மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!
பிரீமியம் ஸ்டோரி
News
கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!

சுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்

திர்வீட்டின்முன் கூட்டம். விடியற் காலையில் அந்த வீட்டில் கருநாகம் ஒன்று நுழைந்ததில், அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது. என் மாமனாருக்கு காபி தந்தபடி, அந்தக் கலாட்டாவை அவரிடம் விவரித்தேன். அதைக் கேட்ட அவர் லேசாகப் புன்னகைத்தார். “ஒரு பாம்புக்கா இத்தனை கலாட்டா? ஆணும் பெண்ணும் ஆளுக்கொரு பாம்பைக் கட்டிக்கொண்டு அலைகிறீர்களே?” என்றார். இவர் என்ன சொல்ல வருகிறார்? நிதானமாக காபி அருந்தி முடித்தவர், “புரியலையா? கிரெடிட் கார்டைத்தான் சொல்றேன்” என்று சொல்லிவிட்டு, எழுந்து போய்விட்டார்.

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!

ஆழம் தெரியாமல்...

உண்மைதான்; பாம்புக்கடியால் பாதிக்கப் பட்டவர்களைவிட, கிரெடிட் கார்டினால்  பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். நாம் வேலைக்குச் சேர்ந்த உடனேயே கிரெடிட் கார்டு கம்பெனிகள் ஏதேனும் ஒரு கார்டை நம் தலையில் கட்டிவிடுகின்றன. நாமும் அது பாம்பு என்று தெரியாமல் விளையாடத் தொடங்கிவிடுகிறோம்.

வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.5% என்றால், 8 சதவிகிதத்துக்குக் கடன் கிடைக்குமா என்று தேடும் நாம், கிரெடிட் கார்டு வட்டி விகிதம் 40 சதவிகிதத்துக்கும் அதிகம் என்றாலும்கூட, கண்டுகொள்வதில்லை. கார்டு கம்பெனிகளும் அதை நாசுக்காக 3.35% மாத வட்டி அல்லது சர்வீஸ் சார்ஜ் என்றே குறிப்பிடுகின்றன. நாம் தப்பித் தவறி கிரெடிட் கார்டில் பணம் எடுத்துவிட்டால், அடுத்த நிமிடத்தில் வட்டி இன்னும் எகிறத் தொடங்கிவிடும். அதோடு, பணம் கையாளும் கட்டணம் வேறு.

ஆட்டுவித்தால் யாரொருவர்!

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!ஒரு ஸ்வீட் வாய்ஸ் மொபைல்பேசியில் வந்து, `இனி உங்கள் லிமிட் ரூ.1.5 லட்சம்!' என்று ஏதோ லாட்டரி பரிசு தருவது போல, இன்பத் தேனை ஊற்றும். ரூ.1.5 லட்சத்துக்கு என்னவெல்லாம் வாங்கலாம் என்றுதான் எண்ணம் ஓடுமே தவிர, அந்த ரூ.1.5 லட்சத்தை எப்படி திருப்பிக் கட்டப்போகிறோம் என்கிற கவலை அப்போது தோன்றாது. நம் வருங்கால வரவுகளை மொத்தமாக அடகு வைக்கிறோம் என்பது தெரியாமல், பாம்பு ஆடும் அழகை ரசிக்கும் குழந்தையாவோம்.

நெனச்சது ஒண்ணு...

கிரெடிட் கார்டின் முக்கியக் கவர்ச்சி அம்சமே `ஃப்ரீ கிரெடிட் பீரியட்' எனப்படும் `வட்டியில்லா காலகட்டம்'தான். ஆனால், ரூ.3000-த்துக்கு மேல் ஏதேனும் வாங்கிவிட்டால், `மொத்தமாகக் கட்ட வேண்டாம்; தவணை முறையில் கட்டுங்களேன்!' என்று ஒரு குறுஞ்செய்தி கண் சிமிட்டும். நாம் தவணைமுறைத் தேர்வைப் பதிவு செய்தவுடன் இலவசக் காலகட்டம் ரத்தாகிவிடும்.

இன்னொரு விதத்திலும், கிரெடிட் கார்டு நமது செலவுகளை அதிகரிக்கிறது. ஒரு டன் ஏ.சி-க்குப் பதில் ஒன்றரை டன் ஏ.சி  வாங்கியது, 24 இன்ச் டி.வி-க்குப் பதில் 49 இன்ச் டி.வி வாங்கியது, ஒரு சுடிதார் வாங்கப்போய் மூன்றாக வாங்கிவந்தது - எல்லாமே கிரெடிட் கார்டு தந்த மயக்கம்தானே?

பளபள கவர்ச்சி

`என்ன சொல்கிறீர்கள்? கிரெடிட் கார்டில் போனஸ், கேஷ்பேக் ஆஃபர்ஸ், நிறைய பொருள்களுக்குத் தள்ளுபடி, ஃப்ரீ பாயின்ட்ஸ் என்று எத்தனை வசதிகள் உள்ளன. இதையெல்லாம் வேண்டாம் என்று மறுக்கச் சொல்கிறீர்களா' என நீங்கள் கேட்கலாம். 

கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு!


கிரெடிட் கார்டு வேண்டவே வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை. மனக்கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில், நாம் கிரெடிட் கார்டைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். கொஞ்சம் லாபமும் பார்க்கலாம். அதற்கான ஐந்து விதிகளைக் கடைப் பிடிக்க முடிந்தால், கிரெடிட் கார்டு பாம்புகூட நீங்கள் சொன்னபடி ஆடும்!

ஐந்து விதிகள்


1 பணம் கட்டவேண்டிய தேதிக்குள் முழுப் பணத்தையும் கட்டிவிடுங்கள்; தவணை முறையைத் தேர்வு செய்யாதீர்கள். கிரெடிட் கார்டில் பணம் எடுக்காதீர்கள். 

2 ஆன்லைனுக்கு ஒன்று, லோக்கல் பர்ச்சேஸுக்கு ஒன்று என்று பல கார்டுகள் வைத்திருக்காதீர்கள். ஒவ்வொன்றுக்கும் கட்டணம் என்பதோடு, ஒவ்வொன்றின் பணம் கட்டும் தேதியும் வேறு வேறாகிக் குழப்பும். அதிகபட்சம் துணை (add-on) கார்டு  மட்டும் வைத்துக்
கொள்ளுங்கள். அதற்குக் கட்டணம் கிடையாது.

3 ரிவார்டு பாயின்ட்ஸுக்குப் பொருள்கள் வாங்காமல், நம் கடனை ஈடுசெய்யும் விதத்தில் பணமாக கிரெடிட் கொடுக்கும்படி கேட்கலாம். நம் கார்டைப் பொறுத்து ஒரு பாயின்ட்டுக்கு  35 பைசா  முதல் ஒரு ரூபாய் வரை வரவு வைக்கப்படும்.

4 கஸ்டமர் சர்வீஸுக்கு ஒரு போன் கால்  செய்வதன்மூலம் உங்கள் லிமிட்டை நீங்களே நிர்ணயம் செய்யுங்கள். வரம்பு மீறாமல் செலவுசெய்ய இது உதவும்.

5 உங்கள் மாத வருமானத்தில் 50 சதவிகிதத்துக்கு அதிகமாக மொத்த கிரெடிட் லிமிட் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா!

ப(ய)ணம் தொடரும்