தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

முகங்கள்

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்றவர், அமுதா ஐ.ஏ.எஸ். தன் சிவில் சர்வீஸ் பணியின் 25-வது ஆண்டில், தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையராகப் பணியாற்றிவருபவர், அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி... மூவரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை விரைவாகவும் பொறுப்பாகவும் செய்தவர். சிவில் சர்வீஸ் துறைக்கு வர நினைப்பவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணம். சென்னை, டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள அலுவலகத்தில் அவரைச் சந்தித்த மணித்துளிகள், பூஸ்ட் அப்!

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

இளமைப் பருவமும் ஐ.ஏ.எஸ் ஆர்வமும்...

நான் பிறந்து, வளர்ந்தது மதுரை. பெற்றோர் மத்திய அரசு ஊழியர்கள். எனக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை. என் தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அவர் மறைவுக்குப்பிறகு பாட்டிக்குக் கிடைத்த ஓய்வூதியத்தைப் பெற கலெக்டர் ஆபீஸுக்கு நானும் பாட்டியுடன் போவேன். அங்கே மக்கள் அனைவரும் ஒருவருக்கு வணக்கம் சொல்றதைப் பார்த்து, ‘இவர் யார்?’னு பாட்டிகிட்ட கேட்டேன். ‘இவர்தான் கலெக்டர். ராஜா மாதிரி, மக்களுக்கு நல்லது பண்ணுறது இவர் வேலை’னு அந்த 13 வயசுல எனக்குப் புரியும்படி பாட்டி சொன்னார். ‘நாமும் கலெக்டராகி, மக்களுக்கு நல்லது பண்ணணும்’னு அப்போதான் எனக்குள்ள முதல் ஸ்பார்க் ஏற்பட்டுச்சு. பள்ளிக் காலங்களில், ‘பெண்கள் கபடி விளையாடினா என்ன?’னு, கபடி ப்ளேயர் ஆனேன். தொடர்ந்து மூணு வருஷங்கள் அதில் தங்கப்பதக்கம் வாங்கினேன். ஒருமுறை மலையேறும் பயிற்சிக்காக இமயமலைக்குப் போனப்போ, ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றவங்களும் அங்க மலையேறும் பயிற்சிக்காக வந்திருந் தாங்க. அப்போ அவங்ககிட்ட பேசக் கிடைச்ச வாய்ப்புதான் ரெண்டாவது ஸ்பார்க்.

ஐ.பி.எஸ் டு ஐ.ஏ.எஸ்

பள்ளிப்படிப்பில் நான் ஆவரேஜ் மாணவிதான். மதுரை, வேளாண் கல்லூரியில் பி.எஸ்ஸி, அக்ரியில் சேர்ந்தேன். எல்லாப் பாடங்களிலும் தங்கப்பதக்கத்துடன் படிப்பை முடிச்சேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். முதல் முயற்சியிலேயே வெற்றியுடன், ஐ.பி.எஸ் போஸ்ட்டிங் கிடைச்சது. ‘அடுத்த முயற்சியில் உன்னால நிச்சயம் ஐ.ஏ.எஸ் ஆக முடியும்; அப்போதான் பல துறைகளில் பலதரப்பட்ட மக்களுக்குச் சேவை செய்ய முடியும்’னு அப்பா ஊக்கப்படுத்தினார். இரண்டாவது முயற்சியில், 1994-ம் ஆண்டு தமிழக அளவில் முதலிடம் பெற்று ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்வானேன். இதற்கிடையில் என்னைப் பார்த்து என் அண்ணனுக்கும் சிவில் சர்வீஸ் ஆர்வம்வந்து, எனக்கு முன்பாகவே எக்ஸாம் எழுதி 1992-ல் செலெக்ட்டானார். இப்போ, ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இருக்கார்.

25 ஆண்டுகளில்...

கடலூர் சப்-கலெக்டராக என் ஐ.ஏ.எஸ் பயணத்தைத் தொடங்கினேன். தொடர்ந்து கூடுதல் கலெக்டர், மாவட்ட ஆட்சியர், யுனிசெஃப் அதிகாரி, பல துறைகளில் தலைவர், இப்போது உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர்னு இதுவரை 15 பணிமாறுதல்களைச் சந்திச்சிருக்கேன். இவற்றில், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பணியாற்றியது நிறைவான அனுபவம். தருமபுரி மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பெண் குழந்தைகளுக்கான கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுயஉதவிக் குழு வளர்ச்சி உட்படப் பெண்கள் நலன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காகச் செய்த விஷயங்கள் கண்கூடாகப் பலன் தந்தன. 

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

சென்னையில் பெருவெள்ளம் வந்த போது, வெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு என் பொறுப்பை நிறைவுடன் செய்தேன். மத்திய அரசின் உதவித்தொகையுடன் லண்டன்ல நான் படிச்ச முதுகலை பொருளாதாரம் மற்றும் அரசியல் படிப்பு மற்றும் அங்கே கிடைச்ச அனுபவங்களை என் பணியில் பெரிதும் பயன்படுத்துறேன்.

என் சர்வீஸ்ல ரெண்டாவது வருஷம். அப்போ செங்கல்பட்டு சப்-கலெக்டரா இருந்தேன். பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாஃபியா கும்பலைத் தடுக்க முயற்சி செய்த என்னை மிரட்டினாங்க; லஞ்சம் கொடுக்கிறதா சொன்னாங்க. எதுக்கும் நான் அசைந்து கொடுக்கலை. ஒருநாள் ஆற்றில் மணலைத் திருடிச்சென்ற லாரிகளைச் சிறைப்பிடிச்சேன். அப்போ ஒரு லாரி ஓட்டுநர் என் கார் மீது லாரியை மோதியதில் என் முதுகில் அடிபட்டது. இப்படி நிறைய விஷயங்களைப் பார்த்துட்டேன். உயரதிகாரிகளின் பாரபட்சம், ஆண் பெண் பாகுபாடு, நேர்மையாக இருப்பதால் வரும் பணி மாறுதல் மற்றும் அச்சுறுத்தல்கள்னு நிறைய சவால்களை எதிர்கொண்டிருக் கேன். இன்னும் நிறைய சவால்களை எதிர்கொண்டு பணியாற்ற ஆர்வமா யிருக்கேன்.  

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்

இரு முதல்வர்கள்...

என் பணிக்காலத்தில், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் தலைமையிலான அரசுகளில் பணியாற்றியிருக்கேன். நான் ஈரோடு கூடுதல் ஆட்சியராக இருந்தபோது, அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கருணாநிதி ஐயா கலந்துகிட்டப்போ, இறுதியாக நன்றியுரையை நான் தமிழில் கவிதையாகப் பேசினேன். ‘தமிழில் எல்லாம் ஆர்வம் இருக்கா? கவிதையெல்லாம் எழுதுவீங்களா... நல்லது, தொடருங்க’னு மேடையிலேயே வாழ்த்தினார். நான் தருமபுரி கலெக்டராக இருந்தபோது நடுநிலையா இருந்ததால, என்னை மாற்ற அந்த மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பலர் நினைத்தனர். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஐயாவிடம் அந்தச் செய்தி செல்ல, ‘இந்த கலெக்டரை மாத்த முடியாது. அவங்க மூலமா பின்தங்கிய உங்க மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்துக்கோங்க’னு சொல்லியிருக்கார். ஜெயலலிதா மேடம், அதிகாரிகள் சொல்லும் யோசனை சிறப்பானதாக இருந்தால், உடனே அதைச் செயல்படுத்த உத்தரவிடுவார். என்மீது தனி அன்பு கொண்டிருந்தார். ஒரு விஷயத்தை உடனே செய்து முடிக்கத் தேவையான எல்லா ஒத்துழைப்பையும் கொடுப்பார்.

என் உலகம் சுவாரஸ்யமானது! - அமுதா ஐ.ஏ.எஸ்நாங்க ஐ.ஏ.எஸ் தம்பதி!

என் கணவர் ஷம்பு கலோலிகர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் செலெக்டானவர். தற்போது தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகயிருக்கார். மீடியாவிலிருந்து விலகியிருக்கவே விரும்புவார். இருந்தாலும், என்னைப் பத்தி வெளியாகும் செய்திகளை ஆர்வத்துடன் என்னிடம் காட்டி, அது பற்றிப் பேசுவார்.

போட்டோகிராபி, சைக்கிளிங், இளையராஜா...

வைல்ட் லைஃப் போட்டோகிராபி, என் பிரதான ஸ்ட்ரெஸ் பஸ்டர். எட்டு வருஷங்களா வருடத்தில் சில நாள்களை ஒதுக்கி, பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுக்குப் போய் போட்டோ எடுத்துட் டிருக்கேன். வாரம்தோறும் விடுமுறை தினங்கள்ல, 30 கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிளிங் போறேன். இளையராஜாவின் தீவிர ரசிகை. தினமும் அவர் பாடல்களைக் கேட்கவே, தனியாக நேரம் ஒதுக்குவேன். இப்படி, என் பர்சனல் உலகம் சுவாரஸ்யமா இருக்கும்!’’

 கு.ஆனந்தராஜ் - படங்கள் : பா.காளிமுத்து