
நீங்களும் செய்யலாம்
மனநிலையை மாற்றுவதில் நறுமணங்களுக்கு முக்கிய பங்குண்டு. ஊதுவத்தி ஏற்றிவைத்த பிறகோ, ரூம் ஸ்பிரே அடித்த பிறகோ வீட்டின் சூழலே ரம்மியமாக மாறிப்போவதை உணரலாம்.
மணக்கும் மல்லிகைப் பூவின் மணமும் இழுக்கும் ரோஜாவின் வாசனையும்கூட சட்டென மனநிலையை மாற்றும். அப்படித்தான் வாசனைத் திரவியங்களும். அடுத்தவரை முகம் சுளிக்கவைக்கிற அளவுக்கு இல்லாமல், மனதை வருடும் மெல்லிய வாசனைகொண்ட பெர்ஃப்யூம், அதை உபயோகிப்பவருக்கு மட்டுமன்றி அவர் இருக்கும் சூழலையே மாற்றும்.

‘சென்ட் வாங்கவெல்லாம் பட்ஜெட்டில் இடமில்லை’ என்கிற நடுத்தர வர்க்கத்து நபர்களுக்கு நல்ல சேதி சொல்கிறார் சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த ராணி. மிகக்குறைந்த அளவு முதலீட்டில், அதிக நேரத்தையோ, உழைப்பையோ செலவிடாமல் வீட்டிலேயே சென்ட் தயாரித்து விற்பனை செய்யவும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார் அவர்.
‘`நிறைய கைவினைக் கலைகள் தெரியும். புது விஷயங்களைத் தேடித் தேடிக் கத்துக்கிறதுல எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்னாடி சென்ட் தயாரிப்பு கத்துக்கிட்டேன். கடைகளில் சென்ட் வாங்கணும்னா குறைஞ்சது 300 ரூபாயாவது செலவாகும். நாமே செய்யும் போது 100 ரூபாய்க்குள் அடங்கிடும். ஆர்வத்தின் பேரில் நான் தயாரிச்ச சென்ட் பாட்டில்களை முதல்ல அன்பளிப்பா கொடுத்துக்கிட்டிருந்தேன். உபயோகிச்சவங்க சூப்பரா இருக்குனு பாராட்டி, வேற வேற வாசனைகளில் ஆர்டர் கொடுத்தாங்க. அப்படித்தான் இதை இன்னிக்கு ஒரு பிசினஸாகவும் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்...’’ என்கிற ராணி, சென்ட் தயாரிப்புக்கான அத்தனை ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
எத்தனை வகை? என்ன ஸ்பெஷல்?
ஜவ்வாது, லாவண்டர், மல்லிகை, ரோஜா, சந்தனம், மரிக்கொழுந்து, அத்தர்... இப்படி ஏகப்பட்ட மணங்களில் சென்ட் தயாரிக்கலாம். உடைகளில் கறை படியாது. வாசனை தலைவலியைத் தராது என்பதுதான் ஸ்பெஷல்.

என்னென்ன தேவை? முதலீடு?
ஆல்கஹால், எசென்ஸ், ஆயில், காலி பாட்டில்கள் எனத் தேவையான அனைத்துப் பொருள்களுக்கும் சேர்த்து 1,000 ரூபாய் முதலீடு தேவை. சென்ட் தயாரிக்க பெரிய மெஷின்களோ, இடவசதியோ தேவையில்லை. எந்த பாட்டிலில் நிரப்பப் போகிறோமோ, அதிலேயே நேரடியாகக் கலந்துவிடலாம்.
விற்பனை வாய்ப்பு? லாபம்?
இருமடங்கு லாபம் தரும் பிசினஸ் இது. 50 மி.லி, 100 மி.லி, 150 மி.லி அளவுள்ள பாட்டில்களில் விற்கலாம். வாசனை மற்றும் மூலப் பொருள்களைப் பொறுத்து 200 ரூபாயிலிருந்து விற்றாலே லாபம்தான்.
முதல்கட்டமாக அக்கம்பக்கத்தினர், வீட்டின் அருகிலுள்ள சின்ன கடைகளுக்கு சப்ளை செய்யலாம். வாசனை பிடித்தால் அதுவே உங்களுக்கான விளம்பரமாக மாறி, ஆர்டர்களை அள்ளிக்கொடுக்கும்.
எதில் கவனம் தேவை?
கெமிக்கல் சேர்த்தே தயாரிக்கப்படுவதால், கலவையில் கவனம் தேவை. எந்தெந்த அளவுகளில் கலக்க வேண்டுமோ அவ்வளவுதான் கலக்க வேண்டும். அளவு கூடினால் உடைகளில் கறை படியலாம்.
பயிற்சி?
ஒருநாள் பயிற்சியில் சென்ட் தயாரிப்பைக் கற்றுக்கொள்ளலாம். இதே முறையில் சில வித்தியாசங்கள் செய்தால் ரூம் ஸ்பிரேவும் ரெடி பண்ணலாம். இரண்டுக்கும் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 1,000 ரூபாய்.
-சாஹா
படங்கள் : ப. பிரியங்கா