மற்ற எபிசோடுகள்
Published:Updated:

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’
பிரீமியம் ஸ்டோரி
News
உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

க்கத்து வீட்டுக் குழந்தை எந்தப் பள்ளியில் படிக்கிறதோ, அதைவிட உயர்ந்த பள்ளியில் தன் மகன் படிக்க வேண்டும் என்கிற ஆசை தாய்க்கு. ப்ளஸ் ஒன் வகுப்பில் அவன் என்ன படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை, தன் மகனைத் தவிர மற்ற அனைவரிடமும் தந்தை விசாரித்திருப்பார். ‘இப்போதைக்கு என்ன வேலை ட்ரெண்டிங்கில் உள்ளது; எதைப் படித்தால் தன் மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்றெல்லாம் கவலைகொள்ளும் பெற்றோர், அந்தப் படிப்பு மகனுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஏன் யோசிப்பதில்லை? அவன் என்ன படிக்க வேண்டும் என்று கவனம் கொள்ளவேண்டிய வயது எது? விளக்கம் அளிக்கிறார் கல்வியாளர் ஹெலிக்ஸ் செந்தில்குமார்.

திறனைக் கண்டறியுங்கள்!

``ஒரு குழந்தை 14-வது வயதுக்குள் தனது வளர்ச்சிக்கான துறை எது என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. குறிப்பாக, ஆண் குழந்தைகள் இந்த வயதுக்குள்ளாக, வகுப்பறைப் பாடத்திட்டம் தவிர, தொழில்சார்ந்த திறன் மேம்பாட்டுக்கான விஷயங்களைத் தெரிந்துகொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். ஐந்தாம் வகுப்புக்குள் அவர்கள் விரும்பும் தனித்திறனை வெளிப்படுத்த வாய்ப்பளிக்க வேண்டும். கிறுக்கினால் திட்டாமல், வண்ணங்கள் வாங்கிக் கொடுக்கலாம். விளையாட்டு உபகரணங்களை எப்படித் தேர்வு செய்து விளையாடுகிறார்கள் என்பதன் அடிப்படையிலும் அவர்களின் திறனைக் கண்டறிய முடியும்.

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

ஆண் குழந்தைகளுக்குத் திறன் அடிப்படையிலான புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நாம் சாப்பிடும் பிரெட்டை எடுத்துக்கொண்டால்கூட, அதனுள் வேதியியல், கணிதம், ஆங்கிலம் என அத்தனை பாடங்களும் அடங்கியுள்ளன. வழக்கமான ஒரு விஷயத்தில் வித்தியாசமான தேடலை உருவாக்குங்கள். அவர்களுக்கு நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை புது விஷயங்களை அறிமுகப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஆர்வம் தூண்டப்படும். எட்டாம் வகுப்பில் அறிவியல்பூர்வமான சோதனைகள் மூலம் குழந்தையின் விருப்பத்தைக் கண்டறியலாம். பின்னர் தங்களுக்கு விருப்பம் உள்ள துறையில் தங்களது தேடலின் வழியாக அவர்கள் வளர ஆரம்பிப்பார்கள். ஆண் குழந்தைக்கு இதைத்தான் அறிமுகப்படுத்த வேண்டும், இதை விலக்க வேண்டும் என எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்ள வேண்டாம்.

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’குழந்தை சிறுவனாக இருக்கும்போது, ‘நீ என்னவாகப் போகிறாய்?’ என்ற கேள்வியே இனிமேல் கேட்கக் கூடாது. ‘நீ எதற்கான தீர்வைக் கண்டுபிடிக்கப் போகிறாய்?’ என்று கேட்கலாம். இப்போதைய காலகட்டத்தில் பிரச்னைக்கான தீர்வு கண்டறிதலே படிப்பாகவும் தொழிலாகவும் தொடர்கிறது. இந்தக் கேள்வியை உள்வாங்கும் குழந்தை, தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களைத் தொடர்ந்து கவனிக்கும். அவற்றுக்கு எப்படித் தீர்வு கண்டறியலாம் என்று சிந்திக்கும். இதன் வழியாகக் குழந்தைக்கும் சமுதாயத்துக்கும் தேவையான ஒரு விஷயத்தை உருவாக்கும் முயற்சி தூண்டப்படும். குழந்தையின் திறமை, விருப்பம், சமூகத்தின் தேவை மூன்றும் இதன் வழியாக இணைக்கப்படுகின்றன.

மகனைச் சமையலறைக்குள் விடுங்கள்!

சமையல் கலை அன்றாட மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால், சமையலில் ஆண்களும், ஆண் குழந்தைகளும் எந்தளவுக்குப் பங்கேற்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஆரோக்கியம், புதுமை எண்ணங்கள் எல்லாம் சேர்ந்து  சமையலைக் காலந்தோறும் மாற்றத்துக்கு உட்படுத்துகிறது. இதுபோன்ற முயற்சிகளில் இறங்கும் ஆண் குழந்தைகளுக்கு அதுவே பிற்காலத்தில் பிசினஸாக மாறும் வாய்ப்பிருக்கிறது. சுவையில் ஆர்வம் காட்டும் குழந்தை ஒரு டயட்டீஷியன், நியூட்ரீஷியன் ஆகவும் வாய்ப்புகள் உள்ளன. ஆண் குழந்தைகள் வீட்டின் சமையலறையில் தயக்கமின்றி நுழையவும், சமைக்கவும் பழக்கப்படுத்துங்கள். சமையலறையில் இருந்து ஓர் ஆராய்ச்சியாளன்கூட உருவாகலாம். தற்போது ‘கலினரி ஸ்டடீஸ்’ என்று ஒரு பாடத்திட்டம் வந்துள்ளது. எந்த வகையான பாத்திரத்தில் சமைத்தால் உணவின் சுவை எப்படி மாறுகிறது என்பது போன்ற விஷயங்களைப்  பற்றி முழுமை யாகப் படிக்கும் நான்காண்டு பாடத்திட்டமாக இது உள்ளது. இதுபோல நாளை எதுவும் பாடத்திட்டமாகவோ, தொழில் அல்லது வேலைவாய்ப்பாகவோ மாறலாம்.

படிப்பை மகனே தேர்வு செய்யட்டும்!

குழந்தைகள் பள்ளிக் காலத்திலேயே ஆன்லைன் வழியாகக் கற்கின்றனர். அதனால் புதிய துறைகள் பற்றிய அறிமுகங்கள், சாதனை யாளர்களுடன் உரையாடல்  என அவர்கள்  அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைப் பார்க்கவும், கேட்கவும், சந்திக்கவும் பெற்றோர் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியருக்கான ஆலோசனைக் கூட்டங்களில் இதுபோன்ற விஷயங்களை வலியுறுத்தலாம். தனக்கான உயர்கல்விப் படிப்பு இதுதான் என, மகனே தேர்வு செய்யட்டுமே!

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

அடுத்த நூற்றாண்டில் நிறைய தொழில்கள் காணாமல் போய் புதிய தொழில்கள் வர உள்ளன. ஓர் `ஆப்' வந்தால், இன்று வணிகம் செய்யும் முறையே மாறிவிடுகிறது. இது அவர்களின் வாழ்க்கை முறையிலும் நேரத்தை மிச்சப்படுத்தித் தருகிறது. யாரோ ஒருவர் ஒரு பிரச்னைக்கான தீர்வு கண்டறிய முயலும்போதுதான் அதற்கான ஆப் நமக்குக் கிடைக்கிறது. அது ஒட்டுமொத்த மனிதக்குலத்துக்கே உதவுகிறது.  பல நபர்களை இணைத்து இதுபோன்ற புதிய தொழில்களை மேம்படுத்தவும், தொடர்புகொள்ளவும் முடியும். எனவே, உங்கள் மகனுக்காகக் காத்திருக்கும் துறை இதுவரை நீங்கள் கற்பனை செய்திராத ஒன்றாகக்கூட இருக்கலாம்! 

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

உங்கள் வீட்டின் ஒரு சுவரைப் பேசும் சுவர் என அறிவித்துவிடுங்கள். `அது என்ன பேசும்' என உங்கள் குழந்தைக்கு ஒரு புராஜெக்ட் கொடுங்கள். அதில் கிறுக்கல், வண்ணங்கள், புகைப்படங்கள், கிராஃப்ட் எனக் குழந்தை தன் விருப்பத்தை வெளிப்படுத்தலாம். இதன் மூலம் அந்தக் குழந்தையின் ஆழ்மனம் எப்படி இயங்குகிறது, எதை விரும்புகிறது என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். அதை மேம்படுத்தும், மெருகேற்றும் பொருள்களை வாங்கித் தர வேண்டும். அவன் அவற்றைப் பயன்படுத்தலாம்; சிலவற்றை உடைக்கலாம். அந்தக் குழந்தை தனது எண்ணப்படி சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். ‘நான் குழந்தைக்கு எவ்வளவு செலவு செய்கிறேன்...’ எனப் பணமாகவே எல்லாவற்றையும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. குழந்தையின் க்ரியேட்டிவிட்டிக்கான கண் திறப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒருநாள் அவனும் சொல்லலாம் ‘யுரேகா!’

உலகளவில் ஒரு சில அதிர்வுகள் மிகப் பெரிய மாற்றத்துக்குக் காரணமாகின்றன. குறிப்பாக, ஆண்ட்ராய்டு மொபைல்   அறிமுகமான அதே காலகட்டத்தில் வந்த பல தொழில்கள் இன்று காணாமல் போய்விட்டன. அடுத்தடுத்த  மாற்றங்கள் வரும்போது என்னென்ன தொழில்கள் காணாமல் போகும் என்ற ஆய்வுகள் நடந்துவருகின்றன. இன்னொரு பக்கம் புதிய தொழில்களுக்கான வாய்ப்புகளும் உருவாகின்றன. இதன் அடிப்படையில் எதிர்காலத்தில் புதிய படிப்புகள் உருவாகும். பெற்றோர் தங்களது மனதை இதற்கு ஏற்ப பரந்த சிந்தனைக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். வாய்ப்புகளும் அனுபவங்களும் உங்களது குழந்தையை எதிர்காலத்துக்குத் தயார்படுத்தும். டாக்டர், இன்ஜினீயர், மென்பொறியாளர் என அவனைக் குறுகிய கற்பனை வட்டத் துக்குள் கட்டிப்போட வேண்டாம்!’’

உங்கள் மகனும் ஒருநாள் சொல்வான் ‘யுரேகா!’

சமையல் டிப்ஸ்...

யிர் சேமியா செய்ய, சேமியாவைச் வெந்நீரில் முக்கால் பதத்துக்கு வேகவிடவும். பிறகு, தேவையான அளவு பால் சேர்த்து ஒன்றாகக் கலந்ததும் இறக்கவும். தயிரில் உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இறக்கிய சேமியா கலவையில் பொடியாக நறுக்கிய இஞ்சி, தயிர் சேர்த்து கலந்துவிட்டால் தயிர் சேமியா ரெடி.