சந்தோஷம், கோபம், துக்கம் எதுவானாலும் சிலருக்கு அப்படியே படபட எனக் கொட்டித்தீர்க்கும் சுபாவம். இன்னும் சிலரோ மனசுக்குள்ளேயே வைத்துப் புழுங்கும் சுபாவம். இது வளர்ந்தவர்களுக்கு மட்டுமான நிலைப்பாடு கிடையாது. குழந்தைகளுக்கும் இது பொருந்தும். சிறுவயது முதலே குழந்தைகளின் மனம்திறந்து பேசும் மனப்பான்மையை வளர்த்தால் அவர்களை மனஅழுத்தம் இன்றி இருக்க செய்யமுடியும். இது பற்றிய கருத்துகளைப் பகிர்கிறார் தன்னம்பிக்கை பேச்சாளர் சியாமளா ரமேஷ் பாபு.
1. குழந்தைகளுக்குத் தங்களுடைய ஒரு வயது முதலே தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அந்த வயதில் குழந்தைகளைச் சுற்றி இருக்கும் பெரியவர்கள் குழந்தைகளிடம் தங்கள் மனப்பான்மையை வெளிப்படுத்தும் சுபாவம், பழகும் தன்மையைப் பொறுத்துத்தான் வெளியுலகுடன் தங்கள் அணுகுமுறையைக் குழந்தைகள் கட்டமைத்துக்கொள்கின்றனர். எனவே, குழந்தைகளிடம் பழகும்போது அவர்களின் வயதுக்குத் தகுந்தாற்போல் பெரியவர்களும் நடந்து கொள்வது அவசியம்.
2. குழந்தைகளின் மனவளர்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில், அதட்டி நம் மனநிலைக்கு ஏற்ப செயல்பட வைக்கும் முறை, அவர்கள் வளர வளர, மனதில் மாறாத் தழும்புகளாக ஆழமாகப்பதியும். "உங்க மிஸ், என்னை எதுக்காக ஸ்கூலுக்கு வரச்சொல்லி இருக்காங்க? உன்ன போய்ட்டு வந்து கவனிச்சுக்கறேன்!' 'இந்த டெஸ்டுல மட்டும் மார்க் குறையட்டும்! அப்புறம் இருக்கு உனக்கு!" இவை போன்ற மிரட்டல்கள் குழந்தைகளின் மனஅழுத்ததுக்குக் காரணமாக அமையும். 'சின்ன விஷயத்துக்கே இப்படிச் சத்தம் போடறவங்க கிட்டே எப்படி, ஏதாவது பெரிய தப்பு செய்துவிட்டால் பயப்படாமல் சொல்கிறது?' என்பதுதான் இன்று பல குழந்தைகளின் கேள்வி. ஆனால், பெரியவர்களின் காதுகளில் விழாத கேள்வி. அதனால்தான் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளைப் பற்றி பெரியவர்களிடம் மனம் திறக்க மறுக்கிறார்கள் குழந்தைகள். குழந்தைகளின் இந்தப் பண்பைப் பெற்றோர்களால் மட்டுமே மாற்ற முடியும். குழந்தைகளைக் கூடுமானவரை அன்பால் நிறைந்த வார்த்தைகளால் இயங்கச்செய்வது அவசியம்.
3. குழந்தைகளிடம் எப்போதும் பாசிட்டிவான விஷயங்களையே பகிருங்கள். அவர்கள் தவறுசெய்யும் சூழலில் கூட அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பொறுமையுடன் எடுத்துச்சொல்லிப் புரிய வையுங்கள். இந்தப் பண்புதான் குழந்தைகளுக்கு 'எந்தச் சூழலிலும் என்னை அப்படியே ஏற்றுக்கொண்டு, அறிவுரை சொல்லி நல்வழிப்படுத்த என் அப்பா அம்மா இருக்காங்க' என்ற தன்னம்பிக்கையை கொடுக்கும். பிரச்னையைப் பகிர்ந்து, தீர்வு காணும் மனப்பான்மையை வளர்க்கும்.
4. சில நேரங்களில், நம் குழந்தைகள் விரும்பும் பொருள்களோ, நபரோ, சூழலோ தவறான தேர்வாக இருக்கக்கூடும். அங்குதான் நமக்கு மலைபோன்ற பொறுமையும் தெளிவும் தேவை. குழப்பத்தில் இருக்கும் நம் பிள்ளைகளுக்கு, நம்முடைய கூச்சலோ, கடும் சொற்களோ உதவாது. அதட்டலுக்குப் பணியவைக்க முயற்சி செய்தால் அடுத்த முறை அவர்கள் விரும்பும் அல்லது வெறுக்கும் ஒன்றைப் பற்றி நம்மிடம் வாயே திறக்க மாட்டார்கள். எனவே, உங்கள் குழந்தையின் வயதுக்கு ஏற்ப அவர்கள் விரும்பும் ஒன்றைச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்திச் செயல்படுங்கள்.
5. எந்த ஒரு செயலை செய்தாலும் அது சரியானது தானா? இதைச் செய்யலாமா என்பதை யோசிக்கும் தன்மையைக் குழந்தைகளுக்கு 2 வயதிலிருந்தே சின்னச் சின்ன விளக்கங்களுடன் புரியவையுங்கள்.
6. குழந்தைகள், பள்ளி முடிந்து வந்தவுடன், 'செல்லம். இன்னைக்கு ஸ்கூலில் என்ன செஞ்சீங்க?" போன்ற அன்பாகப் பேசுங்கள். குழந்தைகளின் கருத்துக்கு, காதுக் கொடுத்துக் கேளுங்கள். குழந்தைகள் தங்களைப் பற்றிப் பகிர்தலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.
7. குழந்தைகள் தங்கள் பிரச்னைகளைப் பகிரும்போது "எனக்குத் தெரியும், நீ இப்படித்தான் செய்வே' என்று இடைமறிக்காமல் அவர்களின் முழுப் பிரச்னையையும் கேளுங்கள் அதன் பின்னரும்கூட, தவறுகள் அவர்களின் மீது இருந்தால், அவர்களை அதட்டாமல் 'அச்சோ.. டெஸ்டுல மார்க் குறைஞ்சு போச்சா? கவலைப்படாதீங்க, அடுத்த டெஸ்டுல ஒரு கை பார்த்துடலாம்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். இந்த வார்த்தைகள்தான் அவர்கள் துளித்துளியாய் நம்மை நோக்கி இழுக்கும்.
8. சில குழந்தைகள் பதின்ம வயது அடையும்போது மற்றவர்களிடம் பேசுவதையே குறைத்துக்கொள்ளுவார்கள். இதனால், குழந்தைகளுக்கு நாளடைவில் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, மனம் திறந்து, பேசுவதன் நன்மையை அவர்களுக்கு உணர்த்துங்கள். இது, அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் சவால்கள், வெற்றி, தோல்வி, அவமானங்கள், புறக்கணிப்புகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் எதிர்கொள்ள உதவும்.
9. பேசத் தயங்கும் குழந்தை எனில், கடிதம் அல்லது நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தைக் குழந்தைகளுக்குக் கொண்டு வாருங்கள். அவற்றின் வழியே அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு உதவ முடியும்.
10. வீடியோ கேம்களுக்கும், மொபைல் போன்களுக்கும் குழந்தைகளை அடிமையாக்கி விடுகின்றன. எனவே, விடுமுறை நாள்களில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அவர்களுக்குத் பிடித்த இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களுடன் பெற்றோர்களும் குழந்தைகளாக மாறி மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம்.