
நேசக்காரிகள்
சமூகத்துக்கும் சக மனிதனுக் கும் ஏதாவதொரு வகையில் பங்களிப்பதன் வழியாகவே நாம் வாழ்கிற வாழ்வுக்குப் பொருள் இருக்கும் என்று சொல்லும் அகிலா, கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவரும் பணிகள் பெரும் பாராட்டுக் குரியவை.
ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றாலே கரகரக் குரலும் கண்டிப்பான தோரணையும் கொண்டவர்களுக்கு

மத்தியில் அகிலாவின் அப்பா, மிகுந்த இரக்க குணமும் உதவும் பண்பும் கொண்டவராக இருந்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே அப்பாவைப் பார்த்து வளர்ந்த அகிலாவுக்கும் அந்தக் குணம் தொற்றிக்கொண்டதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
இயற்கைப் பராமரிப்பு, சுயதொழில் பயிற்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைநலம், முதியோர்நலம் ஆகியவையே இவரின் இலக்குகள். இவை சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் தன்னார்வலராகப் பணியாற்றுவதுதான் கடந்த பத்தாண்டுகளாக அகிலாவின் வாரக் கடைசி நாள்களின் பணி.

குறிப்பாக, கடந்த இரண்டாண்டு களாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைச் சந்தித்து நம்பிக்கை ஏற்படுத்திவருகிறார். கவலையில் உழல்பவர்களுக்கு ஆறுதல் குரலாக இருப்பதோடு, அவர்களுக்கான சிகிச்சை, மருந்து மாத்திரைகளைத் தொடர்ச்சியாகக் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது, அறுவை சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் செய்து தருவது என இயங்கிவருகிறார்.
நகர்ப்புறப் பள்ளி மாணவர்களுக்கு மரம் செடிகளின் அவசியத்தை விளக்கி, வீட்டருகே அதை நடுவதற்குச் சொல்லித் தருவது, அதுகுறித்தான விழிப்பு உணர்வைக் கதைகளின் வழி ஏற்படுத்துவது, மொபைலில் மூழ்கிக்கிடக்கும் பிள்ளைகளுக்கு வியர்வைசிந்தி ஆடுகிற தமிழர்களின் மரபு விளையாட்டுகளைக் கற்றுக் கொடுப்பதென நீள்கிறது அகிலாவின் செயற்பாட்டுப் பட்டியல்.
வெளியுலகில் எந்தவொரு மாற்றத்தையும் நிகழ்த்துவதற்கு முன் அதைக் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது அகிலாவின் எண்ணம். முதலில் தன் குடும்பத்தில், பிறகு தான் வசிக்கிற காலனியில், அடுத்து நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் எனச் செய்ய விரும்புகிற காரியத்தை ஒரு வலைப்பின்னலாகப் பரவச் செய்து நிகழ்த்திக் காட்டுகிறார். தனது சமூக சேவை குணத்தை மேம்படுத்தும் விதமாக ப்ராணிக் ஹீலிங், நூலக அறிவியல் ஆகிய படிப்புகளை அதற்காகவே தேர்ந்தெடுத்துப் படித்திருக்கிறார்.
அகிலாவின் பலம் அவருடைய குடும்பம்தான். கணவன், குழந்தை இருவரும் அகிலாவைப் புரிந்துகொண்டு அவர்களும் இவருடன் சேர்ந்து பணியாற்றுகிறார்கள் என்பதுதான் அவரை இன்னும் ஊக்கப்படுத்துகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் சீனியர் புராஜெக்ட் அனலைஸ்ட்டாகப் பணிபுரியும் அகிலாவுக்கு இவருடைய நிறுவனமும் உறுதுணையாக இருக்கிறது.
“அடுத்தவர்களுக்கு அன்பு காட்டுறதைவிட நாம் உலகத்துக்கு வந்த காரணம் வேறு என்னவா இருக்க முடியும்?” என்கிற அகிலாவின் கேள்விக்கான பதிலில்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
- தமிழ்ப்பிரபா
படம் : ப.சரவணகுமார்