தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

இது யுவதிகளின் சக்தி!

இது யுவதிகளின் சக்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
இது யுவதிகளின் சக்தி!

வழிகாட்டிபிரேமா நாராயணன், படம் : ஈ.ஜெ.நந்தகுமார்

ள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அதிகமிருக்கும் மதுரை, நரிமேடு சாலை. காலை 10 மணிக்கெல்லாம் அந்த இடம் பரபரப்பாகிவிடுகிறது. ஒரு பெண் ஜெராக்ஸ் போட, மற்றொரு பெண் ஸ்கேன் செய்து கொடுக்க, இன்னொரு பெண் டைப் செய்து பிரின்ட் எடுக்க என்று படுபிஸியாக இருந்த அந்த இடம், ‘யுவசக்தி டிரெய்னிங் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்’. ஒரு ஜெராக்ஸ் கடை அல்லது டி.டி.பி சென்டர் என்றுதான் இதைப் பார்ப்பவர்கள் நினைப்பார்கள். இளம்பெண்கள் பலரின் வாழ்வில் விளக்கேற்றி வைத்து வழிநடத்தும் பேரியக்கம் ‘யுவசக்தி’யே அது என்பது பலர் அறியாத செய்தி. பெண்களை முன்னேற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இதைத் தொடங்கியவர் ஸ்ரீநிவாசன் என்ற புரவலர்.

‘`எஜுகேஷன், எம்பவர்மென்ட், எம்ப்ளாய்மென்ட் - இதுதாங்க எங்க யுவசக்தியின் தாரக மந்திரம்’’ என்றபடி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார், பயிற்சியாளர் கவிப்ரியா. ‘`பெண்களுக்குப் பல கலைகளிலும் தொழில்களிலும் பயிற்சி கொடுக்கிறதுக்காக, ‘கேலக்ஸி சென்டர்’ என்ற பெயரில் 25 வருடங்களாகச் செயல் பட்டுக்கிட்டிருந்த நிறுவனம்தான், இப்போ ‘யுவசக்தி’யாக அவதாரம் எடுத்திருக்கு. மாணவிகள், அலு வலகத்தில் பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள்னு அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் தேவையான பயிற்சிகளைக் கொடுத்தோம். இதுவரை மூவாயிரம் மாணவிகளுக்கு மேல் பலனடைந் திருக்காங்க’’ என்கிறார் கவிப்ரியா.

இது யுவதிகளின் சக்தி!

ஜெராக்ஸ் மற்றும் பிரின்ட் எடுப்பதைக் கற்றுக்கொண்டு செய்யும் இல்லத்தரசி ஸ்ரீமதி, பி.எஸ்ஸி படித்துக்கொண்டே அங்கே பணிபுரியும் கல்லூரி மாணவி சிக்கந்தரம்மா, ஐ.டி பட்டதாரி வினிதா, கம்ப்யூட்டர் கல்வி பெற்ற வினோதினி... இப்படி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பல இளம்பெண்கள் அங்கே சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர். ‘`இதில் வர்ற வருமானத்தை வெச்சு என் காலேஜ் ஃபீஸ், பஸ் ஃபேர் எல்லாமே சமாளிச்சுக்கிறேன். என் பெற்றோரின் சுமையைக் குறைச்சிருக்கேன்’’ என்று பிரின்ட் எடுத்தபடியே கூறுகிறார் சிக்கந்தரம்மா. ‘யுவசக்தி’ மூலமாகப் பயிற்சிபெறும் பெண்களுக்கு, இந்த இன்ஸ்டிட்யூட்டில் மட்டுமல்லாமல், வெளியில் பல அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது.

``வேலைவாய்ப்பு  வழிகாட்டி பயிற்சி, மல்டி ஸ்கில்ஸ் புரோகிராம், நினைவாற்றல் பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், ஸ்போக்கன் இந்தி, ஆல் இண்டியா என்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங் கிளாஸ், டீச்சர் டிரெய்னிங், ஜுவல் மேக்கிங், பெயின்ட்டிங், தஞ்சாவூர் ஓவியம், ஆர்ட் அண்டு கிராஃப்ட், ஆளுமைத் திறன் மேம்பாடு... இப்படி இங்கே நிறையப் பயிற்சிகள் கொடுக்கிறோம்.

வாழ்க்கைக்கான ஊக்கம், ஆலோசனை, ஆளுமைத் திறன் மேம்பாடு, தலைமைப் பண்புகள், நேர மேலாண்மை, கோபத்தைக் கையாளுதல், சுய முன்னேற்றம், யோகா... இப்படி ஒரு பெண்ணின் தினசரி வாழ்க்கைக்குத் தேவையான எல்லா பயிற்சிகளையும் தகுதியான ஃபாகல்டி மூலம் கொடுக்கிறோம். இதனால அவங்களுக்கு உடல், மனநலனில் அக்கறை உண்டாகி, வாழ்வில் ஒரு பிடிப்பும் தன்னம்பிக்கையும் உண்டாகுது. புதிய சூழல், நிறைய பெண்களுடன் பழகும் வாய்ப்பு எல்லாம் சேர்ந்து, பயிற்சிக்கு வரும் பெண்களின் மனதிலும் வாழ்க்கையிலும் ஒரு மறுமலர்ச்சி பிறக்குது. நூற்றுக்கணக்கான பெண்கள் பயிற்சி முடிந்ததும் நல்ல வேலையில் சேர்ந்திருக்காங்க. ‘இனி எதுவுமே இல்லை’ன்னு விரக்தியாக இருந்த பலருக்கு மறுவாழ்க்கையே கிடைச்சிருக்கு’’ என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கவிப்ரியா.

இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம், அனைத்துப் பயிற்சிகளும் இலவசம் என்பது தான். அதைவிடச் சிறப்பான செய்தி... ‘யுவசக்தி இன்ஸ்டிட்யூட்’டுக்கு கிடைக்கும் வருமானம்,
ஒய்.எம்.சி.ஏ காதுகேளாதோர் பள்ளி மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, தமிழ்நாடெங்கிலும் இருந்து நூறு திருநங்கைகளை அவர்களின் பயணச்செலவை ஏற்றுக்கொண்டு வரவழைத்து, மதுரையில் தங்கவைத்து, உணவு அளித்து, தொழில்பயிற்சி, ஆளுமைப்பயிற்சி, கவுன்சலிங் போன்றவை வழங்கப்பட்டன.

யுவதிகளுக்குச் சக்தி வழங்கி, தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து வாழ வழிவகை செய்து கொடுக்கும் ‘யுவசக்தி’, பாரதியின் கனவை நனவாக்கும் நவசக்தி ஆகட்டும்!