மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்!

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்படம்: ப.சரவணகுமார்

`இது ஒரு நிலாக்காலம்; இரவுகள் கனாக் காணும்' என்று பாடியவாறே மொட்டை மாடிக்குச் சென்ற நான், பக்கத்து வீட்டு மாடியில் அரை இருளில் அமர்ந்திருந்த உருவங்களைக் கண்டு திடுக்கிட்டேன். பேச்சுக் குரல்களும் சிரிப்புகளும் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள்தாம் என்று காட்டின. கூட்டாஞ்சோறின் மணம் மிதந்து வந்தது.

மறுநாள் சிந்துவைப் பார்த்தபோது, “என்ன, நேத்து ராத்திரி நிலாச் சோறு பலமா?” என்று கேட்டேன். அவள், “30-ம் தேதி அல்லவா? வழக்கமான பட்ஜெட் கூட்டம்தான்” என்றாள். மொட்டை மாடியில் பட்ஜெட் கூட்டமா?

“வரும் மாதம் ஆதிக்கு பர்த்டே; இனியாவுக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்; என் நாத்தனார் குழந்தைக்குக் காது குத்து விழா. அதனால் வழக்கமான வரவு செலவுக் கணக்குகளோடு, இந்தச் செலவுகளுக்கும் பட்ஜெட் போட்டோம். ஆதிக்கு ரூ.1,000; இனியாவுக்கு ரூ.700; நாத்தனார் குழந்தைக்கு ரூ.4,000. பட்ஜெட்டைவிட குறைவாகச் செலவு செய்பவர்களுக்கு ஒரு சின்ன கிஃப்ட். அதற்கென தனியாக ரூ.200 ஒதுக்கியாச்சு” என்றாள். பட்ஜெட் போட்டுச் செலவு செய்ய வேண்டும் என்கிற விதையைக் குழந்தைகள் மனதில் எவ்வளவு அழகாக விதைக்கிறார்கள் என்பதைப் பார்த்து  வியந்துபோனேன்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்!

பட்ஜெட்டும் சிக்கனமும்

டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவி, `எனக்கு மாதம் ரூ.10 ஆயிரம் பாக்கெட் மணி தேவை' என்று கூறி எல்லோரையும் அதிர வைத்தாள். பக்கத்தில் இருந்த அவள் தாயாரின் முகத்தில் வேதனைக் கோடுகள். குடும்ப வருமானம், நிதி நிலைமை, வருங்காலத் தேவைகள் என்று எதையும் அறியாமல் பல ஆயிரங்களில் விலையுயர்ந்த செல்போன், பைக் என்று கிளம்பிவிடுகிறார்கள் இன்றைய இளைஞர்கள். ஆனால், இனியாவும் ஆதியும் கண்டிப்பாக இப்படி மண் குதிரைகளை நாடிப் போக மாட்டார்கள். அவர்கள் வீட்டு பட்ஜெட் கூட்டங்கள் அவர்களுக்குள் சிக்கனத்தை வளர்க்கும்.

பிடிக்காத வார்த்தை

பட்ஜெட் என்ற வார்த்தையே சிலருக்குப் பிடிப்பதில்லை. இன்னும் சிலர் சீரியஸாக பட்ஜெட் போடுவார்கள். ஆனால், அதைக் கடைப் பிடிப்பதில்லை. `வருமானம், செலவைவிட மிக அதிகமாக இருக்கும்போது நான் ஏன் பட்ஜெட் போட வேண்டும்' என்று சிலர் கேட்பார்கள். ஹெல்மெட் போட்டிருக்கிறோமே என்று நினைத்து நம்மில் யாரும் 100 கி.மீ வேகத்தில் வண்டி ஓட்டுவதில்லையே... அது போலத்தான் இதுவும்.

கைகொடுக்கும் ஆப்ஸ்

‘செய்கிற செலவுகளை நோட்டில் எழுதிவைக்க மறந்துவிடுகிறதே’ என்று அலுத்துக்கொள்பவர்கள் பலர். நோட்டைத் தூக்கிப் போடுங்கள். உங்கள் செலவுகளை செல்போனில் அழகாகப் பதிவு செய்யலாம். மாதக் கடைசியில் எதில் அதிகம் செலவாகியிருக்கிறது என்று எளிதில் கண்டறியலாம்.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்!

ஆசையா, தேவையா?

உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட், `உங்களுக்குத் தேவைப்படாத பொருள்களை எல்லாம் வாங்கினால், உங்களுக்குத் தேவையான பொருளைக்கூட விற்க நேரிடும்' என்கிறார். எத்தனை அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் இவை.

மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின்,  செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட்... ஒருகாலத்தில் ஆசைகளாக இருந்தவை எல்லாம் இன்று தேவைகளாகிவிட்டன. இவற்றையெல்லாம் வாங்கிப் பயன்படுத்து வதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால்,  கடன் வாங்கி, அவசியமில்லாத பொருள்களை வாங்குவதுதான் தவறு. சிக்கனமாக இருந்து சேமிக்கும் தொகையைச் சரியாக முதலீடு செய்தால், உங்களுக்கு ஒருநாளும் ஒரு கஷ்டமும் வராது.

ஒரு பயிற்சி: உங்கள் செலவினங்களில் நீங்கள் குறைக்க விரும்புகிற மூன்று செலவினங்கள் எவை? அவற்றில் ஒரு செலவை வரும் மாதத்தில் 10% குறைக்க முடியுமா?

ப(ய)ணம் தொடரும்!