தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

முதல் பெண்கள்: ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - டி.எஸ்.கனகா

முதல் பெண்கள்: ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - டி.எஸ்.கனகா
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் பெண்கள்: ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - டி.எஸ்.கனகா

ஆழ் மூளை தூண்டல் அறுவை சிகிச்சை செய்த இந்தியாவின் முதல் நரம்பியல் நிபுணர்ஹம்சத்வனி - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

“நரம்பியல் துறைக்குள் நுழைவதே அன்றைய காலகட்டத்தில் பெரும் சவாலாக இருந்தது. துறையின் தலைவர் என் கைக்கு கத்தியே கிடைக்கவிடாமல் இருக்க எல்லா திரைமறைவு வேலைகளையும் செய்துவந்தார்...”
- டி.எஸ்.கனகா, 2016.

சென்னை நகரில் 1932 மார்ச் 31 அன்று தஞ்சாவூர் சந்தானகிருஷ்ணன் - பத்மாவதி தம்பதிக்கு மகளாகப் பிறந்தார் கனகா. நான்கு சகோதரர்கள், நான்கு சகோதரிகள் என்று பெரிய குடும்பம். அனைவரும் கல்வியில் படுசுட்டி. 1954-ம் ஆண்டு மருத்துவர் பட்டப் படிப்பை முடித்த கனகா, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ். (பொது மருத்துவம்) சேர்ந்தார்.

மருத்துவப்படிப்பின்போது வலிப்பு நோயால் அவதிப்பட்ட தன் சகோதரியின் கணவரை அதிலிருந்து எப்படி மீட்பது என்று பரபரத்தார். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்துவந்த பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணரான பி.ராமமூர்த்தியிடம் கேள்விமேல் கேள்வி கேட்க, அவரோ `பொது மருத்துவப்படிப்பு முடித்துவிட்டு வா, நரம்பியல் கற்றுக்கொள்ளலாம்’ என்று சொன்னார். அதை ஆணித்தரமாகத் தன் மனதில் இருத்திக்கொண்டார் கனகா.

முதல் பெண்கள்: ஆசியாவின் முதல் பெண் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - டி.எஸ்.கனகா

அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி அமர்நாத்மீது கனகா அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். இவர் எம்.எஸ். சேர்ந்தபோது ஒன்பது வயதுச் சுட்டிப் பையனாக வளைய வந்த அமர்நாத் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து நோய்வாய்ப்பட, என்ன நோய் என்று கண்டறிய முடியாமலேயே திணறினார்கள். கிட்டத்தட்ட மூன்றாண்டுகள், இரண்டு பெரிய அறுவை சிகிச்சைகள் என்று பெரும் துன்பம் அனுபவித்த சிறுவன் மரணமடைய, வாழ்க்கையின் அர்த்தம் தொலைந்தாற்போல உணர்ந்தார் கனகா. ஆன்மிகம் பக்கம் மனதைத் திருப்ப முயன்றார். `திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை; பொதுநலனே தன் வாழ்வின் லட்சியம்’ என்று முடிவெடுத்தார். இறுதிவரை இந்த மன உறுதி குன்றாமல் சமூகநலனுக்காக வாழ்ந்தார்.

எம்.எஸ். படித்து முடிக்க மிகவும் சிரமப்பட்டார் கனகா. இறுதித் தேர்வில் ஆறு முறை படையெடுப்பு! ஒவ்வொரு முறையும் மும்பையிலிருந்து வந்த வெளி ஆய்வாளர் இவருக்கு சரியான மதிப்பெண் வழங்காமல் தோல்வியடையச் செய்தார். ஒருவழியாக 1962-ம் ஆண்டு எம்.எஸ். படித்து முடித்தவுடன், இந்திய ராணுவத்தில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியேற்றார் கனகா. இந்தோ - சீனப் போர் நடந்துகொண்டிருந்த கொந்தளிப்பான நேரம் அது. ஆனால், உடல்நலக் குறைவால் தொடர்ந்து அவரால் ராணுவத்தில் இயங்க முடியவில்லை.

மதராஸ் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் உயர்படிப்பில் மீண்டும் சேர்ந்தார். 1968-ம் ஆண்டில் எம்.சி.ஹெச் பட்டம் பெற்றவர், 1972-ம் ஆண்டு முனைவர் பட்டமும் பெற்றார். ஆழ் மூளை தூண்டல் (டீப் பிரெய்ன் சிமுலேஷன்) அறுவை சிகிச்சையை 1975-ம் ஆண்டு இந்தியாவில் முதன்முறையாக நிகழ்த்திக்காட்டினார். அந்தக் காலகட்டத்தில் டோக்கியோவில் நடைபெற்ற நரம்பியல் நிபுணர்கள் மாநாட்டில்  பங்கேற்று ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்த ஒரே பெண் இவரே!

அதன்பின் அமெரிக்கா, துருக்கி, இங்கிலாந்து என்று உலகம் முழுக்கச் சுற்றி, தன் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார். உலகின் மிகவும் மரியாதைக்குரிய பெண் நரம்பியல் நிபுணர்களில் ஒருவரானார். பார்க்கின்சன்ஸ் நோய்க்குச் சிறுதுளை அறுவை சிகிச்சைகளைக் குறைந்த செலவில் முதியோருக்குச் செய்துவந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் திருப்பதி திருமலை தேவஸ்தான குழுவுடன் இணைந்து மருத்துவத் தொண்டாற்றினார். 2006-ம் ஆண்டு சர்வதேச நரம்பியல் மாநாட்டில் கனகாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார் அப்போதைய தமிழக ஆளுநர் பர்னாலா. தன்னலமற்ற மருத்துவச் சேவைக்கான `ஹெலன் தாசிக்' விருதையும் கனகா பெற்றார்.

ரத்த தானம் செய்வதிலும் அதீத ஈடுபாடு கொண்டவர் கனகா. அந்தக் காலத்திலேயே மொத்த குடும்பமுமே நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்துவந்தது. 139-வது முறையாக ரத்த தான சாதனை செய்து லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (2004) இடம்பெற்றார். மருத்துவமனையே வீடு என்று மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே 40 ஆண்டுகள் தங்கிவிட்டார் கனகா. 1990-ம் ஆண்டு பணி ஓய்வுபெற்றார்.

ஞாபகமறதி, தூக்கமின்மை, அதீத மன அழுத்தம், சோர்வு, நடுக்கம், வலி, சுயநினைவின்றி விழுந்து எழுவது போன்ற முதியவர்களைத் தாக்கும் நோய்களுக்கு நல்ல மருந்து, அவர்களுடன் நேரம் செலவழித்து அவர்கள் சொல்வதைக்கேட்டு மருந்து தருவதே என்பதை உணர்ந்திருந்தார் கனகா. தன் பெற்றோர் பெயரால் சந்தானகிருஷ்ண பத்மாவதி ஹெல்த் கேர் மற்றும் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்ற இலவச மருத்துவமனையை வீட்டிலேயே தன் இறுதிக்காலம் வரை நிர்வகித்து வந்தார் கனகா. 1996-ம் ஆண்டு ஆசிய பெண் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார். தன் வாழ்நாள் முடிவதற்குள் எப்படியாவது குறைந்த விலை ஆழ் மூளை தூண்டல் கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்துவிட வேண்டும் என்ற இவரது கனவு கனவாகவே முடிந்து போனது.

“குறைந்த விலை கருவிகள் இங்கேயே உற்பத்தி செய்யப்படாத வரை என் கனவு நிறைவேறப்போவதில்லை” என்று சொல்லிவந்த கனகா, 2018 நவம்பர் 14 அன்று மரணமடைந்தார்.

-ஹம்சத்வனி 

ஓவியம் :  கார்த்திகேயன் மேடி