
உறவுகள்... உணர்வுகள்...
``முதல்நாள் ஸ்கூலுக்குப் போனபோது கொடுத்தனுப்பிய லஞ்ச் பாக்ஸ் திறக்கப்படாமலேயே திரும்பி வந்தது. சாப்பாடு வீணான கோபம் ஒருபக்கம், குழந்தை பசி யோடு இருந்திருப்பாளே என்கிற கோபம் இன்னொரு பக்கம். வழக்கம்போல நான் கத்தினேன்.
‘ஸாரி... இனிமே இப்படி நடக்காது’ எனச் சொன்னாள். அன்னிக்கு என் நிம்மதி போனது தான் மிச்சம். அந்தச் சம்பவத்தால் என் அலுவலக வேலைகளும் பாதிக்கப்பட்டன.
ஒரு வாரத்துக்குப் பிறகு மறுபடியும் அதே சம்பவம்... லஞ்ச் பாக்ஸ் அப்படியே வந்தது. அது எனக்கு ரொம்பவே களைப்பான நாள். கூச்சல்போடக்கூடத் தெம்பில்லை. கத்த வேண்டாம் என முடிவுசெய்து, அவளைக் கூப்பிட்டு அமைதியாகக் காரணம் கேட்டேன்.

‘ஸாரி... லஞ்ச் சாப்பிடக் கிளம்பினபோது `ஸ்போர்ட்ஸ் டே' வேலைகளில் உதவ ஆளில்லாம என் டீச்சர்ஸ் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தாங்க. நான் ஹெல்ப் பண்ணப் போனேன். வேலைகளை முடிச்சிட்டு வரும்போது லஞ்ச் டைம் முடிஞ்சிருச்சு. உடனே மேத்ஸ் டெஸ்ட். மிஸ் பண்ணவும் முடியலை’. அவள் தரப்பில் இப்படியொரு நியாயமான காரணம் இருக்க முடியும் என நான் கற்பனை கூடப் பண்ணிப் பார்த்திருக்கவில்லை. ஒருவேளை வழக்கம் போல நான் கூச்சல் போட்டிருந்தால் அன்றைய பொழுது எப்படி மாறியிருக்குமோ? சாப்பாட்டைக் குப்பைத் தொட்டியில வீசிவிட்டு, ‘சாப்பிட்டுட்டேன்’ என அவள் பொய் சொல்லியிருக்கலாம். ஆனால், அவள் உண்மையைச் சொன்னாள். கூச்சல் போடாமல் அமைதியாகப் பேசும்போது எதிராளி தரப்பு நியாயத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம்.''
இப்படிச் சின்னச் சின்ன விஷயங்கள்... சுவாரஸ்யமான கருத்துப் பகிர்வுகள் என நிரம்பி வழிகிறது ‘ஐ மிஸ் அண்டர்ஸ்டுட்’ புத்தகம். டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ‘பெத்தவங்க பேச்சை மதிக்கிறதே இல்லை’ என்று பெற்றோர்களும், ‘எங்க மனசைப் புரிஞ்சுக்கிறதே இல்லை’ என் பதின்பருவத்தினரும் மாறி மாறிக் குற்றம்சாட்டுவது அநேக வீடுகளின் சகஜமான நிகழ்ச்சியே. இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். புத்தகத்தை எழுதியிருப்பவர் ஆஷ்லி என்கிற டீன்ஏஜ் மகளும் அவரின் அம்மா டாக்டர் ஷர்மிளாவும். ஒட்டுமொத்த டீன்ஏஜ் பிள்ளைகளின் மனக்குரலாக ஆஷ்லியும், பெற்றோர்களின் குரலாக ஷர்மிளாவும் அவரவர் தரப்பு நியாயங்களை, தம் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து தொகுத்திருக்கிறார்கள்.
‘`ஆஷ்லிக்கு அப்போ மூணு வயசு. மெடிசின் முடிச்சிருந்த நான், மேல்படிப்புக்காக அமெரிக்கா போக வேண்டியிருந்தது. குழந்தையை விட்டுட்டுப் போக மனசில்லை. ‘நாங்க பார்த்துக்கறோம். நீ போ...’னு வீட்டுல எல்லாரும் தைரியம் சொன்னதால என் கனவை நோக்கிக் கிளம்பினேன். என்னதான் டாக்டர்னாலும் ஓர் அம்மாவா அந்தப் பிரிவை என்னால அத்தனை சீக்கிரம் ஏத்துக்க முடியலை. படிப்பை முடிச்சு, அமெரிக்காவின் நம்பர் ஒன் ஹாஸ்பிட்டலில் `அசோசியேட் டைரக்டர் ஃபார் மெடிசின்' போஸ்ட் கிடைச்சது. க்ரீன் கார்டு வாங்கிட்டு, அங்கேயே செட்டிலாகிடலாம் என்கிற மனநிலையில் இந்தியா வந்தேன்.

இந்தியா வந்தபிறகு குடும்பச் சூழல் வேறு மாதிரி மாறினது. நான் முழுநேரமும் வேலை, வேலைனு பழியா கிடந்த நேரம் அது. ஸ்கூலுக்குப் போயிட்டு வரும் ஆஷ்லியை வேலைக்காரங்க பார்த்துப்பாங்க. எனக்கும் என் கணவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த உறவைத் தக்கவைக்க முடியலை. தினம் தினம் பிரச்னைகளும் மனஸ்தாபங்களுமா வீட்டுச் சூழல் ஆஷ்லிக்கு மிகப் பெரிய மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கு. நான் சரியான நேரத்துக்கு சுதாரிச்சுக்காம இருந்திருந்தால், என் மகளையே இழந்திருப்பேன். யெஸ்... அவ தற்கொலை பண்ணிக்கிற மனநிலையில் இருந்திருக்கா’’ - தவிப்புடன் பேசும் அம்மாவை ஆற்றுப்படுத்தி தொடர்கிறார் ஆஷ்லி.
‘`டெல்லியில ஆறாவது படிச்சிட்டிருந்த டைம்ல, எனக்கும் அம்மாவுக்குமான உறவு அறவே இல்லையோங்கிற நிலை உருவானது. நார்த் இந்தியன் பொண்ணுங்களோடு ஒப்பிடும்போது என் ஸ்கின் கலர் ரொம்பக் கம்மி. கூடப் படிச்ச பசங்க என் கலரைவெச்சு என்னை கேலி பண்ணியிருக்காங்க. ஒரு பக்கம் வீட்டுல பிரச்னை... இன்னொருபக்கம் ஸ்கூல்ல பிரச்னை. என் நடவடிக்கைகளைப் பார்த்துட்டு ஸ்கூல்ல என்னை `டிஸ்லெக்சிக் சைல்டு'னு சொன்னாங்க. ஒருகட்டத்துல அம்மாகிட்ட பேசறதையே நிறுத்தினேன். `ஹேட் யூ' மெசேஜ் அனுப்பிட்டிருந்தேன். அப்போதான் தற்கொலை செய்துக்கலாமாங்கிற எண்ணம் வந்தது. வீட்டுச்சூழல் சரியில்லைனு அம்மா சென்னையில என்னை போர்டிங் ஸ்கூல்ல சேர்த்தாங்க. அந்த ஸ்கூல்ல வாரா வாரம் வீட்டுக்கு லெட்டர் எழுதணும். நானும் அம்மாவும் ஒருத்தருக்கொருத்தர் கடிதங்கள் எழுத ஆரம்பிச்சோம். அந்தக் கடிதங்கள்தான் பிளவுபட்டிருந்த எங்க உறவைச் சேர்த்து வெச்சதுனு சொல்லலாம். அம்மாவும் சென்னைக்கு வந்தாங்க. நாங்க சேர்ந்திருக்கிற நேரம் அதிகமானது. அம்மாங்கிற உறவு டீன்ஏஜ் பெண்ணுக்கு எவ்வளவு முக்கியம்னு உணர்ந்தது அங்கேதான். எங்கம்மா தனி மனுஷியா உழைக்கிறதும், போராடறதும் எனக்காகத்தானேனு புரிஞ்சது’’ - அம்மாவின் தோள் பற்றுகிறார் ஆஷ்லி.

‘`பெற்றோர், குழந்தைகளுக்கு எவ்வளவு வயசானாலும் குழந்தைங்களாகவே பார்க்கறோம். அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னோ, தெரியக்கூடாதுன்னோ எந்த விஷயத்தையும் அவங்கக்கிட்டப் பகிர்ந்துக்கிறதில்லை. ஆஷ்லியைப் பாதுகாக்கிறதா நினைச்சுக்கிட்டு எந்தப் பிரச்னையையும் அவளுக்குச் சொல்லாமலேயே மறைச்சிருக்கேன். நான் ஒரு பர்ஃபெக்ட் அம்மாவா இருக்கணும்னு போராடி, தோத்திருக்கேன். ஒருநாள் ஆஷ்லியைக் கூப்பிட்டுப் பேசினேன். என் சின்ன வயசுலேருந்து நடந்த விஷயங்களை என் முகமூடியைக் கழட்டிட்டுப் பேசினேன். புரிஞ்சுக்கிட்டா.
டீன்ஏஜ் பிள்ளைங்களுக்கும் பெற்றோர் களுக்கும் எப்போதும் பிரச்னைதான்னு ஓர் அபிப்ராயம் இருக்கு. நாங்களும் அப்படித்தான் இருந்தோம். ஒருகாலத்தில் என் பலவீனமா இருந்த என் மகள், இன்னிக்கு என் பலமா மாறியிருக்கா. எங்களால இதைச் சாதிக்க முடிஞ்சதுன்னா, மத்தவங்களாலும் ஏன் முடியாது? இந்த மாற்றம் எங்க ரெண்டு பேர்கிட்டயும் நிகழ நாங்க மட்டுமே காரணமில்லை. எங்களைச் சுற்றியிருந்தவங்க, டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு நிறைய பேரின் பங்கிருக்கு. அதைத் திரும்பக் கொடுக்க நினைச்சோம். எங்களுடைய அனுபவங்களை வெச்சு ஒரு புத்தகம் எழுதலாமேனு யோசிச்சோம். ‘ஐ மிஸ் அண்டர்ஸ்டுட்’ என்ற இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் எங்க ரெண்டு பேருடைய பார்வையில் பேசியிருக்கோம். அது மட்டுமில்லாம, ‘பேரட்டீனிங்’னு ஓர் அமைப்பையும் நடத்தறோம்’’-அம்மா நிறுத்த, அந்த முயற்சி பற்றி தொடர்கிறார் மகள்.
‘`பெற்றோர்களுக்கும் டீன்ஏஜ் பிள்ளைங் களுக்குமான ஒரு பாலம்தான் `பேரன்ட்டீனிங்’. டீன்ஏஜ் பிள்ளைங்களை பாரமா நினைக்க வேண்டியதில்லைனு பெற்றோர்களுக்குப் புரியவைக்கிற முயற்சி. முதல்கட்டமா ஃபேஸ்புக்ல பெற்றோர்களுடனும் டீன்ஏஜ் பிள்ளைகளுடனும் பேச ஆரம்பிச்சோம். டீன்ஏஜில் பெற்றோர்களும் பிள்ளைகளும் சந்திக்கிற பிரச்னைகளைப் பேசறோம். நான் பெற்றோர் களுடனும் அம்மா டீன் ஏஜ் பிள்ளைகளுடனும் பேசறோம். எங்க உறவு நெருக்கமானதுல எத்தனையோ பேர்களின் பங்கு இருக்கு. ஃபேஸ்புக் மூலமா 365 நாள்களும் நாங்க அப்படி ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்றதை வழக்கமா வெச்சிருக்கோம்'’ என்கிற மகளும் அம்மாவும் இந்த முயற்சியின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 9 அன்று சென்னையில் பெற்றோர் களுக்கான வொர்க்ஷாப் நடத்தத் திட்ட மிட்டிருக்கிறார்கள்.

‘` `நீ எதுக்கும் லாயக்கில்லை. சொல்ற பேச்சைக் கேட்கறதில்லை'னு குழந்தைகளைக் குறைகள் சொல்றோம். ‘நீ பண்ணு... உன்னால முடியும். நான் உன்கூட இருக்கேன்’ என்கிற வார்த்தைகளுக்குத்தான் பெரும்பாலான டீன்ஏஜ் பிள்ளைங்க ஏங்கறாங்க. எத்தனையோ குடும்பங்களில் டீன்ஏஜ் பிள்ளைங்க போதைப்பழக்கங்களுக்கு அடிமையாகறாங்க, கர்ப்பத்தோடு வந்து நிற்கறாங்க, பாடங்களில் ஃபெயிலாகறாங்க... பெற்றோர்களின் சின்ன சப்போர்ட்டும் நம்பிக்கையும் இருந்தா எல்லாத்தையும் சரி செய்யலாம். டீன்ஏஜ் தற்கொலையில் முன்னிலை வகிக்கிற தெற்காசிய நாடுகளில் இந்தியாவும் இருக்கு. இது பெற்றோர்கள் கவனத்துக்கு’’ - எச்சரிக்கையும் கவலையுமாகச் சொல்கிறார் ஷர்மிளா.
‘`படிப்பின் பிரஷர் தாங்க முடியாம அம்மா அப்பாகிட்ட சொல்லியிருக்கா ஒரு ஃப்ரெண்ட். ‘உனக்கொரு பிரச்னையும் இல்லை, ஒழுங்கா படி’னு சொல்லி அதுக்கு அப்படியே முற்றுப்புள்ளி வெச்சிருக்காங்க. அதனாலயே தினமும் கையில் பிளேடால் வெட்டிக்கிட்டு வருவா. பிள்ளைங்க அறைகளின் மூடின கதவுகளுக்குப் பின்னால் என்ன நடக்குதுனு பல பெற்றோர்களுக்குத் தெரியறதில்லை. டீன்ஏஜ் பிள்ளைகளைப் புரிஞ்சுக்கோங்க. உங்களுடைய விருப்பங்களை அவங்கமேல திணிக்காதீங்க. அவங்களுடைய விருப்பங்களைக் கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க. அவை நிறைவேற துணை நில்லுங்க’’ - டீன் ஏஜ் உலகின் சார்பாகப் பெற்றோர்களுக்குக் கோரிக்கை வைக்கிறார் ஆஷ்லி.
‘`வெற்றிகரமான டீன்ஏஜர்ஸ் புகார் பண்றது, எக்ஸ்கியூஸ் கேட்கறது, அடுத்தவங்களை ஜஸ்டிஃபை பண்றது... இந்த மூணு விஷயங்களையும் பண்ணமாட்டாங்க. உங்ககிட்ட இருக்கிறதை வெச்சு யாராவது ஒருவரின் வாழ்க்கையில் உங்களால சின்னதா ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமானு பாருங்க. அடுத்தவங்க வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்தற அந்த போதை உங்க வாழ்க்கையையும் சேர்த்தே மாற்றும். நீங்க பொறுப்பானவர்தான்னு உங்க பெற்றோருக்கும் உணர்த்தும்’’ - பெற்றோர்கள் தரப்பிலிருந்து பிள்ளைகளுக்கான அறிவுரையை முன்வைக்கிறார் ஷர்மிளா.
இரு தரப்பும் உணர வேண்டும். உணர்ந்தால் உறவுகள் சிறக்கும்!
-ஆர்.வைதேகி