
ஐடியா

``என் தொழிலுக்கான ஐடியா, நான் பணிபுரிந்த அலுவலகத்தின் தகவல் பலகையில் இருந்து கிடைத்தது!” - ஆரம்பிக்கும்போதே சுவாரஸ்யம் கோக்கிறார் சுஜாதா அனந்த். வீடுகளில் பூஜைகள் நடத்தித் தரும் புரோகிதர்கள் மற்றும் உணவு சமைத்துத் தருபவர்களை இணையம் வழியே புக் செய்துகொள்ளும் வகையில், purohitsandcooks.com இணைய தளத்தை வடிவமைத்து நிர்வகித்துவரும் பெங்களூரில் வசிக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணிடம் பேசினோம்.
``பிறந்தது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் படித்து வளர்ந்தேன். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முடித்து, சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரிந்தேன். திருமணத்துக்குப்பின் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தேன். 13 வருடங்கள் பணிபுரிந்த பின்னர், வீட்டுப் பொறுப்புகளுக்காக வேலையைவிட்டேன். என் சாஃப்ட்வேர் துறை அனுபவத்தைக்கொண்டு ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளேயே கிடந்தது. அப்போதுதான், ஒரு விஷயம் ஸ்பார்க் ஆனது.

நான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பணியாளர்கள் தங்கள் எண்ணங்களை, தேவைகளைத் தெரிவிக்கும் அறிவிப்புப் பலகையில் (Bulletin Board), வீட்டில் பூஜை செய்வதற்கு நம்பிக்கையான நபர்கள் தேவை எனப் பலரும் தொடர்ந்து பதிவிட்டது என் நினைவுக்கு வந்தது. அதையே ஓர் ஆன்லைன் சர்வீஸாகச் செய்ய முடிவெடுத்து, கணவருடன் கலந்தாலோசித்தேன். 2015-ம் ஆண்டு இணையதளத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் கட்டணம் ஏதுமின்றி இலவச சேவையாகவே செய்து வந்தேன். முழு நேரமாக இந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்தபோது, நிர்வாகச் செலவுகளைக் கணக்கிட்டு மிகச் சிறிய தொகையைக் கட்டணமாக வசூல் செய்ய ஆரம்பித்தேன். என்றாலும், புரோகிதர்கள் மற்றும் சமையல் கலைஞர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. என் மூலம், பல புரோகிதர்களுக்கும் சமையல் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்து வருவதில் மிகவும் மகிழ்ச்சி. குறிப்பாக, சமையல் பணியில் பெண்கள் பலர் வாய்ப்பு பெறுகின்றனர்.
அடுத்ததாக ரெசிப்பிகள், கேட்டரிங் சர்வீஸ் மற்றும் இந்து பண்டிகைகளைக் கொண்டாடும் முறை பற்றிய விளக்க உரை, ஆன்மிக நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள், சம்ஸ்கிருத வகுப்புகள் நடைபெறும் இடங்கள் என இந்து மத சம்பிரதாயங்கள் சம்பந்தமான தகவல் தொகுப்புகளைப் பதிவிடுகிறேன். மற்ற மாநிலங்களுக்கும் எங்கள் சேவையை விரிவாக்கும் வண்ணம் திட்டமிடுவதும், அதைச் செயல்படுத்துவதுமே அடுத்த இலக்கு’’ என்கிறார் சுஜாதா அனந்த்.
-ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்