
டீ கிளட்டரிங் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருஎழுத்து வடிவம்: சாஹா, ஓவியம் : ரமணன்
`பரண்கள்தாம் பல குடும்பங்களுக்கும் ஆபத்பாந்தவன். ஆனால், அந்தப் பரண்களை நாம் எப்படிக் கையாள்கிறோம்?' - சென்ற இதழைத் தொடர்ந்து இந்த இதழிலும் அதற்கான காரணங்களையும், தவறுகளைக் களைவதற்கான வழிமுறைகளை யும் காண்போம்.
பரணில் எவற்றையெல்லாம் வைக்கிறோம்?
உபயோகப்படுத்தாத துணிகள், குழந்தைகளின் பழைய பொம்மைகள், எல்.கே.ஜி முதல் காலேஜ் படிக்கும்வரை பிள்ளைகள் செய்த புராஜெக்ட்டுகள், டி.வி, வாஷிங் மெஷின் போன்ற பொருள்களை வாங்கும்போது வரும் அட்டைப்பெட்டிகள், தெர்மகோல் ஷீட்டுகள், டேபிள் லேம்ப் தொடங்கி, நாற்காலி வரை ஓட்டை உடைசல் சாமான்கள்... இப்படி எல்லாவற்றையும் பரணில்தான் பதுக்குகிறோம்.
தமிழர் கலாசாரப்படி கல்யாணத்தின்போது சீர்வரிசையாக ஏராளமான பொருள்கள் வரும். பிளாஸ்டிக்கிலிருந்து எவர்சில்வர் வரை எல்லா மெட்டீரியலிலும் பொருள்கள் வரும். அவற்றைப் புதுமெருகு குலையாமல் பரணில்தான் வைத்திருப்போம். பெரும்பாலும் இப்படிச் சீர்வரிசையாக வருபவை பெரிய அளவுப் பாத்திரங் களாக இருக்கும். திருமணமாகி 25 வருடங்களான பிறகுகூட அவற்றைப் பயன்படுத்தாமல் புத்தம்புதிதாக வைத்திருக்கிறவர்கள் பலரைப் பார்க்கலாம். அவர்களின் மகளுக்கோ, மகனுக்கோ திருமணமாகும்போது அந்தப் பொருள்களை அப்படியே கொடுப்பார்கள். அவர்களும் மீண்டும் அவற்றைப் பரணில் சேர்ப்பார்கள். பயன்பாடே இல்லாமல் இப்படித் தலைமுறைகள் தாண்டி இந்தப் பழக்கம் தொடரும்.

பரணை எப்படிச் சுத்தப்படுத்துவது?
நமக்குத் தேவையில்லாத எல்லாவற்றையும் வைக்கிற கிடங்கல்ல பரண். புத்தகங்கள், பொம்மைகள் என உங்களுக்குத் தேவையில்லாதவற்றை வீட்டுக்கு அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் முதியோர் இல்லங்களுக்கும் கொடுக்கலாம். அப்படிப்பட்ட இடங்களைத் தேட முடியாது என்பவர்கள் goonj.org போன்ற இணையதளங்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு வேண்டாம் என்கிற பொருள்களை அட்டைப்பெட்டியில் வைத்துக்கொடுத்து விட்டால் எல்லாவற்றையும் அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் மூலம் அவை தேவையிருப்போருக்குச் சரியாகப் போய்ச் சேரும்.
குழந்தைகளின் ஆர்ட் வொர்க், புராஜெக்ட் போன்றவற்றை போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளலாம். அவற்றையும் தாண்டி ரொம்பவே சென்டிமென்ட்டானவை என்கிறவற்றை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு, மற்றவற்றை அப்புறப்படுத்துவதே நல்லது.
அப்புறப்படுத்துங்கள் அட்டைப்பெட்டிகளை!
பொருள்கள் வைத்து வரும் அட்டைப் பெட்டிகள்தாம் பல வீடுகளிலும் பரண்களை ஆக்கிரமித்திருக்கும். சொந்த வீட்டில் இருப்போருக்குப் பெரும்பாலும் இந்தப் பெட்டிகள் தேவைப்படாது. வீடு மாறுகிறவர்களுக்குத்தான் அவை பயன்படும். எனவே, சொந்த வீட்டுக்காரர்கள் கொஞ்சமும் யோசிக்காமல் அந்த அட்டைப்பெட்டிகளைப் பழைய பேப்பர் வாங்குகிறவர்களிடம் கொடுத்துவிடலாம். வாடகை வீடுகளில் இருப்போரில் அடிக்கடி வெளியூர்களுக்கு மாற்றலாகிப் போகிறவர்கள் மட்டும் பெரிய சைஸ் அட்டைப்பெட்டிகளை வைத்துக்கொள்ளலாம். மற்றபடி எல்லா அட்டைப்பெட்டிகளையும் அப்புறப்படுத்தி விடலாம்.
உடனடி நடவடிக்கை தேவை!
பரணில் போட்டு வைத்தவற்றில் பழுது பார்த்து மீண்டும் பயன்படுத்தக் கூடியவற்றை மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். பயனில்லை என்கிறவற்றைத் தூக்கிப்போடுங்கள். பழுது பார்க்கலாம் என்கிறவற்றை உடனுக்குடன் பழுது பார்த்துப் பயன்படுத்துங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என மீண்டும் பரணில் அடைக்க வேண்டாம்.
சீர்வரிசைச் சாமான்களின் மேல் பலருக்கும் சென்டிமென்ட்டல் அட்டாச் மென்ட் இருக்கும். யாருக்கும் கொடுத்துவிட மனம் வராது. அவை அதிக இடத்தை அடைக்காதபடி, ஒன்றுக்குள் ஒன்று போட்டுக் கச்சிதமாக இருக்கும்படி பரணில் ஓர் ஓரமாக வைக்கலாம்.
எந்தப் பரணில் எந்தப் பொருள்கள்?
நம் எல்லோர் வீடுகளிலும் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் பரண்கள் இருக்கும். எந்த அறையின் பரணில் என்னவெல்லாம் வைக்கலாம் என முதலில் திட்டமிட்டுப் பிரித்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, சமையலறையில் உள்ள பரணில் சீர்வரிசைப் பாத்திரங்களையும், பெரிய பாத்திரங்களையும், கொலு பொம்மைகளையும் வைக்கலாம். கொலு வைக்கிற படிகள், அலங்காரப் பொருள்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைக்கிறபோது வருடாவருடம் தேடாமல் சட்டென எடுத்துப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளின் அறையில் உள்ள பரணில் அவர்கள் சம்பந்தப்பட்ட பொருள்களை மட்டும் வையுங்கள். அவர்களுடைய விளையாட்டுச் சாமான்கள், எப்போதாவது பயன்படுத்துகிற பொருள்களை வைக்கலாம்.
பெட்ரூமில் உள்ள பரணில் பயணத்துக்குப் பயன்படுத்துகிற பெட்டிகள், இதரப் பொருள்களை வைக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கபோர்டுகளில் வைக்க முடியாத துணிகளைக்கூட அழகாக மடித்து பேக் செய்து பெட்ரூம் பரணில் வைக்கலாம்.
இப்படிப் பிரித்து வைத்துப் பழகினால் எந்தப் பொருள் எங்கு இருக்கும் என்பது நினைவிலிருக்கும். தேட வேண்டிய தேவையிருக்காது.
(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)
கண்ணாடிக் கதவுகள் கைகொடுக்கும்!
தேவையில்லாத பொருள்களை அதிகமாக வாங்குவதும், உபயோகப்படுத்தாமல் அவற்றைப் பரணில் அடைப்பதும் சிலருக்கு நோய் போன்றது. `என்ன செய்தாலும் இந்தப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை’ என்கிறவர்களுக்கு ஓர் ஆலோசனை.
பரணுக்குக் கண்ணாடிக் கதவுகள் போடுங்கள். உள்ளே உள்ள பொருள்கள் வெளியில் தெரியும் என்பதால் உங்களையும் அறியாமல் அங்கே பதுக்குகிற பொருள்களில் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள்!
புதிதாக வீடு கட்டுவோருக்கு ஓர் அட்வைஸ்!
எல்லா அறைகளிலும் பரண்கள் வைத்தால், அவை எல்லாமே பொருள்களால் திணறித்தான் போகும். அதனால் சமையலறையிலும், ஸ்டோர் ரூமிலும் அவசியம் வைக்கலாம். இவை தவிர வேறு ஓர் அறையில் மட்டும் பரண் அமைக்கலாம். இதன் மூலம் தேவையற்ற பொருள்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.