மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல!

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

ந்தப் பக்கங்களை நீங்கள் படிக்கிறீர்கள் என்றாலே உங்களிடம் முன்னேறும் ஆர்வம் இருக்கிறது என்றுதான் அர்த்தம். இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போலவா நாம் இருக்கிறோம்? வீட்டுக்கு வீடு கார், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என்று கொடிகட்டிப் பறக்கிறோமே! நம்மில் எத்தனையோ பேர் அலுவலகங்களில் வேலை பார்த்துச் சம்பாதிக்கிறோமே! பிசினஸ் செய்து தூள் கிளப்புகிறோமே!

முன்னேற்றம் சரி, ஞானம்?

ஆனால், பொருளைச் சம்பாதிக்கத் தெரிந்த நமக்கு அதைப் பெருக்கும் வழி தெரியவில்லை. நமது பொருளாதார அறிவானது நம் பெற்றோரையோ நண்பர் களையோ பார்த்துவந்த விஷயம்தான். இப்போது நிலைமை சற்று மாறி வருகிறது. டாக்டரோ, இன்ஜினீயரோ, சயன்டிஸ்ட்டோ... யாராக இருந்தாலும் பொருளாதார அறிவும் கண்டிப்பாகத் தேவை. அது இல்லாவிட்டால் தங்கத் தட்டில் சாப்பிட்டவர்கள்கூட கடைசிக் காலத்தில் பணமின்றி, உணவின்றித் தவிக்க நேரிடும். 

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல!

சேமிப்பு டு முதலீடு

நாம் சேமிப்பதில் ஜகஜால கில்லாடிகள்தான். உலகிலேயே அதிகம்  சேமிப்பவர்கள் (30%) நாம்தான். ஆனால், சேமிப்பு, சேமிப்பாகவே நின்றுவிடுகிறது. அது முதலீடாக மாறுவதில்லை என்பதுதான் சோகம். என் தோழி ஒருத்தி வங்கிச் சேமிப்புக் கணக்கிலேயே அதிகமான  பணத்தை வைத்திருப்பார். அதற்கு அவர் பெறும் வட்டி வெறும் 4%. அந்தப் பணத்தில் பாதியையாவது எஃப்.டி-யில் போட்டு வைத்திருந்தால், இரு மடங்கு வட்டி கிடைத்திருக்கும். குறுகிய காலத்தில் பணம் தேவைப்படும் என்றால், ஏழு நாள்கள்கூட  எஃப்.டி-யில் போடலாம். அதை நாம் எடுக்காமல்விட்டால் ஏழு நாள்களுக்குப்பிறகு அதுவே ஆட்டோமேட்டிக்காகத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும். இடையில் ஓர் அவசரம் என்றாலும் அந்த எஃப்.டி-யை குளோஸ் செய்து உடனே பணம் பெறலாம். இந்த வசதிகளை அவர் அறிந்திருக்கவில்லை.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்ல!

இத்தனையும் இதற்குத்தானா?

நான் வங்கியில் பணியாற்றியபோது, ஒரு பெண் தவறாமல் ஆர்.டி கட்டுவார். அதுவும் வருடாவருடம் தொகையை இரண்டு மடங்காக அதிகரித்துக் கட்டுவார். அவரைப் பார்த்து, ‘என்ன ஒரு டிசிப்ளின்’ என்று நான் மலைத்துப்போவேன். ஒருநாள் அந்தப் பெண்ணிடம், `ஆர்.டி மெச்சூர் ஆனதும் பணத்தை எடுத்து என்ன செய்வீங்க?' என்று கேட்டேன். `அதெல்லாம் செலவு செஞ்சுடுவேன்’ என்று கூலாகச் சொன்னார். அடப் பாவமே... இதற்காகவா இவ்வளவு பாடு? டெபாசிட் முதிர்ந்து பணம் கையில் வரும்போது அதில் 50 சதவிகிதத்தையாவது முதலீடு செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றவில்லையே!

தெரிந்ததும் தெரியாததும்

இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், பேங்க் எஃப்.டி-யில் பணத்தைப் போட்டு வைப்பார்கள். அதை முதலீடு என்று சீரியஸாகவே நம்புவார்கள். அடுத்த வருடமே அவசரத் தேவை வந்தால், பணத்தை எடுத்து விடுவார்கள். அப்படி எடுத்தால், அதை  எப்படி முதலீடு என்று சொல்ல முடியும்? குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது அதை எடுக்காமல் இருந்தால்தானே வட்டி குட்டி போட்டு, சின்னத் தொகை, பெரிய தொகையாக மாறும்? அவசரத் தேவைக்குப் பணம் வேண்டுமெனில், அதற்கென குறிப்பிட்ட தொகையைச் சேர்த்து, அதை எஃப்.டி-யில் போட்டு வைத்திருப்பதுதான் சரி. அதை விட்டுவிட்டு நீண்ட காலம் கழித்துத் தேவைப்படும் பணத்தை எஃப்.டி-யில் போட்டு, அதன் மூலம் சொற்ப வட்டியைப் பெற்று, அதை முதலீடு என்று நம்பி, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது.

சேமிப்பின் முதல்படி வங்கிகள். இந்த முதல்படியிலேயே நின்றுவிடாமல் மேலே மேலே உயர வேண்டும். உங்களால் அது நிச்சயம் உயர முடியும். 

ஒரு பயிற்சி: உங்கள் வங்கிக் கணக்கில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் உள்ள பணம் எவ்வளவு? ஆர்.டி-யில் எவ்வளவு? எஃப்.டி-யில் எவ்வளவு? சேமிப்புக் கணக்கிலுள்ள பணத்தைக் குறைத்து, எஃப்.டி-யில் அதிகரிக்க முடியுமா? முயற்சி செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்களேன்!

ப(ய)ணம் தொடரும்!