மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா?

பால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
பால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா?

டீ கிளட்டரிங் - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திருஎழுத்து வடிவம்: சாஹா, ஓவியம் : ரமணன்

னி வீடுகளில் இருப்போருக்கு பால்கனியின் தேவை இருப்பதில்லை. அதனாலேயே அதன் மகத்துவமும் அவர்களால் அறியப்படுவதில்லை. அப்பார்ட்மென்ட்டுகளில் வசிப்போருக்கோ பால்கனி என்பது வரம். நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுப்போன அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு இருக்கும் ஒரே திறந்தவெளி சொர்க்கம் பால்கனிதான்.

ஜன்னலைத் திறந்துவைத்தால் வரக்கூடியதைவிடவும் அதிகமான  வெளிச்சமும் காற்றும் பால்கனியிலிருந்து வரும். அதிலும் பிரெஞ்சு விண்டோஸ் பொருத்தப்பட்ட பால்கனிகள் வீட்டையே ரம்மியமாகக் காட்டக்கூடியவை. அப்பார்ட்மென்ட்வாசிகளுக்கு அரிதினும் அரிதான வெளிச்சத்தையும் காற்றையும் வீட்டுக்குள் வரவழைக்கும் சொர்க்க வாசல் பால்கனி.

எந்த பால்கனியை எதற்குப் பயன்படுத்தலாம்?

சில அப்பார்ட்மென்ட்டுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பால்கனிகள் இருக்கும். அப்படி இருந்தால் எந்த பால்கனியை எதற்குப் பயன்படுத்தலாம் என்கிற திட்டமிடல் தேவை. உதாரணத்துக்கு மேற்குப் பார்த்த பால்கனியை துணிகள் உலரவைக்கப் பயன்படுத்தலாம். அங்கே பகல் முழுவதும் நல்ல வெயில் இருப்பதால், துணிகளை முழுமையாக உலரவைக்க முடியும்.

பால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா?

மினி தோட்டம் அமைக்க விரும்புவோர், கிழக்குப் பார்த்த பால்கனியில் செடிகள் வைக்கலாம். மேற்குப் பார்த்த பால்கனியில் வெயில் அதிகமிருக்கும் என்பதால், செடிகள் வாடிப்போகலாம். கிழக்கு நோக்கிய பால்கனியில் செடிகளுக்குத் தேவையான அளவு, தேவையான நேரத்தில் மட்டுமே வெயில் அடிக்கும்.

வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்து பொழுதுபோக்கவும், வீட்டு உறுப்பினர்கள் ஒன்றுகூடி இளைப்பாறவும் வடக்கு மற்றும் தெற்குப் பார்த்த பால்கனிகள் சிறந்தவை. இந்த இரண்டு திசைகளிலும் நேரடி வெயில் படாது என்பதால், எப்போது வேண்டுமானாலும் அங்கே நேரம் செலவழிக்கலாம்.

அடைசல் தவிர்க்க எளிய வழி!

ஒரு பால்கனிதான் இருக்கிறது என்பவர்களும் கவலைப்பட வேண்டியதில்லை. திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். பால்கனியின் கைப்பிடிச் சுவரின் வெளியே துணிகளை உலரவைக்கக் கொடி கட்டலாம். வெல்டிங் கடைகளில் ‘எல்’ வடிவ க்ளாம்ப்புகள் கிடைக்கும். அவற்றை வாங்கிப் பொருத்திக்கொண்டால் துணி உலரவைக்க முடிவதோடு, பால்கனி அடைசலின்றியும் காட்சியளிக்கும். வெயிலும் மறையாது. வீட்டுக்குள் சூரிய வெளிச்சம் விழும்.

அப்பார்ட்மென்ட்டுகளில் வாழ்வோர், ஒவ்வொரு சதுர அடியையும் முடிந்தளவு முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இருக்கு மிடத்தைப் பயனுள்ளதாகவும் வாழத் தகுந்ததாகவும் வைத்துக்கொள்ள முடியும். வீட்டுக்குள் இடம் குறைவாக இருக்கும்நிலையில் சில பொருள்களை பால்கனியில் வைக்க நினைக்கலாம். உதாரணத்துக்கு ஷூக்கள், ஏணி, பழைய செய்தித்தாள்கள் போன்றவற்றை வைக்கும் கிடங்குப் பகுதியாக பால்கனியைப் பயன்படுத்திக்கொள்ளத் தோன்றும். அது தவறில்லை. ஆனால், ஸ்டோரேஜ் யூனிட் ஒன்று வாங்கி, அது பால்கனியில் உள்ள ஜன்னல் கதவைத் திறந்தால் இடிக்காத மாதிரியான இடத்தில் பொருத்தி அதனுள் பொருள்களை வைக்கும்போது பால்கனி அடைசலின்றி இருக்கும்.

ஏ.சி... உஷார்!

நிறைய வீடுகளில் ஸ்ப்ளிட் ஏ.சி-யின் அவுட்டோர் யூனிட்டை பால்கனியில் வைத்திருப்பதைப் பார்க்கலாம். ஏ.சி-யை சர்வீஸ் செய்யும்போது வசதியாக இருக்கும் என்பது அவர்களது நினைப்பு. ஆனால், அப்படிச் செய்வதன்மூலம் அந்த பால்கனியைப் பயன்படுத்தவே முடியாத மாதிரி செய்கிறார்கள். ஏ.சி இயங்கிக்கொண்டிருக்கும் போது சில நிமிடங் களுக்குக்கூட பால்கனியில் அவர்களால் நிற்க முடியாது. அங்கே அந்தளவுக்கு அனல் அடிக்கும். அவுட்டோர் யூனிட் வெளிவிடுகிற அனல்தான் இதற்குக் காரணம். எனவே, ஏ.சி பொருத்தும்போது அதன் அவுட்டோர் யூனிட்டை பால்கனியில் பொருத்தாமல், வேறு ஏதாவது ஓர் இடத்தில் வைப்பதுதான் நல்லது.

பால்கனி... சொர்க்க வாசலாக விளங்க வேண்டுமா?

பிரைவசி முக்கியம்!

இப்போது நிறைய அடுக்குமாடிகளைக் கொண்ட உயர்ந்த அப்பார்ட்மென்ட்டுகள் வருகின்றன. பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பாரபெட் வால் எனப்படும் கைப்பிடிச் சுவர்களை வைப்பதற்குப் பதில் ‘டஃபண்டு கிளாஸ்’ என்கிற கண்ணாடிகளைப் பொருத்திவிடுகிறார்கள். அதை ஒட்டுமொத்த கட்டடத்தின் வெளியிலிருந்து பார்க்க அழகாக இருக்கும். ஆனால், பால்கனியில் உட்கார்ந்திருக்கும்போது பிரைவசி இல்லாமல் போய்விடும். அந்த மாதிரிதான் வேண்டும் என நினைப்பவர்கள் ‘ஃப்ராஸ்டடு கிளாஸ்’ தோற்றம் தரக்கூடிய ஃபிலிம் கிடைக்கும். அதை வாங்கி ஒட்டிக்கொள்ளலாம். அது உங்களுக்கு பிரைவசியைத் தரும்.

பால்கனி என்பதும் நம் வீட்டின் ஓர் அங்கம்தான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். எப்போதாவது எட்டிப் பார்க்கிற பகுதியாக நினைக்க வேண்டாம். தினமும் வீட்டின் மற்ற அறைகளைப் பெருக்கித் துடைத்துச் சுத்தம்செய்வது போலவே பால்கனியையும் முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும்.

தண்ணீரில் கவனம் செலுத்துங்கள்!

பால்கனியில் தோட்டம் அமைக்க நினைப்போருக்கு ஓர் ஆலோசனை... தொட்டிகளை அப்படியே நேரடியாக பால்கனி தரையில் வைக்காமல், அடியில் ஒரு தட்டு வைக்க வேண்டியது அவசியம். அதிகம் தண்ணீர் தேங்காதபடியும், அதில் கொசு சேராமலும் அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். அப்படித் தட்டு வைக்காமல் நேரடியாக பால்கனியில் வைக்கிறீர்கள் என்றால்,  அந்தத் தண்ணீர் கசிந்து பால்கனியின் தரைக்கு வந்து, டைல்ஸின் இடைவெளி வழியே உள்ளே போய்விடும். அது கீழே உள்ள இரும்புக் கம்பிகளை அரித்துவிடும். ‘பால்கனியில் நின்றுகொண்டிருந்தவர் தவறி விழுந்து மரணம்’ என்கிற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதற்கு முக்கியக் காரணம், இந்த இரும்புக் கம்பிகள் துருப்பிடித்து, கான்க்ரீட் தாங்கும் ஆற்றலை இழப்பதுதான். சிறிய தவறு... ஆனால், உயிரையே பறிக்கும் அளவுக்குப் பயங்கர ஆபத்தாக முடிகிறது. எனவே, பால்கனி பராமரிப்பில் கவனம் தேவை.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்!)