தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

தனியே... தன்னந்தனியே...

‘`வாழ்க்கையில நிறைய விஷயங்களை நமக்காக யோசிக்காம, அடுத்தவங்களுக்காக யோசிச்சே தள்ளிப் போடறோம் அல்லது செய்யாமத் தவிர்க்கிறோம். குறிப்பா பெண்கள். அதை உணரும்போது நமக்கு வயசாகிடுது. செய்ய நினைச்ச விஷயங்களைச் செய்ய முடியாமலேயே போயிடுது. அப்படி பல பெண்களும் தவறவிடற ஓர் அற்புதம், பயணம். நம் வாழ்க்கையில் பயணங்கள் செய்யும் மாயத்தை அனுபவிச்சாதான் உணர முடியும்’’ - அவசிய மெசேஜுடன் ஆரம்பிக்கிறார் கவிதா கும்ப்ளே. மும்பையில் வசிக்கிற கவிதா இதுவரை 28 நாடுகள், ஐந்து கண்டங்கள் பயணம் செய்து முடித்திருக்கிறாராம்.

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

‘`கட்டுப்பாடுகள் நிறைஞ்ச குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். அப்பா, பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் வேலை பார்த்தார். அவருக்கு வேலையில லீவ் டிராவல் அலவன்ஸ் கிடைக்கும். அதனால எங்களை வருஷத்துக்கொருமுறை வெளியூர் கூட்டிட்டுப் போவார். அப்பா அம்மாவுக்குப் பூர்வீகம் கேரளா என்பதால், பெரும்பாலும் மும்பையிலேருந்து கேரளாவுக்குத்தான் போவோம். அதுவும் ட்ரெயின்ல போயிட்டு, ஊருக்குத் திரும்பற அந்தப் பயணம் என்னைப் பெருசா ஈர்க்கலை. அப்பா ரிடையரானதும் அம்மா ருக்மணி, இந்தியா முழுக்க டிராவல் பண்ண ஆரம்பிச்சாங்க. மொபைல்போன் இல்லாத காலத்துலேயே சாதாரண கேமராவில் நிறைய போட்டோஸ் எடுத்துட்டு வருவாங்க. என்னைத் தனியா விட்டுட்டுத்தான் போவாங்க. டிராவல் விஷயத்துல அம்மாதான் எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன்.

மேனேஜ்மென்ட்டில் போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சேன். சிட்டி பேங்க்கில் வேலை கிடைச்சது. அந்த வேலையில் நிறைய வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்பு உண்டானது. அவர்களில் பலரும் அடிக்கடி டிராவல் பண்றவங்க. அப்படி ஒரு கஸ்டமர்தான் எனக்கு டிராவல் ஆர்வத்தைத் தூண்டினாங்க.

யோசிச்சுப் பார்த்ததுல நாம நமக்குனு என்னதான் செய்துக்கறோம்னு தோணுச்சு. வீட்டை யார் பார்த்துப்பாங்க, கணவரையும், குழந்தைங்களையும், மாமனார் மாமியாரையும் யார் கவனிச்சுப்பாங்கனு யோசிச்சே டிராவல் பண்றதைத் தவிர்க்கறோம். ஆனா, ஒவ்வொரு பெண்ணுக்கும் குடும்பம், வீட்டுப் பொறுப்புகளைத் தாண்டி, ஓர் உலகம் இருக்குனு புரிஞ்சது’’ - வாடிக்கையாள நண்பரால் வந்த ஞானோதயம், கவிதாவின் பயண ஆர்வத்தைத் தூசு தட்டியிருக்கிறது.

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

‘`கல்யாணமானதும் கணவருடனும் என் மகளுடனும் டிராவல் பண்ண ஆரம்பிச்சேன். ஆனா, அதுவும் குறிப்பிட்ட இடங்களுக்கு, குறிப்பிட்ட தூரத்துக்குள்ளான டிராவலாகவே இருந்தது. 15 வருஷங்களா பார்த்திட்டிருந்த பேங்க் வேலையை ரிசைன் பண்ணிட்டு ஒரு பிரேக் எடுத்துக்கிட்டேன். முதல் வேலையா சோலோ டிராவல் பண்ணினேன். ஆனா, வீட்டுல யாருக்கும் அதுல சம்மதமில்லை. ‘எதுக்குத் தனியா போகணும்? பாதுகாப்பிருக்காதே’னு பயந்தாங்க. ‘இல்லை... என்னால சமாளிக்க முடியும்’னு சொல்லிட்டுக் கிளம்பினேன். டென்மார்க், ஸ்வீடன்,  நார்வே போறதா ப்ளான். ஒருவழியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணிட்டுக் கிளம்பிட்டாலும், ஒரே படபடப்பு, நடுக்கம். ஆனா, நான் நினைச்ச மாதிரி இல்லாம என் முதல் சோலோ ட்ரிப் சூப்பரான அனுபவமா அமைஞ்சது. அந்த ட்ரிப்பில் எனக்குக் கிடைச்ச ஃப்ரெண்ட்ஸ் இன்னும் தொடர்பில் இருக்காங்க. நட்பை மட்டுமில்லை, இன்னும் நிறைய அழகான விஷயங்களைப் பயணங்கள் நமக்குத் தேடித்தரும்’’ - ரசித்துச் சொல்பவர்,  தனிமையில் செல்கிற பயணமே சிறந்தது என்கிறார். காரணங்கள் இல்லாமல் இல்லை.

‘`யாருக்காகவும் நீங்க அட்ஜஸ்ட் பண்ண வேண்டாம். உங்களுக்கு நீங்கதான் பாஸ். நினைச்ச நேரத்துக்கு நினைச்ச விஷயங்களைச் செய்யற அந்த சுதந்திரம், கூட்டமா போகும்போது நிச்சயம் கிடைக்காது.

அதேநேரம் தனியே டிராவல் பண்ணும்போது உங்க பாதுகாப்பையும் நீங்க யோசிக்கணும். எங்கே போறீங்க, உங்களைச் சுற்றி உள்ள மனிதர்கள் எப்படிப்பட்டவங்கனு தெரிஞ்சிருக்கணும். சவுத் அமெரிக்கா போகும்போது எனக்கு அந்த பயமிருந்தது. அதனால பெப்பர் ஸ்பிரே எடுத்துட்டுப் போனேன். நல்லவேளையா அதைப் பயன்படுத்த வேண்டிய வாய்ப்பு வரலை. நாம எப்படி நடந்துக்கிறோம் என்பதும் முக்கியம். நம் எல்லை தெரிஞ்சு, கவனமா இருந்தா, தப்பான எண்ணத்துடன் அணுகற ஆண்களும் அந்த எல்லையைத் தாண்டி வர மாட்டாங்க’’ - தனிப் பயணத்தின் ப்ளஸ், மைனஸ் பகிர்பவர், கும்பமேளா கிளம்பும் ஆயத்தங்களில் இருக்கிறார்.

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

‘`போன வருஷம் கென்யா, ஸ்பெயின், பாலி தீவுக்குப் போயிட்டு வந்தேன். ஸ்பெயின் போனபோது அங்கே உள்ள டான்ஸ் ஸ்கூல்ல டான்ஸ் கத்துக்கிட்டு வந்தேன். இப்படி நான் போகிற இடங்களில் எனக்குப் பிடிச்ச விஷயங்களையும் செய்வேன். ஜோர்டான் போனபோது அங்கே இஸ்லாமியப் பெண்கள் புர்கா அணியாம வெளியே வரமுடியாத நிலையில இருக்கிறதைப் பார்த்தேன். இந்தியாவில் நாமெல்லாம் எவ்வளவு சுதந்திரமா இருக்கோம்னு தோணுச்சு’’ -  பயணங்கள் பார்வையை விசாலமாக்கும் என்பதை உணர்த்துகிறது கவிதாவின் பேச்சு.

‘`டிராவல் பண்ற நேரம் எனக்கானது மட்டுமே. குடும்பம், வேலைனு வேறு எந்தச் சிந்தனையும் இருக்காது. கணவர் வினய் கும்ப்ளே, மகள் ஜியா கும்ப்ளே. ரெண்டு பேர்கிட்டயும் நான் பத்திரமா, பாதுகாப்பா டிராவல் பண்ணிட்டிருக்கேன் என்ற தகவலை மட்டும் உறுதிப்படுத்துவேன். மத்தபடி நொடிக்கொரு முறை போன் பண்ணி பேசற பழக்கமெல்லாம் எனக்கில்லை. மகளுக்கு 15 வயசு, பத்தாவது படிக்கிறாள். ‘பொண்ணுக்கு போர்டு எக்சாம்ஸ் வருது... நீ டிராவல் பண்றியே’னு கேட்காத ஆளே இல்லை. அவளுடைய படிப்பை அவளே பார்த்துப்பா. அந்தப் பக்குவத்தை அவளுக்குக் கத்துக் கொடுத்திருக்கேன்’’ - அசத்தலாகச் சொல்கிற அம்மாவுக்கு, பாகிஸ்தான் செல்வதே கனவுப் பயணமாம்!

‘`இந்தியா-பாகிஸ்தான் வரலாறு எனக்குள்ளே ஏற்படுத்தின தாக்கம்தான் காரணம். பாகிஸ்தான் கலாசாரம், அந்த நாட்டின் அழகுனு நிறைய விஷயங்களைத் தேடித் தேடிப் படிச்சிட்டிருக்கேன். ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்.

ஒருநாள் என் கனவு நிச்சயம் நனவாகும்! - கவிதா கும்ப்ளே

ஓரிடத்துக்குப் போகும் முன், பெரும்பாலான மக்கள், அந்த இடத்தைப் பத்தின முன்தீர்மானங்களோடு போறாங்க. நான் எந்த எதிர்பார்ப்பும், எந்தக் கணிப்பும் இல்லாமதான் டிராவல் பண்ணுவேன். அப்படிப் போகும்போது அந்த இடம் நமக்கு வேறு சுவாரஸ்யங்களைத் தரும்’’ - புதிய கோணத்தில் யோசிப்பவர், தன் நண்பரின் வலைதளத்தில் கெஸ்ட் ரைட்டராகத் தன் பயண அனுபவங்களை எழுதுகிறாராம். பெண்களுக்குப் பயண ஆர்வத்தை ஏற்படுத்துவதும், பயணம் ஏற்படுத்தும் மாற்றத்தை அவர்களை உணரவைப்பதும், நிறைய நிறைய டிராவல் செய்வதுமே கவிதாவின் ஆசைகள்.

நிறைவேறட்டும்!

-சாஹா