
வாழ்க்கைக் கோலம்

மார்கழி மாதத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, வாசல்தோறும் பூத்துக்கிடக்கும் வண்ணக்கோலங்கள். அந்தக் கோலங்களுக்கான கலர் பொடி தயாரிக்கும் மக்களின் வாழ்க்கைக் கோலத்தைப் பார்வையிடுவதற்காக, கலர் கோலப்பொடி தயாரிக்கப்படும் திண்டிவனம் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்துக்குச் சென்றோம். கேமராவைப் பார்த்ததும், ‘யாரு, என்ன எழுதி எங்க பொழப்பு விடியப்போகுது? எதுவும் வேணாம்...’ என்று அந்த ஊர்ப் பெண்கள் விரக்தியுடன் பேசினார்கள். நாம் காத்திருக்க, சிறிதுநேரம் கழித்து மௌனம் உடைத்தார்கள்.
“நாலு தலைமுறையா கோலப்பொடி தயாரிக்கறதுதான் எங்களுக்குக் குடும்பத் தொழில். இதுல கிடைக்குற காசு வாயிக்கும் வயித்துக்குமே போதலைன்னாலும், எங்களுக்கு வேற வழியும் தெரியல’’ எனச் சொல்லும்போதே கண்கள் கலங்கி அமைதியாகிறார் ஆரோக்கியமேரி. “அக்கா... போயி வியாபாரத்தைப் பாரு. அழுது எதுவும் மாறப்போறதில்ல’’ என்று அவரைச் சமாதானப் படுத்தி பேச ஆரம்பித்தார் சுகன்யா.
“எனக்கு ஆறு வயசானப்போ, எங்கப்பா கலர் கோலப்பொடி தயாரிக்க எனக்குக் கத்துக் கொடுத்தாரு. இந்தா...

என் கையில சாயம் இல்லாம பார்க்க எனக்கே பிடிக்காது’’ என்று சாயமேறிய தன் விரல்களை விரித்துக்காட்டுகிறார். அவர் கண்களிலோ வறுமையின் சாயம் அப்பியிருக்கிறது. ‘`எங்க ஊர்ல இருக்குற 50 குடும்பங்களுக்கு இதுதான் குலத்தொழில். மார்கழி மாசம்தான் கலர் கோலப்பொடி வியாபாரம் நல்லாயிருக்கும்; எங்களுக்கும் வருமானம் கிடைக்கும். அதனால மார்கழி மாசம் வந்துட்டா போதும்... எங்க புள்ளைக தீபாவளியைக் கொண்டாடுற மாதிரி கொண்டாடுவாங்க. நோட்டு புஸ்தகத்துல இருந்து, புதுச் சொக்கா வாங்குறவரை எல்லாமே இந்த மாசம்தான். இந்த ஒரு மாச வருமானத்துக்காகத்தான் வருஷம் முழுக்க உழைக்குறோம்’’ - கலர் பொடிகளை பாக்கெட் போட்டுக்கொண்டே பேசுகிறார் சுகன்யா.
“ஒரு வீட்டுல அப்பா, அம்மா, புள்ளைனு குடும்பமாதான் கோலப்பொடி செய்துகிட்டு இருந்தோம். ஆனா, வருமானம் குறைய குறைய ஆம்பளைங்க எல்லாம் வெளியூர்களுக்குக் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. `சரி. இந்தப் பொழப்பு நம்மளோடு போகட்டும்; புள்ளைகளப் படிக்கவெச்சு கரையேத்திவிட்டுடலாம்’னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா, அங்கே சரஸ்வதியை முந்திக்கிட்டு சாதியில உக்காந்திருக்கு?! சாதி சரியில்லைனு சாப்பிடாம இருக்க முடியாதுல? அதனால, சரி குலத்தொழிலையாச்சும் செஞ்சு பொழச்சுக்கோங்கனு புள்ள குட்டிகளுக்கும் கோலப்பொடி தயாரிக்கச் சொல்லிக்கொடுத்துருவோம். எங்க புள்ளைக வெளியூருக்குப் போயி கம்ப்யூட்டர் வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கணும்னு எங்களுக்கும் ஆசையிருக்கும்தானே? அதனால, எல்லாத்தையும் தாண்டி என் புள்ளைகளை நான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறேன். எங்க கையில இருக்குற சாயக்கறை போக, இங்கேயிருக்குற சாதிக்கறை போகணும்’’ என்று ஆற்றாமையும் நம்பிக்கையும் ஒன்றுசேரப் பேசினார் சுகன்யா.

கோலப்பொடி தயாரிக்கும் முறை பற்றி நம்மிடம் விவரித்த பினோமினாள், “பிப்ரவரி மாதம் வர்ற வளர்பிறையில, எங்க ஊரு சனங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து குலதெய்வத்துக்குப் பூசையைப் போட்டுட்டு அந்த வருஷத்துக்கான தொழிலை ஆரம்பிப்போம். மார்ச், ஏப்ரல், மே மாசங்கள்ல ஆறு, ஊத்துல (ஊற்று) மணல் நல்லா காய்ஞ்சு கிடக்கும் என்கிறதால, அந்த நேரத்துல மண்ணை எடுத்துட்டு வருவோம். ஆரம்பத்துல இலவசமா கிடைச்ச மண்ணுக்கு இப்போ காசு கொடுக்க வேண்டியதா இருக்கு. அப்பப்போ அரசாங்கத்துல இருந்து வேற மண் எடுக்கத் தடை போட்டுடுவாங்க. வண்டி வண்டியா மணல் திருடுறவங்களையெல்லாம் அரசாங்கம் கண்டுக்கிறது இல்ல. ஆனா, நாங்க ஒரு மூட்டை மண் எடுக்க அவ்வளவு போராடுறோம்.
ஜூன், ஜூலை மாசங்கள்ல மண்ணைச் சலிச்சு தனித்தனி மூட்டைகளா அடுக்கி வெச்சிடுவோம். அடுத்த மூணு மாசத்துக்கு மண்ணுல சாயத்தைக் கலக்கறது, கட்டி இல்லாமப் பிசிறிவிடுறது, காயவைக்கிற வேலைகள் இருக்கும். இதுக்கு இடையில வெளியூர்கள்ல இருந்து வரும் ஆர்டர்களையும் முடிச்சுக்கொடுப்போம். அப்புறம், கலர் பொடிகளை அதிகம் வெயில் இல்லாத இடத்துல காயவெச்சு, காய்ஞ்சதும் ஜிகினா கலப்போம். எல்லாம் முடிஞ்சு நவம்பர் மாசக் கடைசியில பேக் பண்ற வேலைகளை முடிச்சு விற்பனைக்குத் தயார் செஞ்சு, வியாபாரிகளுக்கு விற்போம். எங்ககிட்ட மூட்டை 400 ரூபாய்க்கு வாங்குற வியாபாரிங்க, ஆயிரக்கணக்குல விலைவெச்சு வெளியில விப்பாங்க. எங்க சனங்களுக்கு வெளியூர் போக வழி தெரியாம இன்னும் உற்பத்தியிலேயே இருக்கோம்’’ என்கிறார்.
‘`கலர் கோலப்பொடியில ரெண்டு வகை இருக்கு. மண்ணுல வண்ணச் சாயம் கலந்து கலக்கும் கோலப்பொடி, வெள்ளைக் கோலப்பொடியில் கலக்கும் கலர் கோலப்பொடி. வெள்ளைக் கோலப்பொடியை சேலத்துல இருந்து மொத்தமா மூட்டைக் கணக்கில் வரவழைச்சு, யார் யாருக்கு எத்தனை கிலோ வேணும்னு பிரிச்சுக்குவோம். அப்புறம் அந்த வெள்ளைக் கோலப்பொடியில சாயம் கலந்து காயவெச்சு பாக்கெட் போடுவோம்.
லைட் கலர்களுக்கு வெள்ளைக் கோலப்பொடியில் கலக்கும் சாயங்கள்தான் நல்லாயிருக்கும். மண்ணுல கலக்கும் கோலப்பொடியைவிட, வெள்ளைக் கோலப்பொடியில கலக்கும் கோலப்பொடி கொஞ்சம் விலை அதிகம். நாங்க தயாரிக்குற கோலப்பொடி தமிழ்நாடு முழுக்க பல வீட்டு வாசல்களையும் அலங்கரிக்குது. அந்த வண்ணம்போல எங்க வாழ்க்கையிலயும் வண்ணம்சேர அந்தச் சாமிதான் அருள் புரியணும்’’ - முகங்களில் புன்னகையைப் படரவிட்டு வழியனுப்பிவைக்கிறார்கள் இருதயபுரம் கிராமத்துப் பெண்கள்.
-சு.சூர்யா கோமதி
படங்கள் : தே.சிலம்பரசன்