
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்
அப்பப்பா, எவ்வளவு தூரம் பயணித்துவிட்டோம்! நம் பாட்டியின் தலைமுறைக்கும் நம் தலைமுறைக்கும்தான் எவ்வளவு வேறுபாடு? சதி, பெண் சிசுக் கொலை போன்ற பெயர்களில் அரங்கேறிய பல கொடுமைகள் எல்லாம் இன்றில்லை. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைத்த விந்தை மனிதர்கள் மாய்ந்துவிட்டனர்.
80 வயதான நம் பாட்டிகூட ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஆண்டினைப் பெண்களின் நிதி மேம்பாட்டு வருடமாக அறிவித்திருந்தது. அரசாங்கமும் சுகன்யா சம்ருதி, மஹிளா இ ஹாத் என்றெல்லாம் மகளிருக்கான திட்டங்களை அறிவித்திருக்கிறது.
எதற்காக இந்தப் பயணம்?
உலக அளவில் 66% வேலைகளைப் பெண் கள் செய்தாலும், வெறும் 1-2% சொத்துகளே நம் பெயரில் இருக்கிறது. அப்புறம் எப்படி நம் வார்த்தைக்கு மரியாதை இருக்கும்?
நமது சுறுசுறுப்பு, ஒழுக்கம், கெட்டிக்காரத் தனம் எல்லாம் வீட்டளவில் மட்டும்தானா? ஆறை நூறாக்கும் திறமையை நாம் ஏன் வீணாக்குகிறோம்? வீடு, வங்கிக் கடன், ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற புதிய விஷயங்களை நாம் செய்யத் தயங்குகிறோமே, ஏன்?
`இருக்கிற வேலை போதாதா, இது வேறயா?' என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்கிறது.

செய்வதும்... செய்ய மறந்ததும்...
உண்மைதான், ஒன்றா இரண்டா நமக்கிருக்கும் வேலைகள்! வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கண்டிப்பாக 16 கைகள் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு 18 கைகள் தேவை. நாம் எக்கச்சக்கமாக பிஸியாக இருக்கக் காரணம், நமக்கான வேலைகளோடு ஆண்களின் வேலைகளும் நமக்குச் சேர்ந்துவிட்டதுதான். சமையல், குழந்தை வளர்ப்பு, வீட்டுப் பராமரிப்புடன் கார் ஓட்டுகிறோம்; பவர் பாயின்ட் பிரசன்டேஷன் தயாரிக்கிறோம்; மீட்டிங் நடத்துகிறோம். ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக்கிங் என்று நாம் எதை விட்டுவைத்தோம்?
எல்லா விஷயங்களிலும் கில்லியாக இருக்கும் நாம் முதலீடு, சொத்து, நிதி நிர்வாகம் என்று வந்தால், `ஐயா சாமி, ஆளை விடு’ என்று பொறுப்பை ஆண்களிடம் தந்துவிட்டு ஒதுங்கி நிற்பது ஏன்? `பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை' என்பது வள்ளுவர் அன்றே போட்ட ட்வீட். அந்தப் பொருளை வளர்க்க நாம் என்ன செய்கிறோம்? பேங்க் எஃப்.டி ரேட் எவ்வளவு குறைந்தாலும், அதைத் தாண்டி நாம் ஏன் யோசிப்பதில்லை? தங்கம் அதிக லாபத்தைத் தராவிட்டாலும், அதன்மீது நமக்கிருக்கும் (என்னையும் சேர்த்துத்தான்) மோகம் ஏன் குறைய மாட்டேன் என்கிறது?
விழித்துக்கொண்டோரெல்லாம்...
நாம் மட்டுமல்ல; பெண்ணுலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறதாம். ஆனால், பணம் என்பது ‘பவர்’ என்று காலப்போக்கில் பல நாட்டுப் பெண்கள் புரிந்துகொண்டார்கள். `நமது வாழ்நாள் அதிகரித்துள்ளது; கூட்டுக் குடும்பமுறை குறைந்துவிட்டது. கணவர் இல்லாதபோது பண விஷயத்தை எப்படி சமாளிப்பேனோ' என்பதைப் புரிந்துகொண்ட பெண்கள் விழித்துக்கொண்டார்கள்; தங்கள் பணத்தைத் தாங்களே கையாளவும், முதலீடு செய்து பெருக்கவும் துணிந்துவிட்டார்கள்.

ஆனால், நம்மில் பலர் இன்னும் விழிக்கவில்லை. காரணம், அறியாமைதான். நம் கண்ணை நாமே கட்டி வைத்திருப்பதுதான் இந்த அறியாமைக்குக் காரணம். இன்றைக்கு நம் கண்ணை நாமே அகல விரித்து, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வழி காட்டும் ஒளி
இந்த அறியாமை இருளை அகற்ற இன்றைக்கு அனைத்துப் பெண்களுக்கும் நிதி மேலாண்மை பற்றிய புரிந்துகொள்ளல் அவசியம். `எனக்கு இந்த ஃபைனான்ஸ் எல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது' என்று மட்டும் நினைக்காதீர்கள். சமையல், ஆபீஸ் வேலை, கார் ஓட்டுவதையெல்லாம் தெரிந்துகொண்ட பிறகா பிறந்தோம்? சிலரை பார்க்கப் பார்க்கப் பிடிப்பதுபோல், நிதி மேலாண்மை படிக்கப் படிக்க வசமாகிவிடும். ஒரு நாளைக்கு நாம் செலவிடும் அரை மணி நேரம் நம்மை மட்டுமல்லாமல், நம் சந்ததிகளையும் உயர்த்தும். வாருங்கள், இந்தப் பயணத்தில் நாம் சேர்ந்து செல்வோம்.
முதலில் ஒரு பயிற்சி: உங்கள் குடும்பத்தின் மாத வருமானம் என்ன? அதில் சேமிப்பு எத்தனை பர்சென்ட்?
30%-க்கு மேல் என்று சொன்னால், நீங்கள் கில்லி. 15-29% என்றால் ஓகே. அதற்கும் கீழே என்றால் இந்தத் தொடர் முக்கியமாக உங்களுக்குத்தான்!
(பயணம் தொடரும்!)