
ஏழுக்கு ஏழு - சிரிப்பு...சிறப்பு!

நீங்கள் எடுத்த புகைப்படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது?


நீலிமா ராணி, நடிகை எனக்கு இயற்கைக் காட்சிகளைப் படம்பிடிப்பது பிடிக்கும். அதுவும், அதிகாலையிலும் மாலை வேளையிலும் விமானத்தில் பயணம் செய்யும்போது சூரிய வெளிச்சத்துடன்கூடிய மேகக்கூட்டத்தை ‘க்ளிக்’குவது ரொம்பவே பிடிக்கும். அப்படி ஓர் அழகு அது. அந்த அழகை என்று விவரிக்கவே முடியாது. அதனால், ஒவ்வொரு விமானப் பயணத்திலும் தங்க நிறத்தில் சூரியன் ஜொலிக்கும் பின்னணியில் காட்சியளிக்கும் மேகக்கூட்டங்களை ரசித்து ரசித்து போட்டோ எடுப்பேன்!
நீங்கள் எந்தப் பிரபலத்துடன் விரும்பிப் புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள்?

லாவண்யா ஸ்ரீராம், செய்தி வாசிப்பாளர் சில வாரங்களுக்கு முன்புதான் நயன்தாரா மேம்கூட போட்டோ எடுத்துக்கிட்டேன். சினிமாவில் அவங்க பல கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்காங்க. அவரை சினிமாவை விட்டே ஒதுக்கிடணும்னு நினைச்சவங்க நிறைய பேர் உண்டு. அதையெல்லாம் மீறி வளர்ந்து, இன்னிக்கு கெத்தா நிற்கிறாங்க. அதுக்காகவே அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘சிவகார்த்திகேயன் 13’ படத்துல நானும் ஒரு சின்ன கதாபாத்திரம் பண்ணிட்டு இருக்கேன். அப்போ, நயன்தாரா மேம்கிட்ட பேசி, பழகுற வாய்ப்பு கிடைச்சது. அப்போதான் இந்தப் போட்டோ வாய்ப்பும் கிடைச்சது!
உங்களுடைய திருமண ஆல்பத்தில் மிகவும் பிடித்த புகைப்படம்?

யோகி, பண்பலை தொகுப்பாளினி என் திருமணத்தின் போது, மாமாவின் கழுத்தை நான் நெரிக்கிற மாதிரியும், என் தங்கச்சி, தம்பி எல்லாம் மாமா வயிற்றில் குத்துற மாதிரியும் போட்டோ எடுத்துக்கிட்டோம். அந்த போட்டோல என் மாமா ‘ஆ..’ன்னு கத்துவாரு. அதுக்கு நாங்க கொடுத்த பதில் ரியாக்ஷனும் ‘செம்ம கியூட்! கல்யாண ஆல்பத்துலயே அந்தப் போட்டோதான் பயங்கர மாஸ். ஒருகாலத்துல வாட்ஸ்அப்ல இருந்து எல்லாத்துலயும் அதைத்தான் டிபியா வெச்சு சுத்திட்டிருந்தேன்!
உங்களுக்குப் பிடித்த செல்ஃபி?

ஸ்ரீஜா, யூடியூப் ஆர்ட்டிஸ்ட் நான் காலேஜ் படிக்கும்போது விரும்பி மூக்குத்தி குத்திக்கிட்டேன். அப்போ மூக்கு கொஞ்சம் காயமாகிடுச்சு. வலியும் இருந்துச்சு.
சின்ன வயசுலேருந்து பதினைந்து வருஷமா மூக்குத்திங்கறது எனக்குக் கனவாவே இருந்தது. அந்தக் கனவு நடந்துடுச்சுங்கற சந்தோஷத்துல, அப்பவே அந்த வலியோடு ஒரு படம் எடுத்துக்கிட்டேன். அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்ச செல்ஃபி!
உங்களைச் சிரிக்கவைக்கும் புகைப்படம் எது?

கவிதா முரளிதரன், பத்திரிகையாளர் சில வருடங்களுக்கு முன்பு, நண்பர்களோடு வண்டலூர் போனபோது எடுத்த இந்தப் படத்தில், என் கணவர் முரளியின் முகபாவனையைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு சிரிப்பாக வரும். முரளி ஒரு கார்ட்டூன் கேரக்டர் போல இருக்கிறார் என்று ஒரு தோழர் சொன்னார். அது இந்தப் புகைப்படத்தில் சி(ரி)றப்பாக வெளிப்படுகிறது!
சமீபத்தில் உங்களை பாதித்த புகைப்படம்?


தமிழ்நதி, எழுத்தாளர் நெடுங்காலம் வாழ்ந்திருக்க வேண்டிய இரண்டு இளம் குருத்துகளாகிய நந்தீஷ் - சுவாதி (ஓசூர்)இருவரையும் பெண்ணின் அப்பாவும் உறவினர்களும் சேர்ந்து அடித்துக் கொன்று, அடையாளம் தெரியாமலிருக்க அவர்களுடைய முகங்களை எரித்து, கைகால்களைக் கட்டி ஆற்றில் வீசியெறிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப் புகைப்படங்களைச் சமூக வலைதளமொன்றில் ஒரு தடவைதான் பார்த்தேன். அது தந்த வலியே யுக யுகாந்திரங்களுக்குப் போதும். சாதிப்பெருமையைக் காப்பாற்றுவதற்காக, வெறியைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் ஆணவக்கொலைகளின் பின் வெளிவரும் புகைப்படங்கள் என்னைக் கலங்கடிக்கின்றன; கொதிப்படைய வைக்கின்றன.
உங்களுக்கு யாரைப் புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்?

விஜி ராம், வழக்கறிஞர் என் செல்லத்தின் பெயர் `மிட்டாய்'. நான் மிட்டாயை விதவிதமாக போட்டோ பிடித்து ஃபேஸ்புக்கில் போடுவேன். என் மிட்டாயின் ஒவ்வொரு தருணத்தையும் படமாக எடுத்து வைத்திருக்கிறேன்.

நாங்க சின்ன வயசுல மிட்டாயைத் தூக்கிட்டு வந்ததுல இருந்து, இப்போ இருக்கிற வரைக்கும் ஏராளமான கலெக்ஷன். மிட்டாய் சோகமா இருக்கிறது, சாப்பிடறதுன்னு எல்லாத்தையும் பதிவு செய்து வெச்சிருக்கேன். மிட்டாயை ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு போட்டோவாவது எடுத்திடுவேன்!
- ப.தினேஷ்குமார்