும் முக்கியமானது.

எனக்கென ஒரு நண்பன் இருக்கிறான்!

பெற்றோர், தங்கள் பையனின் நட்பு வட்டம் தொடர்பாகக் கண்டிப்புடன் இருக்க வேண்டுமா?

கண்காணிப்பு அவசியம்; கண்டிப்பு தேவையில்லை. சொல்லப்போனால், அந்தக் கண்டிப்புதான் பிரச்னையே. ‘ஃப்ரெண்ட்ஸ்கூட ஏன் வெளிய போற?’, ‘அவனுங்ககூட சுத்துற நேரத்துல படிக்கலாம்ல?’, ‘உன் ஃப்ரெண்ட் ஒருத்தன் வருவானே, அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கலை’ - இந்த வகையறா டென்ஷன், கோபம் வேண்டாம். பெற்றோர் - குழந்தைகள் ரிலேஷன்ஷிப் என்பது ஒரு காலத்தில் பாஸ் - சப்ஆர்டினேட் உறவாக இருந்தது. இன்றைய பேரன்ட்டிங்கில், பெற்றோர் லைஃப் கோச்சாக இருக்க வேண்டும். ‘நான் பெரிய பிளேயர் இல்லை.

ஆனா, உனக்கு கோச்சா இருக்கிறதுக்கு எனக்குத் தகுதி இருக்கு’ என்பதுதான் இன்றைய பேரன்ட்டிங் ஸ்டைல். ‘இந்த கேம் எப்படி விளையாடணும் தெரியுமா?' என்பதைச் சொல்வதைப்போலவே, அவர்கள் நட்பு வட்டத்துக்கு நல்லது கெட்டதை நிதானத்துடன் சொல்லித்தர  வேண்டும். உண்மையில், நல்ல நட்பு உங்கள் குழந்தைக்கு அடிப்படை, அவசிய தேவை. நண்பர்கள் இல்லாமல் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமானவர்கள் இல்லை.

நண்பர்கள் அவ்வளவு அவசியமா?

ஆம். மாணவப் பருவத்தில், படிப்பு அவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் காரணி இல்லை. அது அவர்களைப் பொறுத்தவரை பொறுப்பு, கடமை. இந்த வயதில் அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் விஷயம் என்னவென்றால், தன் சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள தனக்கென ஒரு நண்பன் இருக்கிறான் என்ற உணர்வு. ‘என்னைப் புரிஞ்சுக்க என் நண்பன் இருக்கான்’ என்கிற சப்போர்ட், பதின்பருவக் குழந்தைகளுக்கு மிகப்பெரிய மன ஊக்கத்தைத் தரும். மன உளைச்சலில் இருந்து காக்கும். நட்பு என்பது மன அழுத்தம் தணிக்கவல்ல நல்லதோர் உறவு (ஆன்டி டிப்ரசன்ட்). எனவே, கண்டிப்பு, ஒழுக்கம் என்ற பெயரில் ஆண் குழந்தைகளை நண்பர்கள், நட்பு வட்டம் இல்லாத குழந்தையாக வளர்த்தெடுப்பது ஆரோக்கியமானது அல்ல. வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் நல்ல நண்பர்கள் அவர்கள் உடனிருக்க வேண்டும். அதை உணர்ந்து, அந்த உயிரோட்டமான உறவை பெற்றோர்கள் ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் வாழ்க்கையில் இணைத்துவிட வேண்டும்.

ஆண் குழந்தைகளின் எதிர்பாலின நட்பு, எதிர்பாலின ஈர்ப்பாகும்போது, காதலாகும்போது, அதைப் பெற்றோர் எப்படிக் கையாள்வது?

பெற்றோர் முதலில் இதன் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். பருவ வயது ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கலாம். நட்பு, காதல் ஆகலாம். காதல், எந்த வயதிலும் எல்லா சுவாரஸ்யங்களோடும் வரும். எனவே, முதல் காதலை அரும்பாடுபட்டுக் காப்பாற்றத் தேவையில்லை. இதையெல்லாம் குழந்தைகளிடம் பேசும் பக்குவம் பெற்றோருக்கு வர வேண்டும். சொல்லப்போனால், காதல் என்ற மாயையை உடைக்கப் பெற்றோர் அதிகமாகவே உழைக்க வேண்டியிருக்கிறது. காரணம், மீடியா இதற்கு எதிரான வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. அது காதலைப் புனிதப்படுத்துகிறது. ‘காதல் ஒரே ஒரு தடவைதான் வரும்... அந்த ஒற்றைக் காதலை எப்படியாவது காப்பாத்தணும்; இல்லைன்னா, வாழ்க்கையில தோத்துப்போயிட்டேனு அர்த்தம்’ போன்ற கற்பிதங்களைத் திரைப்படங்கள் முதல் சீரியல்கள்வரை விதைக்கின்றன. அவர்கள் ஏன் காதலை இப்படிச் செயற்கையாக பூஜிக்கிறார்கள் என்றால், அதை வைத்துதான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். அதனால் காதலை மிகைப்படுத்தி, பிரமாண்டப்படுத்தி, புனிதப்படுத்தி எனப் படுத்தியெடுக்கிறார்கள். இந்த டெக்னிக்கை தங்கள் வியாபாரத்துக்காகப் பயன்படுத்து கிறார்கள்.

ஆண் குழந்தைகள் நட்பு பற்றி, அடுத்த இதழிலும் விளக்கவிருக்கிறார் டாக்டர் ஷாலினி