தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை!

உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை!
பிரீமியம் ஸ்டோரி
News
உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை!

மகளிர் மட்டும்

ந்தியா உள்ளிட்ட பல நாடுகளில், சில வழிபாட்டுத்தலங்களுக்குள் நுழையவும், திருவிழாக்களில் கலந்துகொள்ளவும் பெண்களுக்குத்தான் தடை விதிக்கப்படும். ஸ்வீடனிலோ ஒரு பிரமாண்டமான இசை விழாவுக்கு வருகை தர ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை!

சமீபத்தில் ஸ்வீடன் நாட்டின் கோதன் பர்க் நகரில் ‘அறிக்கை திருவிழா’ (Statement Festival) நடைபெற்றது. இந்த இசை விழா, பிரத்யேகமாகப் பெண்களுக்காக மட்டுமே திட்டமிடப்பட்ட உலகின் முதல் இசைத் திருவிழா. மாறுபட்ட பாலினத்தார், திருநங்கைகளை அனுமதித்த விழா அமைப்பாளர்கள், ஆண்களை மட்டும் எக்காரணம் கொண்டும்  அனுமதிக்கவில்லை. கலைஞர்கள் முதல் ஊழியர்கள்வரை அனைவரும் பெண்களே. பாதுகாப்புப் பணிக்குக்கூடப் பெண்களே பணியமர்த்தப்பட்டனர்.

ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சிக்குப் பெண்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. விழாவுக்கு 59,000 டாலர் நன்கொடையாக வழங்கப்பட்டது. லட்சக்கணக்கில் பெண்கள் வருகைதந்து விழாவைக் கண்டுகளித்தனர்.

விழாவில் ஆண்கள் நுழையத் தடை விதித்தது பாலினப் பாகுபாடாகும் என ஸ்வீடன் நாட்டின் பாலினப் பாகுபாடு எதிர்ப்பு தீர்ப்பாயம் கண்டித்துள்ளது. எனினும், இந்தக் கட்டுப்பாடு காரணமாக யாரும் பாதிக்கப்படாததால், அமைப்பாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

‘`விழாவின் வெற்றி நமக்குக் கிடைத்த வெற்றி. தீர்ப்பாயத்தின் தீர்ப்பால் இது மாறாது. அது பற்றி நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. உலகத்தை மாற்றுவதில் நாங்கள் பிஸியாக இருக்கிறோம்'’ என்கிறார் இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரான ஸ்வீடன் நகைச்சுவை நடிகை எம்மா நியக்கெரேயின். கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக நடந்த மிருகத்தனமான பாலியல் வன்முறைகளே இவர் இந்த எதிர்மறை முடிவு எடுப்பதற்குக் காரணம்.

உலகுக்கு ஓர் உரத்த அறிக்கை!

ஆம்...  கடந்த ஆண்டு ஸ்வீடனில் ஒரு ஜெர்மனி நிறுவனம் நடத்திய மிகப்பெரிய ‘பிரவல்லா’ திருவிழாவின்போது பெண்கள்மீது பாலியல் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் நடந்தேறின. நான்கு பாலியல் பலாத்காரங்களும், 23 பாலியல் தாக்குதல்களும் நடந்ததாகக் குற்றப்பதிவேடுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கண்மூடித் தனமான பாலியல் தாக்குதல்களைக் கண்டித்து, பிரிட்டனில் உள்ள 25 இசை இணையதளங்கள் தங்கள் செயல்பாடுகளை ஒருநாள் முடக்கி, எதிர்ப்பை வெளிப்படுத்தின. எதிர்காலத்தில் ‘பிரவல்லா’ நிகழ்ச்சி நடத்த ஸ்வீடன் அரசு முழுத்தடை விதித்தது.

இந்தக் கொடூரமான பாலியல் தாக்குதல்களால் மனம் வெதும்பிய எம்மாவுக்கு, ‘மகளிர் மட்டும்’ யோசனை உதித்தது. இவ்விழாவின் வெற்றியைத் தொடர்ந்து, ‘`பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஆண்கள் அறிந்துகொள்ளும் வரை, ‘மகளிர் மட்டும்’ விழாக்கள் தொடரும்'’ எனத் தன் அமைப்பாளர்களுடன் இணைந்து தீர்மானமாகத் தெரிவித்துள்ளார் எம்மா. ‘`பாலியல் வன்முறை என்பது எவ்வளவு பெரிய பிரச்னை என்பதை ஆண்கள் உணரும் காலம் வந்துவிட்டது'’ என்றும் கூறுகிறார் அவர்.

உலகின் தலைசிறந்த பாலின சமத்துவ நாடுகளில் ஸ்வீடனும் ஒன்று. ஏற்கெனவே ‘மீ டூ’ இயக்கத்தினால் ஸ்வீடன் தீவிரப் பிரச்னைகளைச் சந்தித்து வரும் வேளையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஆண்களை ஒதுக்குவது போன்ற நிகழ்ச்சிகள் அந்நாட்டை மேலும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன.

ஆண்கள் தொடர்ந்து தவறு செய்தால், பெண்கள் நிச்சயம் தண்டனை தருவார்கள் என்பதை உலகுக்கு உரத்த குரலில் அறிவித்திருக்கிறது இந்த அறிக்கைத் திருவிழா!

- கே.ராஜு