புதிய வாழ்க்கையை புதைக்கும் பழைய காதல் !
வாசிகள் பக்கம்
##~## |
பிரச்னை எனக்கல்ல... என் தோழிக்கு! அவளுடைய நல்வாழ்வில் அக்கறையுள்ள உயிர்த் தோழியாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்!
நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, படித்த, அழகான பெண் என் தோழி. கல்லூரியில் எம்.எஸ்சி படித்த காலத்தில்தான் எங்களுடைய நட்பு மலர்ந்தது. படிப்பை முடித்த கையோடு, சில மாதங்களுக்கு முன் அவளுக்குத் திருமணம் முடித்தார்கள். கணவரும் நன்றாகப் படித்தவர், கை நிறைய சம்பாதிப்பவர், நல்ல பண்பாளர்.
திருமணமான புதிதில் அவர்களுக்கு இடையே, புதுமணத் தம்பதிக்கே உரித்தான அந்த மகிழ்ச்சி இல்லாததை நான் கவனித்தேன். ஏதாவது, சின்னச் சின்ன பிரச்னையாக இருக்கும் என்று விட்டுவிட்டேன். ஆறு மாதங்கள் உருண்ட நிலையில்... சமீபத்தில் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அந்த நிலைமை இன்னும் முற்றி இருந்ததை உணர்ந்தேன். மனைவிக்கு புதுப் புடவை வாங்கிக் கொடுப்பது, வெளியில் அழைத்துச் செல்வது என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆர்வம் காட்டிய கணவர், எதிலுமே சந்தோஷம் பிரதிபலிக்காத இவள் முகத்தை, மனதைக் கண்டு தானும் சோர்ந்து போக ஆரம்பித்திருக்கிறார். தோழியின் முன்னிலையிலேயே இதையெல்லாம் சொல்லி வருத்தப்பட்ட அவர், ''எங்க பிரச்னை பெரியவங்க காது வரை போக வேண்டாம்னு பொறுமையா இருக்கேன். க்ளோஸ் ஃப்ரெண்ட் நீங்க... அவகிட்ட என்ன, ஏதுனு கேட்டு எடுத்துச் சொல்லுங்க'' என்றார் பரிதாபமாக.

தோழியிடம் விடாமல் விசாரித்தபின்தான் வாய் திறந்தாள்... தன் மனதுக்குள் பூட்டி வைத்திருந்த கதையை. பி.எஸ்சி படித்தபோது நெருங்கிய உறவினர் மீது அவளுக்கு நல்லதொரு அபிமானம் இருந்திருக்கிறது. அவருக்கும் பிடித்திருக்கவே பெரியவர்கள் மூலமாக பேசிஇருக்கிறார்கள். பெண்ணின் படிப்பு முடியட்டும் பேசலாம் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளனர் இருவீட்டு பெரியவர்களும். இதையடுத்து, இருவருக்கும் காதல் மலர்ந்திருக்கிறது.
மிக ஆத்மார்த்தமாக பழகிய நிலையில், விபத்தில் ஒன்றில் அந்தப் பையன் இறந்து போக... 'நல்லவேளை நம்ம பொண்ணு வாழ்க்கை தப்பிச்சிடுச்சு’ என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் பெற்றோர்... இவளின் காதலை அறியாமல். இவளோ அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாமல் தவித்திருக்க, இரண்டு வருடங்களில் திருமணத்தை முடித்துவிட்டனர். காதலன் இறந்த பின், அந்தக் காதலை இன்னும் அவள் நெஞ்சில் சுமப்பது துயரம்... அவளைவிட அவள் கணவருக்கு.
''இதையெல்லாம் எங்கிட்டகூட சொல்லலையேடி..?! சரி, நடந்ததெல்லாம் போகட்டும். மனசுல இருக்கிறதை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு, உன் கணவருக்காக புது வாழ்க்கையைத் தொடங்கு...'' என்று பாடமாகப் படித்தாலும், ''முடியலைடி!'' என்று அழுகிறாள் முட்டாள்தனமாக.
என்ன பதில் சொல்ல... இவளுடைய அன்புக்காகக் காத்திருக்கும் கணவருக்கு..? எப்படி மீட்க இவளை இந்தப் புதைகுழியில் இருந்து..?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி
சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...
என் டைரி 266ன் சுருக்கம்
''பிள்ளைகள் திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலாக, சொந்த ஊரில் வாழும் வரும் விதவைத் தாய் நான். பஜனை கூட்டங்களில் அறிமுகமான இளைஞன் ஒருவன், என் பெறாத பிள்ளையாகிப் போனான். சமீபத்தில் என் நிலத்தை விற்கும் பொறுப்பை அவனிடம் கொடுத்திருந்தேன். அதற்கு முன், வற்புறுத்தி ஜோசியரிடம் அழைத்து சென்றான். 'பவர் ஆஃப் அட்டர்னி எழுதி கொடுத்து விடுங்கள்’ என்றது ஜோசியரின் சுவடி. 'என் பெயருக்கு எழுதி கொடுங்கள்’ என்று நச்சரிக்க ஆரம்பித்தான். சந்தேகத்தோடு விசாரித்தபோதுதான் புரிந்தது... சொத்துக்காகவே பாசம் காட்டியிருக்கிறான் என்பது. இது கோபத்தை வரவழைத்தாலும், மகன் தவறு செய்தால் மன்னிப்பது இல்லையா? அதுபோல மன்னித்தால் என்ன என்கிறது தாய் மனது. என் மனம் தெளிவு பெற வழி சொல்லுங்கள்...''

வாசகிகள் ரியாக்ஷன்... அது ஓநாய் கண்ணீர்!
நீங்கள் பெற்ற மகனே உங்கள் உணர்வுகளைப் புரிந்திருக்காத வேளையில், எங்கிருந்தோ வந்த எவனோ ஒருவன் புரிந்து கொண்டு அன்பு காட்டினான் என்று எப்படி நம்பினீர்கள்? 'ஆடு நனைகிறதே என்று ஓநாய் விடும் நீலிக் கண்ணீர்' போன்றதுதான் அவனுடைய பாசம். அந்த மாயவலையில் சிக்கி, சொத்துக்களை இழக்கும் முன் விழித்து கொண்டோமே என்று சந்தோஷப்படுங்கள். வழக்கறிஞர் மூலமாக நீங்கள் விரும்பியபடி ஏதாவது ஒரு ஆசிரமத்துக்கு சொத்துக்களை தானமாக வழங்குங்கள். தனிமை உங்களை வாட்டுவதால்... நல்ல முதியோர் இல்லத்தில் உங்களை இணைத்துக் கொண்டு, உங்கள் வயதையத்தவர்களோடு இனிமையாக காலத்தை கழியுங்கள்.
- 'அவள் விகடன்’ ஃபேஸ்புக் மூலமாக, ஷபிலா ஷஜு
வம்பை விலைக்கு வாங்காதீர்கள்!
இந்தக் காலத்தில் பெற்ற குழந்தைகளையே சொத்து விஷயத்தில் நம்ப முடிவதில்லை. இதில் எப்படி மூன்றாவது ஆளை மகனாக நம்பி பாவித்தீர்கள்? அவன் சூழ்ச்சி செய்கிறான் என்கிற உண்மை தெரிந்த பின்பும் மன்னிக்க முயல்கிறேன் என்று வேறு சொல்கிறீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளவே நிறைய யோசிக்க வேண்டும் போல. அவனை மன்னித்து, மகனாக ஏற்று, பவர் ஆஃப் அட்டர்னி எழுதி வைத்தால், அடுத்த நிமிடமே என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. வயதான காலத்தில் எதற்காக இப்படியெல்லாம் பரிதாபப்பட்டு வம்பை விலைக்கு வாங்கப் பார்க்கிறீர்கள். உடனடியாக உங்கள் சொத்தை ஆசிரமத்துக்கு எழுதி கொடுத்துவிட்டு, அங்கேயே தங்கி விடுங்கள். உறவாடி கெடுப்பவனை, ஒரு காலும் நம்பவே வேண்டாம்!
- ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்
சொத்துக்களே சுமையாகிவிடும்!
சொந்த காலில் நிற்பதற்கு பணம் என்பது முக்கியமான ஊன்றுகோல். அது உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஆனால், அந்திம காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அதுதான் பெரிய சுமையே! அதை சுமந்து கொண்டு, ஓயாமல் கவலைப்பட்டுக் கொண்டுஇருப்பதே, உங்களை உருக்கிவிடும். சொத்துக்களை ஆசிரமத்துக்கு எழுதிக் கொடுக்க நினைக்கும் உங்களுடைய நினைப்பு... சரியானதே! இனியும் தாமதிக்காமல், எதையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல்... உடனடியாக எழுதிக் கொடுத்துவிட்டு, ஆன்மிகத்தில் மனதைத் திருப்புங்கள். மன அமைதி பெற அதுதான் சிறந்த வழி!
- ஜி.என்.உஷா, கோவை