தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்

கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்
பிரீமியம் ஸ்டோரி
News
கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்

கனவுகளைத் துரத்தியவர்கள்

கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்

பிரபல பத்திரிகையாளர் ஷோபா வாரியரின் ‘ட்ரீம் சேஸர்ஸ்’ புத்தகம் கனவுகளால் விரட்டப்பட்டவர்களின், வெற்றிபெற்றவர்களின் அனுபவத் தொகுப்பு. ரெடிஃப்.காமில் எடிட்டோரியல் டைரக்டராக இருக்கும் ஷோபா வாரியர், ‘ட்ரீம் சேஸர்ஸ்’ என்கிற பெயரில் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். இரண்டாவதில் இடம்பெற்றவர்கள் அனைவரும் கனவுகளைத் துரத்திய பெண்கள்.

‘ஒரு விஷயம் குறித்து நம்மால் கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்’ என்பதையே அத்தனை பெண்களின் வாழ்க்கைக் கதைகளும் சொல்கின்றன. புத்தகம் எழுதியதன் பின்னணி முதல் ‘ட்ரீம் சேஸர்'ஸின் மூன்றாம் பாக வேலைகள் வரை எண்ணங்கள் பகிர்கிறார் ஷோபா வாரியர்.

கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்

‘`பத்திரிகையாளராகணும்னு திட்டமிட்டெல்லாம் வரலை. அது எதேச்சையா நடந்தது. அதே மாதிரிதான் இந்தப் புத்தகம் எழுதினதும்.  ஐஐடி புரொபசர் அஷோக் ஜுன்ஜுன்வாலாவை நிறைய முறை பேட்டி எடுத்திருக்கேன். ஆந்த்ரபிரினர், ஸ்டார்ட் அப்ஸ், இன்குபேட்டர்ஸ்... இந்த வார்த்தைகள் எல்லாம் நமக்குப் பரிச்சயமாகாத காலத்துலேயே அவர் இவற்றை அடிக்கடி உச்சரிக்கிறதைக் கேட்டிருக்கேன். அந்தக் காலத்துலேயே அவர் சென்னை ஐஐடியில் ஓர் இன்குபேஷன் சென்டர் வெச்சிருந்தார். ஒருமுறை அவரை பேட்டி எடுத்தபோது அந்த சென்டரைப் பற்றிச் சொல்லி, அதுல உள்ள தொழில்முனைவோரைச் சந்திக்கும்படி கேட்டுக்கிட்டார்.

அப்படி நான் சந்திச்சவங்களில் ஒருத்தவங்கதான் சலோனி மல்ஹோத்ரா. இன்ஜினீயரிங் முடிச்சிட்டு ‘ஸ்டார்ட் அப்’  பிசினஸ் தொடங்கியிருந்தாங்க. சின்ன வயசுலேருந்தே அவங்களுக்கு கிராமங்களில் வேலை பார்க்கணும்னு ஆசை இருந்திருக்கு. தற்செயலா அவங்க புரொபசர் ஜுன்ஜுன்வாலாவின் ஸ்பீச்சைக் கேட்டு, ஈர்க்கப்பட்டு, அவரை நேரில் சந்திச்சிருக்காங்க. ‘தேசி க்ரூ’ என்ற பெயரில் சலோனிதான் இந்தியாவில் முதல் பிபிஓ ஆரம்பிச்சாங்க. அந்த நேரம் சலோனி, ஆசியாவின் 25 வெற்றி கரமான இளம் தொழில்முனைவோர்களில் ஒருத்தவங்களா தேர்வாகியிருந்தாங்க. அவங்க வயசு 23.

தொழில்முனைவோர் என்பதைத்தாண்டி, தான் சார்ந்த சமூகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிற சோஷியல் ஆந்த்ரபிரினரா இருந்த சலோனி என்னைக் கவர்ந்தாங்க. ஆந்த்ரபிரினர் என்பவங்க சுயலாபத்துக்காக வேலை செய்யறவங்க. சோஷியல் ஆந்த்ர பிரினர், சமூகத்துக்கான தொழில்முனை வோர்கள். சலோனியைச் சந்திச்சப் பிறகுதான் அப்படிப் பட்டவங்களைத் தேடிப்பிடிச்சு புத்தகம் எழுதணும்கிற எண்ணம் வந்தது...’’ - நீண்ட அறிமுகம் சொல்லும் ஷோபா, தன் புத்தகத்தின் இரண்டாம் தொகுப்பைத் திட்டமிட்டே மகளிர் மட்டுமாகக் கொண்டுவந்தாராம்.

‘`பத்திரிகையாளரா இத்தனை வருட அனுபவத்துல நிறைய பேரைச் சந்திச்சிருக்கேன். அவர்களில் சிலரின் கதைகள் மனசை விட்டு நீங்காம இருந்தன. உதாரணத்துக்கு தக்‌ஷின்சித்ராவின் நிறுவனர் டெபோரா தியாகராஜன் பத்திச் சொல்லலாம். பல வருடங்களுக்கு முன்னாடியே பலமுறை அவங்களைப் பேட்டி எடுத்துருக்கேன். அவங்க குழந்தையா இருந்தபோது அவங்கம்மா மியூசியமுக்குத்தான் அடிக்கடி கூட்டிட்டுப் போவாங்களாம். குழந்தையா அவங்க மனசுல மியூசியத்தின் தாக்கம் பெரிசா இருந்திருக்கு. இன்னிக்கு அவங்க பண்ற வேலைகளுக்கு அதுதான் ஆரம்பமா அமைஞ்சிருக்கு.

கனவு காண முடிகிறது என்றால் அதை அடையவும் முடியும்! - ஷோபா வாரியர்

‘பான்யன்’ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான வந்தனாவையும் பல வருஷங்களுக்கு முன்னாடியே தெரியும். ஒரு சின்ன வீட்டுலதான் அவங்களுடைய சேவையை ஆரம்பிச்சாங்க. அந்தச் சின்ன வயசுல வேற வேலையைப் பத்தி யோசிக்காம, சமுதாயத்துக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்ச அவங்க கதையை எப்படி மறக்க முடியும்? ஜெர்மனியைச் சேர்ந்த சாப்ரியே பார்வையற்ற பெண். பார்வையில்லாத குழந்தைகளுக்காக திபெத்தில் ஒரு ஸ்கூல் தொடங்கி, அந்தக் குழந்தைங்களுக்கு யாரையும் சாராம வாழறதுக்கான வழிகளையும் சொல்லித் தந்தாங்க. அவங்களும் அவங்க பார்ட்னரும் திபெத்ல இருந்தபோது பிரபல ஆங்கிலப் பத்திரிகையில அவங்களைப் பேட்டி எடுத்திருக்காங்க. அந்தப் பேட்டியில் தன்னுடைய இந்த முயற்சியும் உதவிகளும் இந்தியாவின் கடைக்கோடிக்கும் போய்ச் சேரணும்னு சொல்லியிருக்காங்க. அதே மாதிரி இந்தியாவில் திருவனந்தபுரத்தில் காந்தாரினு ஒரு சென்டர் தொடங்கி, ஒதுக்கப்பட்ட சமூகத்துக்கு நிறைய விஷயங்கள் பண்ணிட்டிருக்காங்க.

வித்யாசாகர் அமைப்பின் நிறுவனர் பூனம் நடராஜன், தன் ஆரம்ப நாள்களில் ரொம்பவே  கஷ்டப்பட்டிருக்காங்க. மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான அமைப்பு என்பதால் அவங்களுக்கு வாடகைக்கு இடம் கொடுக்கப்பலரும் மறுத்திருக்காங்க. யாரோ சொன்னதைக் கேட்டு பாலிவுட் நடிகர் சசி கபூருக்கு உதவி கேட்டுக் கடிதம் எழுதியிருக்காங்க.  சசி கபூர்கிட்டருந்து பதில் வந்தது மட்டுமில்லை, அவர் தன்னுடைய படக்குழுவினரோடு சென்னை வந்து, ப்ரீமியர் ஷோ போட்டு, அதன் மூலம் வந்த பெரிய தொகையை நிதி உதவியா கொடுத்திருக்கார். ‘இப்பவும் மாசம் பிறந்தா வேலை பார்க்கிறவங்களுக்கு சம்பளம் கொடுக்கப் பணமிருக்காது. ஆனா, கடைசி நிமிஷத்துல ஏதோ மேஜிக் நடந்து யாரோ உதவி பண்ணிடுவாங்க’னு பூனம் நடராஜன் சொன்னாங்க.

அப்படித்தான்... இந்த உலகத்துல நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் நமக்கு ஏதோ பாடம் கத்துக்கொடுத்துட்டுப் போவாங்க. இந்தப் புத்தகம் எழுதினது மூலமா  இந்தப் பெண்களின் அனுபவங்கள்லேருந்து நான் அப்படி நிறைய பாடங்கள் கத்துக்கிட்டேன்’’ - கனவுகளைத் துரத்தியவர்களை விரட்டிப்பிடித்த கதை சொல்லும் ஷோபா, புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் 14 பெண்களுக்கும் ஓர் ஒற்றுமை இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறார்.

‘’அத்தனை பேருக்கும் கனவுகள் இருந்திருக்கு. அந்தக் கனவுகள் விரட்டியிருக்கு.  ஆனா, பலருக்கும் அந்தக் கனவுகள் இருந்ததே தெரிஞ்சிருக்கலை. எதிரில் வந்த தடைகளைத் தகர்த்தெறிஞ்சிட்டுதான் கனவுகளை நனவாக்கியிருக்காங்க. இந்த ரெண்டு புத்தகங்களும் எழுதின பிறகு எனக்கும் ஒரு கனவு வந்திருக்கு. நம்மைச் சுற்றி நிறைய ட்ரீம் சேஸர்ஸ் இருக்காங்க. அவங்களை எல்லாம் கண்டுபிடிச்சு அறிமுகப்படுத்தணும்...’’ - ட்ரீம் சேஸர்களுடன் இணைகிறவர், தனது அடுத்த தொகுப்பில் கனவுகளை விரட்டி வெற்றிகண்ட ஆண்களையும் பெண்களையும்  கண்டுபிடித்து அறிமுகப்படுத்தும் தேடலில் இருக்கிறார். 
 
‘`கனவுகளை விரட்டுங்கள்... பயமோ, தயக்கமோ இல்லாம கனவுகளைத் துரத்தினோம்னா அவற்றை நிச்சயம் நனவாக்கலாம்’’ - ஷோபாவின் இந்த மெசேஜ் நமக்கும்தான்!

-ஆர்.வைதேகி

படங்கள் : தே.அசோக்குமார்