தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

துரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்!

துரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
துரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்!

மிஸ் இந்தியா

2018-ம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டி இறுதிச்சுற்றில் கேட்கப்பட்ட கேள்வி `வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் யார்... வெற்றியா, தோல்வியா?’ - நடிகர் அயுஷ்மான் குரானாவின் இந்தக் கேள்விக்குச் சற்றும் தயக்கமின்றி, தெளிவாகப் பதில் சொன்னார் இந்த 19 வயதுப் பெண். “தோல்வி தான் சிறந்த ஆசிரியர். தோல்வியைச் சந்தித்தால்தான், மனம் அதைச் சவாலாக எடுத்துக்கொள்ளும். கடின உழைப்புக்கு நம்மை உந்தித்தள்ளும். நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய வைக்கும். கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்த என்னை, தொடர்ச்சியான தோல்விகளும் விமர்சனங்களுமே செதுக்கியிருக்கின்றன. ஒருகட்டத்தில் என்னைத் தோல்விகளி லிருந்து மீட்க என் அம்மாவைத் தவிர எவரும் முன்வரவில்லை. அனுபவமே சிறந்த ஆசிரியர். தோல்விகள் நம்மைத் துரத்தினாலும், வெற்றி ஒருநாள் நம்மை நிச்சயம் தேடிவரும்” என்றார்; இந்திய அழகிப் பட்டத்தையும் தட்டிச்சென்றார். இத்தனை உருக்கமாக அவர் பேசியதன் காரணம், தனியொருவராக நின்று அவரை வளர்த்தெடுத்த அவரின் தாய்!

துரத்திய தோல்விகள்... தொடரும் வெற்றிகள்!

அனுக்ரீத்தி வாஸ் - சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்சு பயிலும் மாணவி. அம்மாவின் ஆசை என்பதால்தான் பிரெஞ்சு மொழி பயில்கிறேன் என்று கூறும் அனுக்ரீத்திக்கு, மொழிபெயர்ப்பாளராக ஆசை. கராத்தே கற்றுக்கொண்டுள்ள  அனுவுக்கு, பைக் ஓட்டுவது மிகவும் பிடித்தமானது; பயணங்கள்மீதும் அளவற்ற காதல் உண்டு. `காலேஜ் செல்லும் சாதாரணப் பெண்தான் நான்' என்று கூறும் இவர், தடகள விளையாட்டுகள்மீதும் ஆர்வம் கொண்டவர். தான் ஒரு ‘டாம் பாய்’ என்பதையும் சிரிப்புடன் கூறுகிறார். இந்த ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்று இந்திய அழகிப் போட்டியில் நுழைந்த அனுக்ரீத்தி, மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல் பட்டமும் வென்றார்.

போராட்டம் இல்லாத வாழ்க்கை உண்டா? திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தியின் நான்காவது வயதில், தந்தை பிரிந்து சென்றுவிட, தாய் செலினாவின் அரவணைப்பில் வளர்ந்திருக்கிறார்.

“என் மகள் ஜெயித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இறுதிச்சுற்று வரைதான் வருவாள் என்று நினைத்தேன். ஜெயித்துவிட்டாள்!” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார் செலினா. “நடிப்பில் அவளுக்கு ஆர்வம் அதிகம். நானோ படிப்பில் கவனம் செலுத்தும்படி வற்புறுத்தி வந்தேன்.

மிஸ் இந்தியா போட்டி இவ்வளவு பெரிய இடத்தை எங்களுக்குத் தரும் என்று நினைக்க வில்லை. பட்டம் வென்றதும் அவளிடம் பேசினேன். `அம்மா, நான் ஜெயித்துவிட்டேன்; அம்மா, நான் ஜெயித்துவிட்டேன்’ என்று குழந்தை போல திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்” என்று மகளைக் குறித்துப் பெருமிதத்துடன் பேசுகிறார் செலினா.

வாழ்த்துகள்... தமிழ் அழகே!