
தமிழ்ப்பிரபா - படம்: ம.அரவிந்த்
“நண்பர்களோடு சேர்ந்து எங்கெங்கயோ டூர் போய்ச் சுற்றிப்பார்க்கிற நாம, நம்ம கிராமத்துல எப்பவும் மூலையில் உக்காந்துட்டிருக்கிற பெரியவங்களை எங்கேயாவது வெளியூருக்குக் கூட்டிட்டுப் போவோம்னு ஒருநாள் யோசிச்சேன்” எனச் சொல்லும் கந்தசாமி, கடந்த எட்டு வருடங்களாக, தன் கிராமத்தில் உள்ள முதியவர்களைச் சுற்றுலா அழைத்துச் சென்றுவருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் பாலக்குறிச்சிதான் கந்தசாமியின் ஊர். சொந்த ஊரைத் தாண்டி வேறு எங்கேயும் சுற்றிப்பார்த்திராத தன் கிராமத்து முதியவர்களை, எங்கேனும் கூட்டிக்கொண்டுபோய்ச் சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்பது கந்தசாமியின் விருப்பம். கையில் குறைவான பணம் மட்டுமே இருந்தது. ``நண்பர்கள் உதவியோடு 2012-லதான் இதை ஆரம்பிச்சோம். ஏதோ பத்துப் பேரு வருவாங்கன்னு நினைச்சா, அறுபது பேர் வந்தாங்க. எல்லோர் வீட்டுலேயும் அனுமதி வாங்கிட்டு, முதன்முறையா திருச்செந்தூருக்குக் கூட்டிட்டுப் போனோம். `நான் பொறந்ததுல இருந்து இப்பதான் மொதமுறையா கடலைப் பார்க்குறேன் தம்பி’னு 70 வயசு பாட்டி அழுததை என்னால மறக்கவே முடியாது” என்று சொல்லும் கந்தசாமியின் கண்களிலும் அத்தனை நெகிழ்ச்சி.

பாலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முதியவர்கள் மட்டும் கலந்துகொண்ட சுற்றுலாவில், அடுத்தடுத்து அக்கம்பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் பங்கேற்க ஆரம்பித்திருக்கிறார்கள். கன்னியாகுமரிக்குச் சுற்றுலா சென்றபோது, குடும்பத் தகராறால் பல ஆண்டுக்காலம் பேசாமல் இருந்த அண்ணனும் தங்கையும் அங்கே பேசிக் கண்ணீர் சிந்திய காட்சியைப்போல் நெகிழ்வான பல தருணங்களை இவர்களின் சுற்றுலா சாத்தியப்படுத்தியுள்ளது.
இவர்கள் அழைத்துக்கொண்டு போகும் முதியவர்கள் ஆதரவற்றவர்கள் அல்லர், குடும்பமாக வசிப்பவர்கள்தாம். ஆனால், மனரீதியாகத் தனிமைப்படுத்தப்படுகிறவர்கள்; `என்றாவது ஒருநாள் வெளியுலகத்தைப் பார்ப்போமா!’ என ஏங்கித் தவிக்கிறவர்கள். அவர்களோடுதான் பயணிக்கிறார் கந்தசாமி.
மதுரை, கன்னியாகுமரி, வேலூர் (பொற்கோயில்), திருவண்ணாமலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் எனப் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்று வந்திருக்கிறார். இந்த வருடம் நாகூர் தர்கா, வேளாங்கன்னி, கும்பகோணம் கோயில்கள் என வரும் ஆகஸ்ட் மாதம் அழைத்துச்செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்.
கந்தசாமி பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர். 32 வயதுடைய கந்தசாமி, தற்போது சிறிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துகொண்டே சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கிறார். இதற்காக மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட ஒரு தொகையைச் சேமித்துவைக்கிறார். அவரின் நண்பர்கள் சிலர் உதவிகள் செய்ய, வருடம் ஓரிருமுறை இந்தச் சுற்றுலா சாத்தியமாகிறது.
``நான் பத்தாவது படிக்கும்போது, எங்க அம்மா திடீர்னு உடம்பு சரியில்லாம இறந்துட்டாங்க. நான் சம்பாதிச்சு எங்கம்மாவை நிறைய இடங்களுக்குக் கூட்டிட்டுப்போறன்னு சின்ன வயசுல சொல்லிட்டே இருப்பேன். ஆனா, அது முடியாமப்போச்சு. இப்ப அவங்க இதையெல்லாம் பார்த்துட்டு என்னை வாழ்த்திட்டுதானே இருப்பாங்க. அதுபோதும்ணே” எனப் புன்னகைக்கிறார் கந்தசாமி.