
தனியே தன்னந்தனியே
‘தி ஷூட்டிங் ஸ்டார்’ என்ற பெயரில் தன் பயண அனுபவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறார் ஷிவ்யா. ஒரே மாதத்தில் 10,000 பிரதிகள் விற்ற இந்தப் புத்தகத்துக்கு ‘நேஷனல் பெஸ்ட் செல்லர்’ என்கிற பெருமையும் உண்டு.

‘`இமயமலை அடிவாரத்தில் சின்ன நகரமான டேராடூனில் ரொம்ப பாதுகாப்பாக வாழ்ந்த இந்தியக் குடும்பம். வீட்டுக்குள்ளேயிருந்து அண்ணாந்து பார்த்தால், மலையடிவாரங்களும் அதன்மேல் மேகக்கூட்டங்களும் தெரியும். கனவுகளோடும் கல்விக்கடனோடும் மேல்படிப்புக்காக சிங்கப்பூர் போனேன். 2009-ம் ஆண்டு நான் படிப்பை முடிச்ச நேரம், அங்கே பயங்கரமான பொருளாதாரப் பின்னடைவு. எந்தெந்த கம்பெனிகளில் வேலை பார்க்கணும்னு கனவுகளோடு காத்திட்டிருந்தேனோ, அந்த நிறுவனங்கள் எல்லாம் வேலைக்கு ஆட்களை எடுக்கிறதையே நிறுத்திட்டாங்க. சிங்கப்பூர் டூரிசம் போர்டில் வேலை கிடைச்சது. அந்த

வேலையும் அது கற்றுக்கொடுத்த அனுபவங்களும்தான் இன்னிக்கு நான் உங்கக்கிட்ட பேசிட்டிருக்கிறதுக்கான ஆரம்பம். சோஷியல் மீடியா, பயணங்கள், உலகம் முழுவதும் உள்ள பயண வலைப்பதிவர்கள் பற்றியெல்லாம் அங்கேதான் கத்துக்கிட்டேன். ஆனாலும், அந்த வேலையில என்னால ஒட்ட முடியலை. ரெண்டு மாசம் பிரேக் எடுத்தேன். என் ஃப்ரெண்டுகூட வெஸ்டர்ன் யூரோப்புக்குக் கிளம்பிட்டேன். அந்த டூரை முடிச்சிட்டு திகட்டத் திகட்ட இமயமலையைச் சுற்றி வந்தேன். அந்த ரெண்டு மாசங்கள் என் வாழ்க்கையின் மிக அழகான, அதுவரை அனுபவிக்காத சுவாரஸ்யத்தைக் கொடுத்தன. பயணம் ஒருத்தருடைய வாழ்க்கையையே மாற்றுமா? என் வாழ்க்கை மாறினது. என்னுடைய முதல் மற்றும் ஒரே கார்ப்பரேட் வேலையை ரிசைன் பண்ணிட்டு, முழுநேர டிராவலரா மாறிட்டேன்’’ - நினைவுகளில் மலர்கிற ஷிவ்யாவின் பேச்சில் அவ்வளவு உற்சாகம்.

‘`ஹிமாச்சல் பிரதேஷின் ஸ்பிடி பள்ளத்தாக்குதான் நான் முதன்முதலில் தனியே பயணம் செய்த இடம். நட்சத்திரங்களை ரசித்தபடியே வானத்தை அழகுபார்த்துக்கொண்டு தூங்கிய இரவுகள்... தனியாக மலையேறின தருணங்கள்... அறிமுகமே இல்லாத மனிதர்களிடம் பேசிக்கொண்டும், அங்கேயிருந்த துறவிகள், கன்னியாஸ்திரீகளின் வாழ்க்கைக் கதைகளைக் கேட்டுக்கொண்டும் நகர்ந்த நாள்கள்... இப்படி அந்தப் பயணம் அவ்வளவு இனிமையானதாக இருந்தது.
முதன்முறை நான் சோலோ ட்ரிப் கிளம்பினபோது வீட்டுக்குள்ளே அழுகைக்கும் அலறல்களுக்கும் புலம்பல் களுக்கும் குறைவே இல்லை. அம்மா அப்பாவை கன்வின்ஸ் பண்றதுக்கு எனக்கு அவகாசம் தேவைப்பட்டது. முதல்ல அவங்களுக்கு என் பயண ஆர்வத்தைப் புரியவைக்க வேண்டியிருந்தது. அப்புறம் அடிக்கடி பயணம் பண்ணினேன், பிறகு தனியா பயணம் பண்ணத் தொடங்கினேன். உச்சக்கட்டமா தொலைதூரத் தனிப் பயணம்... இப்படி மெள்ள மெள்ளதான் அவங்க மனசை மாற்ற முடிஞ்சது...’’ - பெற்றோருக்குப் புரியவைத்துவிட்ட திருப்தியுடன், இன்று உலகையே தனியே வலம் வருகிறார் ஷிவ்யா.
‘`நான் ஏன் டிராவல் பண்றேன்? இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்வதுண்டு.நான் சந்திக்கிற மக்களின் நிறம், மொழி, உணவு, கலாசாரம் இப்படி எதுவுமே எனக்குப் பெருசா தெரியறதில்லை. மனசளவுல நாம எல்லாரும் ஒண்ணுதான் என்கிற எண்ணத்தைப் பயணம்தான் எனக்கு போதிச்சது. அந்த வகையில் பயணம் எனக்கொரு போதிமரம்.

பயணங்களில் கசப்பான அனுபவங்களையும் கடந்திருக்கேன். குஜராத்தில் பிரேக் டவுண் ஆன பஸ்ஸில் ராத்திரி முழுக்க பொழுதைக் கழிச்சது, கோஸ்டா ரிகாவில் என் லக்கேஜ் திருடுபோனது, எத்தியோப்பியாவில் சிலரால் பின்தொடரப்பட்டது, டொமினிகன் குடியரசில் காட்டில் தொலைந்துபோனதுனு அந்த அனுபவங்கள் நிறைய... அதுக்காக பயணங்களை நிறுத்திட முடியுமா?
சோலோ ட்ரிப் கிளம்பறதுக்கு முன்னாடி என்னைச் சுற்றிலும் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறபடி பார்த்துப்பேன். நான் போக நினைக்கிற இடத்தைப் பத்தி நிறைய தகவல்கள் திரட்டுவேன். ஹோம் ஸ்டே வசதி இருக்கானு தெரிஞ்சுப்பேன். எந்த இடத்துக்குப் போனாலும் பகல் வேளையில் அங்கே போய் சேரும்படி திட்டமிடுவேன். பாதுகாப்பை உறுதிப்படுத்திப்பேன்’’ - கவனமாகச் சொல்பவர், புத்தகம் எழுதியதன் காரணமும் சொல்கிறார்.
‘`கார்ப்பரேட் வேலையிலேருந்து பயண ஆர்வலரான கதையைப் பதிவு செய்ய நினைச்சேன். பயணங்களைப் பற்றி மக்களின் பார்வையை மாற்றணும்னு நினைச்சேன். பயணங்களின்போது நான் சந்திச்ச போராட்டங்கள், எதிர்கொண்ட சவால்கள், சாகசங்கள்னு எல்லாத்தையும் மக்களோடு பகிர்ந்துக்க நினைச்சதும் ஒரு காரணம்.’’
ஒருவரது வாழ்க்கையில் பயணம் என்ன மாற்றம் ஏற்படுத்தும் என்பதற்கு ஷிவ்யா சொல்கிற காரணம் அழகு.
‘`டிராவல் பண்ணுங்க... முடிஞ்சா தனியா டிராவல் பண்ணுங்க. ஒவ்வொரு நாளும் உங்க மேல ஏத்தப்படற சுமைகளை உதறிட்டு, உங்களுடைய முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கணும்னா அது பயணங்களினால் மட்டும்தான் சாத்தியம். நீங்க ஆசைப்பட்டதுபோல நீங்களா வாழவும் அது ஒரு வாய்ப்பளிக்கும்.’’
வாழ்ந்து பார்ப்போமே!
- சாஹா