
எழுத்து எங்கள் ஆயுதம்

தினமும் தலைப்புச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர்களே தலைப்புச் செய்தியாகும் நிகழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேறும். பெண்ணுரிமை குறித்தும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் குறித்தும் தினம் தினம் எழுதிக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் 2018-ம் ஆண்டில் திடீரென தாங்களே அத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்வதைப் பகிரங்கமாகத் தலைப்புச் செய்தியாக்கினார்கள்.
தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களைப் பற்றிப் பேசினால்... தன்னை சந்தேகப்படுவார்கள்; வேலை போய்விடும்; இந்தச் சமூகம் கேவலமாகப் பார்க்கும்; திருமணத்தின்போது சிக்கல் ஏற்படும்; குடும்பத்துக்கு அவமானம் நேரிடும் போன்றவற்றை உடைத்தெறிந்து பெண்கள் இதுவரை பேசத் தயங்கியதை, வெளிப்படையான மனதுடன் மடைதிறந்த வெள்ளமாக முழங்கத் தொடங்கினார்கள்.
`வீடு தொடங்கி, இந்த உலகில் பெண்களுக்கு நிம்மதி தரும் இடம் என எதுவுமில்லை' என்பதை உணர்த்தும் வண்ணம் அமைந்தது அந்தப் பெண்களின் புகார்கள். இந்தப் புகார்கள் அனைத்தும் `மீ டு’ என இயக்கமாக மாறியது.
இந்த நிலையில் முன்னாள் பத்திரிகையாளரும் மத்திய அமைச்சராக இருந்தவருமான எம்.ஜே.அக்பர் மீது, 19-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய அரசு, `மீ டு’ இயக்கம் தொடர்பாக அமைச்சர்கள் உள்ளடங்கிய கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தது. இவ்வாறாக, பெண் பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை வெளிக்கொண்டு வந்ததோடு, தங்களது பணி மூலம் பெண்களுக்கு நேரும் பல்வேறு அவலங்களை, உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தபோதும் அதிகாரத்துக்கு எதிராக வெளிப்படுத்தினர்.

* பத்திரிகையாளர் சந்தியா மேனன், அவர் பணிபுரிந்த பத்திரிகைகளில் ஆசிரியர் கே.ஆர். ஸ்ரீநிவாஸ், மற்றோர் ஆசிரியர் கவுதம், துணை ஆசிரியராக இருந்த மனோஜ் ராமச்சந்திரன் உள்ளிட்டோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் குற்றம்சாட்டினார். சந்தியா மேனன் தொடங்கிய `மீ டு' பொறி, தமிழகம் வரை அனல் பறந்தது. மீ டு ரிலே டார்ச்சை தமிழகத்தில் தாங்கி பெரும் சர்ச்சைக்குள்ளானார் பாடகி சின்மயி.

* ஆங்கில இணையதளப் பத்திரிகையாளர் அனு பூயான், மணிப்பூர் மாநிலத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள் குறித்து ஆய்வுசெய்து கட்டுரை வெளியிட்டதற்காக 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதினைப் பெற்றவர். அத்தகைய துணிச்சலான பத்திரிகையாளர், சக ஆண் பத்திரிகையாளரான மயாங் ஜெயினால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதை வெளிப்படையாக முன்வைத்தார்.

* மீ டு விவகாரத்தில் மிகவும் கவனிக்கத்தக்க பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி. மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரால் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை முதன்முதலில் குறுஞ்செய்திகள், போன் கால்கள் மூலம் ஆதாரபூர்வமாக முன்வைத்தார். இதற்காக பிரியா ரமணிமீது அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது தனிக்கதை. பிரியாவின் பகிரங்கப் புகாரை அடுத்துதான் அக்பர்மீது 19 பெண்கள் புகாரளிக்க முன்வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கில இதழியலாளர் லட்சுமி சுப்ரமணியம், தமிழக ஆளுநர் பன்வாரிலாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஆளுநருக்கு எதிராக எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பான கேள்வியை எழுப்பினார். அதற்கு நேரடியாகப் பதில் அளிக்காமல் குழந்தைகளைக் கன்னத்தில் தட்டிக்கொடுப்பது போன்று லட்சுமியின் கன்னத்தில் ஆளுநர் புன்னகையோடு தட்டியதற்காகப் பொங்கி எழுந்தார் லட்சுமி. தன்னுடைய கேள்வியை எதிர்கொள்ளாமல் தன்னைக் குழந்தைபோல் பாவிப்பது ஏற்க முடியாது என்று சமூக வலைதளத்தில் ஆளுநருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவுசெய்தார் லட்சுமி. தமிழகம் மட்டுமல்லாது, தேசிய அளவில் உள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகையாளர்கள் ஆளுநர் செயல்பாட்டுக்குக் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதையடுத்து ஆளுநர் மன்னிப்பு கேட்டார்.

* கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சுயசரிதையை எழுதிய 30 ஆண்டுக்கால பத்திரிகையாளர் சாரதா உக்ராவுக்கு, இந்தியப் பத்திரிகைத்துறையில் தனி இடம் உண்டு. விளையாட்டுத்துறையில் வீராங்கனைகளுக்கு எதிராக நடந்தேறும் பாலியல் வன்முறைகளை, தொடர்ந்து அம்பலப்படுத்துகிறார் சாரதா. பிசிசிஐ செயலதிகாரி ராகுல் ஜொக்ரி மீதான பாலியல் புகார்கள் முறையாக விசாரிக்கப்

படவில்லை எனத் தைரியமாக எழுதினார்.
* சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, பருவ வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அங்கு சென்ற பெண்களுக்கு எதிராக நடந்த போராட்டம், கலவரங்கள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற சரிதா பாலன், ராதிகா ராமசாமி, பூஜா பிரசன்னா, ஸ்நேகா, முசாமி சிங் உள்ளிட்ட பெண் பத்திரிகையாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலுக்குப் பிறகும் செய்தி சேகரிக்கும் பணியை இந்தப் பெண்கள் இடைவிடாது செய்ததற்கு, பாராட்டுகள் குவிந்தன.

* அருணாசலப்பிரதேசத்தில் காடுகள் அழிப்புக்கு எதிராகத் தொடர்ந்து எழுதுபவர் டோங்கம் ரீனா. அவர் பணியாற்றும் பத்திரிகை அலுவலகத்துக்கு வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அலுவலகம் திரும்பியவர், விட்ட இடத்திலிருந்து காடுகள் அழிப்புக்கு எதிராகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்.

* நேகா தீட்ஷித், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கொலைகள் மற்றும் வன்முறைகள் குறித்து தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மருந்து கண்டுபிடிப்புகள் தொடர்பான சோதனைகளுக்கு ஏழைகள் பயன்படுத்தப் படுகிறார்கள் என்பது குறித்து இந்திய அளவில் கவனம் ஈர்க்கும்படி தொடர்ந்து எழுதிவருகிறார்.

* காஷ்மீர் வன்முறையின்போது என்கவுன்டரை மிக அருகில் புகைப்படம் எடுத்த காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் மஸ்ரத் ஜாக்ரா. இதற்காக அவரை உளவாளி என்றும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடுவோம் என்றும் வந்த மிரட்டல்களை, தொடர்ந்து எதிர்கொண்டிருக்கிறார்.


* பழங்குடிகளுக்கு ஆதரவாகவும் சுரங்கத் தொழில் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து எழுதும் பத்ம விருது பெற்ற பத்திரிகையாளர் பேட்ரிசியா முக்கிம், பட்டியலினப் பெண்களின் உரிமைகள் குறித்து எழுதும் கிறிஸ்டினா தாமஸ், சாதிய வன்முறைகள் குறித்து எழுதும் திவ்யா கண்டுகுரி, வாட்ஸ்அப்பில் போலிச் செய்திகளைப் பரப்பி வன்முறைகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆய்வுநூல் எழுதிய ஸ்னிக்தா பூனம், இந்திய இளைஞர்களின் போராட்டக் குணம் குறித்து நூல் எழுதிய நிக்கிலா ஹென்றி, பெண்கள் கிரிக்கெட் குறித்து நூல் எழுதிய காருண்யா கேஷவ் எனப் பல பெண் பத்திரிகையாளர்கள் எழுதியவை அனைத்தும் பெண்கள் உரிமைசார் போராட்டங்களின் ஆவணங்கள்.

இவர்கள் அனைவரும் தங்களது பத்திரிகையாளர் பணியை உயிருக்கு மேலாக நேசிப்பதன் மூலம் இந்தியாவின் நேசத்துக்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள்!
-சுகிதா