மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!
பிரீமியம் ஸ்டோரி
News
நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

டீ கிளட்டரிங் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு எழுத்து வடிவம்: சாஹா, ஓவியங்கள் : ரமணன்

ரணில்லாத வீடு எப்படியிருக்கும்? அன்ரிசர்வ்டு ரயில்வே கம்பார்ட்மென்ட்டில் கூட்ட நெரிசலுக்கும் லக்கேஜ் குவியலுக்கும் இடையில் பயணம் செய்வது போன்றல்லவா இருக்கும்? கற்பனை செய்து பார்க்கவே மிரட்சியாக இருக்கிறதில்லையா? பரண்கள்தாம் பல குடும்பங்களுக்கும் ஆபத்பாந்தவன். ஆனால், அந்தப் பரண்களை நாம் எப்படிக் கையாள்கிறோம்?

சாப்பிட அடம்பிடிக்கிற குழந்தைக்குப் பூச்சாண்டி காட்டி, கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய,  `ஊட்டுகிறேன்' என்கிற பெயரில் திணறத் திணற அடைக்கிற காட்சியை நினைத்துப் பாருங்கள். பரணில் அடைக்கிற பொருள்களும் அப்படித்தான் பிதுங்கி நிற்கும்!

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

பரண் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படாத பொருள்களைப் போட்டு வைக்கிற ஓரிடம். ஆனால், நாம் அதை அப்படித்தான் பயன்படுத்துகிறோமா? வீட்டில் வைக்க இடமில்லாத பொருள்களையும், தூக்கிப்போட மனமில்லாத பொருள்களையும் பரணில் சேர்த்து வைக்கிறோம். திடீரென ஒருநாள் பரணை எட்டிப் பார்த்தால் அங்கே பிதுங்கி வழிகிற பொருள்களால் அந்தப் பகுதியே குப்பை மேடாகக் காட்சியளிப்பது தெரியும்.

‘அவுட் ஆஃப் சைட் இஸ் அவுட் ஆஃப் மைண்டு’ என ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. அதாவது நம் பார்வையில் படாத விஷயங்கள் நம் மனதிலும் இருக்காது என அர்த்தம். பரணுக்குப் பொருத்தமான பொன்மொழி இது. பார்வைக்கு எட்டாத இடம் என்பதால் பரணில் என்ன வைக்கிறோம் என்பதையே மறந்து போகிறோம். அதனால் ஏற்கெனவே வீட்டில் உள்ள பொருள்களையே மீண்டும் புதிதாக வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருப்போம்.

நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்?!

`நம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள் இருக்கும்போது அது உயரிய லட்சியங்களை அடைவதற்குத் தடையாகிறது’ என்று  `ஃபெங் ஷுயி’யில் சொல்கிறார்கள். பெங் ஷுயியை நம்புகிறோமா இல்லையா என்பது வேறு விஷயம். அதிலுள்ள உள்கருத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். பரணில் எக்கச்சக்கமான பொருள்களை அடைக்காமல் சுத்தமாக வைத்துக் கொள்வோம். வீட்டை மட்டுமன்றி அது நம் மனதையும் மறைமுகமாகச் சுத்தமாக வைக்கும்!

பரணில் எவற்றையெல்லாம் வைக்கிறோம்?

பரணை எப்படிச் சுத்தப்படுத்துவது?

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)

பரண் - சில தகவல்கள்!

 பரண் என்பது நம் ஸ்டோரேஜ் ஸ்பேஸின் விரிவாக்கப்பகுதி எனப் பார்த்தும் பயன்படுத்தியும் பழகினால் அவற்றின் முழுமையான உபயோகத்தை அனுபவிக்கலாம்.

 பரணில் பொதுவாகவே ஈரப்பதம் இருக்கும் என்பதால் பொருள்களை வைக்கும்போது அதிக கவனம் தேவை. புத்தகங்கள், துணிகள் போன்ற வற்றை வைக்கக் கூடாது.

 எக்ஸ்ட்ரா படுக்கை, தலையணை போன்றவற்றை வைப்பதானால் கதவுகள் இல்லாத திறந்தவெளிப் பரண்களில் வைக்கலாம்.

பல அப்பார்ட்மென்ட்டு களிலும் ஒரு பிரச்னை இருக் கிறது. பரண் இருக்குமிடத்துக்கு மேல் கழிவறை இருக்கும். அங்கிருந்து கசிவு ஏற்பட்டு கீழிருக்கும் பரணுக்கு வரும். அதைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
 பரணில் எந்தப் பொருளை வைத்தாலும் அங்கே ஏதேனும் கசிவோ, பூஞ்சையோ, கறையானோ இருக்கிறதா என 3 மாதங் களுக்கொரு முறை பார்க்க வேண்டியது அவசியம்.

 பரணில் பொருள்களை வைக்கும்முன் கற்பூரத்தை சின்னச் சின்ன மூட்டைகளாகக் கட்டி, ஆங்காங்கே போட்டு வைக்கலாம். இதன் வாசனை யும் நன்றாக இருக்கும். பூச்சிகளும் அண்டாது. இயற்கையான கிருமி நாசினி யாகச் செயல்படும்.

மூன்றில் ஒன்றை முடிவு செய்யுங்கள்!

 `வைத்துக்கொள்வதா... விற்பதா... அப்புறப்படுத்துவதா?’  - பரணில் ஒரு பொருளை அடைப்பதற்கு முன் இந்த மூன்றில் ஒன்றை முடிவு செய்யுங்கள்.

 அப்புறப்படுத்துவது என்றால் அப்புறம் பார்த்துக்கொள்வது என அர்த்தமில்லை. நல்ல நேரம் பார்க்காமல் உடனே தூக்கிப்போடுங்கள்.

 சில பொருள்களை மறுசுழற்சி செய்து உபயோகிக்கலாம் எனத் தெரிந்தால் அதையும் தள்ளிப்போடாதீர்கள். உதாரணத்துக்கு, உங்கள் பாட்டி காலத்து மணைப்பலகை நல்ல கண்டிஷனில் இருக்கலாம்... அதற்கான தேவை உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால், சென்டிமென்ட் காரணமாக அதைப் பத்திரப்படுத்த நினைத்துப் பரணில் போட்டு வைக்க வேண்டியதில்லை. அதை ஊஞ்சலாக மாற்றுவது மாதிரியான ஐடியாக்களை யோசித்து உடனே நடைமுறைப்படுத்துங்கள்.

 பரணில் பொருள்களை வைப்பதற்கு முன், அங்கே எவ்வளவு இடமிருக்கிறது என்பதைப் பாருங்கள். இந்த இடத்தில் இவ்வளவுதான் வைக்க முடியும் என்கிற நிலை தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்துவதில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தெளிவைத் தரும்.

 அன்றாடப் பயன்பாட்டுக்கு அவசியமான பொருள்களையேகூட சிலர் பரணில் போட்டு வைப்பார்கள். உதாரணத்துக்கு வாக்குவம் க்ளீனர் போன்றவை. வீட்டைச் சுத்தப்படுத்துவதற்காக வாங்கிய வாக்குவம் க்ளீனரைப் பரணில் போடுவது எந்த வகையில் நியாயம்? பயன்பாட்டுக்கான பொருள்களை வாங்குவதற்கு முன் யோசியுங்கள். வாங்கிய பிறகு நிச்சயம் பயன்படுத்துங்கள்.

 சில பொருள்களைப் பரணில் வைப்பது ஆபத்தானது. உதாரணத்துக்கு, தீபாவளிக்கு வாங்கியதில் மீதமான பட்டாசு, வெடிகள். சிலதை வைக்கும்போது அவை கெட்டுப்போகலாம்; உருவிழக்கலாம். உதாரணம் - ரப்பர் டியூப் மற்றும் மட்டரக பிளாஸ்டிக் பொருள்கள். இவற்றைப் பரணில் அடைப்பதைத் தவிர்க்கவும்.

 பரணுக்குப் போகிற பொருள்களை அட்டைப் பெட்டிகளில் வைத்து, பேக் செய்த பிறகு பெட்டியின்மேல் அதிலுள்ள பொருள்களின் பட்டியலை எழுதி ஒட்டுவது தேவைப்படும்போது சிரமமின்றி எடுப்பதற்கு உதவும்.