மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

கெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு
பிரீமியம் ஸ்டோரி
News
கெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

டீ கிளட்டரிங்எழுத்து வடிவம்: சாஹா, ஓவியங்கள் : ரமணன்

விருந்தினர் வருகை என்பது உவகைக்குரிய விஷயம். விருந்தோம்பல் என்பது பேருவுவகை தரும் விஷயம். ஆனாலும், அப்பார்ட்மென்ட்டுகளில் வசிப்போருக்கு விருந்தினர் வருகை மனதளவில் மகிழ்ச்சியைத் தந்தாலும் தீப்பெட்டிகளை அடுக்கினாற்போன்ற இருப்பிடத்தில் அவர்களுக்கும் இடம் ஒதுக்குவதென்பது தர்மசங்கடமானது. எனினும், கொஞ்சம் திட்டமிடல் இருந்தால் இதைச் சமாளிக்கலாம். நகர்ப் புறங்களில் வசிப்பவர்களுக்கு, வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கென ஓர் அறையை ஒதுக்குவது என்பது ஆடம்பரமானதாகத் தோன்றலாம். ஆனால், அடிக்கடி விருந்தினர் வருகை தரும் வீடுகளில் அவர்களுக்கென ஓரிடத்தை ஒதுக்குவதைப் பற்றி நிச்சயம் யோசிக்க வேண்டும்.

சில வீடுகளில் உபரி அறை ஒன்று  இருக்கும். அந்த அறையைக் குறிப்பிட்ட உபயோகத்துக்குப் பயன்படுத்துவது என்றில்லாமல், வேண்டாத, தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருப்பார்கள்.  வீட்டிலுள்ளோருக்கான தேவை போக, அப்படி உபரியாக ஓர் அறை இருக்கிறது என்றால் அடிக்கடி விருந்தினர் வருகை நிகழும் வீடு என்கிறபட்சத்தில் அந்த அறையை விருந்தினர்களுக்கானதாக மாற்றி வைக்கலாம்.

சிலர் தம் வீடுகளில் பெரியவர்களுக்கான அறை, குழந்தைகளுக்கான அறை போக, ஓர் அறையை விருந்தினர்களுக்கானதாக ஒதுக்கியிருப்பார்கள். நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை அது ஆடம்பரத்தின் அடையாளம். வருடத்தின் 365 நாள்களில் விருந்தினர் வருகை என்பது அதிகபட்சம் 10 - 15 நாள்கள்தாம் இருக்கும். அந்த நிலையில் அவர்களுக்கென ஓர் அறையை ஒதுக்குவது அவசியம்தானா என்கிற பார்வையும் பலருக்கு உண்டு. மீதி நாள்களில் அந்த அறை சும்மாதானே இருக்கப் போகிறது என்றும் நினைப்பார்கள்.

கெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

ஆகவே, அப்படியோர் அறை இருக்கும்பட்சத்தில் அதை வேறு உபயோகத்துடன் சேர்த்துப் பயன்படும்படித் திட்டமிட்டுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு வீட்டிலுள்ள யாராவது கைவினை கலைப் பொருள்கள் செய்கிறவர் என்றால், அதற்கான அறையாகவோ, குழந்தைகளுக்கான பாட்டு, டான்ஸ், இசைக்கருவிகள் போன்றவற்றுக்கான பயிற்சி அறையாகவோ அதை  உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் வைத்துக்கொள்வது, டி.வி பார்ப்பது போன்றவற்றை அந்த அறைக்கு மாற்றிக்கொள்ளலாம்.

டி.வி பார்ப்பதிலேயே வாழ்க்கையின் பெரும்பான்மை நேரம் வீணாகிறது என்றொரு குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. லிவிங் ரூமில் டி.வி வைப்பது இதற்கு முக்கியமான காரணம். எனவே, கெஸ்ட் ரூமுக்கு டி.வி-யை மாற்றலாம். டி.வி பார்ப்பதை ஒரு வேலையாகச் செய்கிறபோது அதற்காகச் செலவழிக்கிற நேரம் குறைந்துவிடும். விருந்தினர் டி.வி பார்க்க விரும்பினாலும் வசதியாக இருக்கும். ஆக, விருந்தினர் அறை கம் டி.வி அறை என்பது நல்ல காம்பினேஷன்.

விருந்தினர் நம் வீட்டுக்கு வரும்போது அவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய விஷயங்கள் குறைவுதான். அவர்கள் தூங்க நல்ல படுக்கை, பொருள்களை வைத்துக்கொள்ள இடம்... இவை இரண்டும் அவசியம். அதனால்  விருந்தினர் அறைக்காக நாம் வாங்க நினைக்கிற படுக்கையை முழுமையான படுக்கையாக வாங்காமல், ‘சோபா கம் பெட்’ மாடலில் `டூ இன் ஒன்’னாக வாங்கலாம். தூங்கும்போது  படுக்கையாகப் பயன்படும்; மற்ற நேரத்தில் சோபாவாக இருப்பதால் இடத்தை அடைக்காது. விருந்தினர் அறையில் கப்போர்டு ஒன்றும் இருக்கலாம். அது எப்போதும் காலியாகவே இருக்கட்டும். விருந்தினரின் உடைமைகளை அங்கே வைத்துக்கொள்வார்கள். வீடு முழுக்க அவர்களின் பொருள்கள் இறைந்து கிடப்பது போன்ற உணர்வும் தவிர்க்கப்படும்.

கெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி? - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு

விருந்தினருக்குக் கொடுத்தது போக கப்போர்டில் மீதமுள்ள இடத்தை நமக்கு அடிக்கடி தேவைப்படாத பொருள்களை வைக்கப் பயன்படுத்தலாம். தினசரித் தேவைக்கான பொருள்களை வைத்தால் விருந்தினர் வரும்போது மொத்தமாக காலி செய்துதர வேண்டியிருக்கும் அல்லது அடிக்கடி அந்த அறைக்குள் போய் அவர்களைத் தொந்தரவு செய்வது போல இருக்கும். உதாரணத்துக்கு எக்ஸ்ட்ரா பெட்ஷீட், தலையணை, திரைச்சீலை போன்றவற்றை அங்கே வைக்கலாம்.

விருந்தினர் வருகை குறைவுதான். ஆனால், பெற்றோர் அடிக்கடி வருவார்கள்; அப்படி வரும்போது அதிக நாள்கள் எங்களுடன் இருப்பார்கள் என்கிறவர்கள் அந்த உபரி அறையை அதற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம். வயதானவர்களுக்குத் தாழ்வான படுக்கையிலிருந்து எழுந்திருப்பது சிரமமாக இருக்கும். அவர்களுக்கு நாம் ஏற்கெனவே பார்த்த சோபா கம் பெட்  சரியானதாக இருக்காது. அம்மா அப்பா என இருவரும் இருப்பார்கள் என்கிற நிலையில் டபுள் பெட் போடுவதற்குப் பதிலாக, தனித்தனியே இரண்டு சிங்கிள் பெட் வாங்கி வைக்கலாம். படுக்கையிலிருந்து இறங்கவும் ஏறவும் வசதியாக இருக்கும்.

முதியோர் கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வது அடிக்கடி நடக்கும். எனவே, அவர்களுக்குக் கால்களில் இடறாதபடி அந்த அறையில் பொருள்களை அடைக்காம லிருப்பது சிறப்பு.

(குப்பைகள் அகற்றிப் பேசுவோம்)