மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!”

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!”

தமிழ்ப்பிரபா - படம்: கே.ராஜசேகரன்

 “ரெண்டு முறை ஆள்வெச்சு என்னைக் கடத்தியிருக்காங்க. இனியும் கடத்துவாங்க” என்று புன்னகைத்துக்கொண்டே சொல்கிறார் சேகர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்துவரும் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக, கடந்த 30 வருடங்களாகப் போராடிவரும் களப்போராளி. `கடற்கரையை யொட்டி உள்ள கிராமங்களில் அதிக நிலத்தடி நீரை எடுத்தால் எங்கள் குடிநீரில் உப்புநீர் கலந்துவிடும்’ எனத் தனிமனிதனாக 1991-ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அதை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றதிலிருந்து தொடங்குகிறது சேகரின் போராட்ட வாழ்க்கை.

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!”

``வக்கீல் வெச்சு வாதாடுற அளவுக்கெல்லாம் என்கிட்ட காசு இல்லை. பெரும்பாலான வழக்குகளுக்கு நானே போய் வாதாடி ஜெயிச்சிருக்கேன். நீதிமன்றம் போறதுக்கு சில நாள் முன்னாடி வக்கீல்கள்கிட்ட அது சம்பந்தமா பேசுவேன். வீட்டுக்கு வந்து நானா அதைப் பேசிப் பேசிப் பார்த்து மறுநாள் நீதிமன்றத்துக்குப் போவேன்” என்கிறார் சேகர்.

சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களில் அரசு அதிகாரிகளின் துணையுடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டடம் கட்டுவதை ஒற்றை மனிதனாக எதிர்த்துவரும் சேகர், இதனால் சந்திக்கும் துன்பங்கள் ஏராளம்.

``ஆள்வெச்சுக் கடத்தி அவங்க காட்டுற காகிதங்கள்ல கையெழுத்து போடச் சொன்னாங்க. மனநிலை பாதிக்கப்பட்டவன்னு ஊருக்குள்ள கிளப்பிவிட்டாங்க, பெண்களை மானபங்கம் பண்ணிட்டேன்னு சொல்லிப் பொய்வழக்கு போட்டு நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷன்ல கொண்டுவந்து நிறுத்தினாங்க, வீட்டுக்குள்ள பாம்பு விட்டாங்க, ஆறு தடவைக்கு மேல என் சைக்கிளைத் திருடியிருக்காங்க... இப்படி இன்னும் சொல்லிட்டே போகலாம். இவங்களுக்குத் தேவையானது எல்லாம் இவங்க பண்ற அநியாயத்தை நான் கண்டுக்கக் கூடாதுங்கிறதுதான். என்னால் அப்படி இருக்க முடியலையே” என்கிறவரின் குரல் மேலும் உயர்கிறது. கடல்மணலைத் திருடியவர்களைக் கண்டித்து காயப்பட்ட கதைகளைக் கூறும்போது, தனக்கு ஏற்பட்ட காயங்களைவிட மண்ணைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்கிற ஏக்கம், சேகரின் குரலில் நிரம்பிக்கிடக்கிறது.

எவ்வளவு தூரம் என்றாலும், யாரைப் பார்ப்பதற்காக என்றாலும், எந்த நேரம் என்றாலும் சேகரின் பயணம் சைக்கிளில்தான். வீடு முழுக்கக் காகிதங்களும் ஆவணங்களும் காலவரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டி ருக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இதுவரை 70,000-த்துக்கும் மேலான மனுக்களை அரசுக்கு எழுதி தகவல்களைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல் உரிமைக்குரல் கொடுத்துவருகிறார்.

``கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், உத்தண்டி, கானத்தூர், முட்டுக்காடு, கோவளம் இதெல்லாம் எவ்ளோ அழகான கடற்கரை கிராமமா இருந்துச்சு, தெரியுமா தம்பி? கடலைப் பார்த்த மாதிரி வீடு கட்டுறேன், ஐ.டி கம்பெனி, அப்பார்ட்மென்ட், ரிசார்ட்னு வந்து அழிச்சுட்டானுங்க. மீனவர்களையும் கடல்நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யச் சொல்லி உற்சாகப்படுத்துறானுங்க, அப்போதான் இவனுங்க பண்ற தப்புக்கு சப்போர்ட் கிடைக்கும்னு. நான் எதையும் விடுறதா இல்லை. சோழிங்கநல்லூர்ல சதுப்பு நிலமா இருக்கிற பகுதியை அரசாங்கமே கையகப்படுத்தி ஆர்.டி.ஓ ஆபீஸ் கட்டுறாங்க. இப்போகூட அது தொடர்பா மனு கொடுக்கத்தான் போயிட்டிருக்கேன்” என்றவர் பையைத் தோளில் மாட்டியபடி சைக்கிள் பெடலை மிதிக்கத் தொடங்கினார். சிறிது தூரம் சென்ற பிறகு சைக்கிளை நிறுத்தி, ``என் தாத்தாவும், என் அப்பாவும், நானும் பார்த்த நிலங்களை, பார்த்த கடற்கரையை என் அடுத்தடுத்த தலைமுறையும் பார்க்கணும் தம்பி. நீங்களும் உதவி பண்ணுங்க” என்றவரின் குரலிலிருந்த ஆதங்கத்தை ஆமோதித்து மோதியது உப்புக் காற்று.