
தயக்கம் என்ன?
``பெண்ணுரிமைகள், பெண் சுதந்திரம் பற்றிப் பேசுறோம். ஆனா, குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டணும்னா, நம்மை நோக்கிப் பாயும் பார்வைகளுக்குப் பயந்து மறைவிடங்களைத் தேடுறது மட்டும் இன்னமும் குறையவேயில்லை. சிலர் தாய்ப்பால் கொடுக்கிறதையே தவிர்த்திடுறாங்க. அது அம்மாக்களின் உரிமைன்னோ, வெட்கப்படவேண்டிய விஷயமில்லைன்னோ யாரும் யோசிக்கிறதேயில்லை. அதை உணர்த்துறதுக்கான முயற்சிதான் என் புகைப்படங்கள்’’ - புன்னகையுடன் பேசுகிறார் நேஹா சோப்ரா.

இவர், மும்பையைச் சேர்ந்த போட்டோகிராபர். வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கும் `பர்த் போட்டோகிராபி’யை (பிரசவ நிகழ்ச்சி) இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். அதன் தொடர்ச்சியாகப் பெண்கள் தாய்ப்பால் ஊட்டும் படங்களையும் பதிவேற்றி பிரபலமானவர். `ஸ்டோரியஸ்லி’ என்கிற பெயரில் கணவருடன் இணைந்து க்ரியேட்டிவ் ஸ்டுடியோ நடத்துபவர்.
``புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நானும் என் கணவர் தீபக்கும் ஒண்ணா படிச்சோம். டைரக்ஷனில் ஆர்வமா இருந்த என்னை, போட்டோகிராபி பக்கம் திருப்பியவர் தீபக். என் பிரசவத்தைப் பார்க்கிற வாய்ப்பை நான் மிஸ்பண்ணதுல எனக்கிருந்த வருத்தம் அவருக்கும் தெரியும். பர்த் போட்டோகிராபி மூலமா அந்த வருத்தம் மாறும், எனக்கு ஆறுதலா இருக்கும்னு தீபக் நம்பினார். அந்த நம்பிக்கைதான் என்னை போட்டோகிராபரா ஆக்கியிருக்கு. என்னை முழுமையான போட்டோகிராபர்னு சொல்லிக்கவே கூச்சமா இருக்கு. இன்னும்கூட லைட்டிங்கும் காம்போசிஷனும் கத்துக்கிட்டிருக்கேன்’’ - தன்னடக்கத்துடன் சொன்னாலும், நேஹாவின் கேமரா எழுதும் கவிதைகளே அவரது நிபுணத்துவம் பேசுகின்றன.
நாமெல்லாம் `பிரசவ அறைக்குள் கணவரை அனுமதிக்கலாமா?’ என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், அங்கே போட்டோகிராபரையே அனுமதிக்கும் மாபெரும் மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது நேஹாவின் புரட்சி முயற்சி!

``எல்லாரையும்போல பிரசவம் என்பது வலி நிறைஞ்ச, பயங்கரமான அனுபவமா இருக்கும்னுதான் நானும் நம்பிக்கிட்டிருந்தேன். சுகப்பிரசவத்தைப் பற்றி எனக்கு யாரும் சொல்லித்தரலை. ஆபரேஷனுக்காகக் கொடுக்கப்பட்ட மயக்கத்தில் என் குழந்தை இந்த உலகத்துக்கு வந்த அந்தத் தருணத்தை நேருக்குநேர் பார்க்கத் தவறிட்டேன். முதன்முதல்ல அவளை என் கையில வாங்கும் அற்புதத்தையும் மிஸ்பண்ணிட்டேன். திரும்பக் கிடைக்காத அனுபவம் அது.
2016-ம் வருஷம்தான் அந்த அற்புதம் நடந்தது. நிஷா - ஜிதேந்திரானு அழகான ஜோடி. தண்ணீருக்குள் நிகழும் `ஹிப்னோ பர்த்திங்’ முறையில குழந்தை பெத்துக்க முடிவு பண்ணியிருந்தாங்க. அதுதான் என் முதல் பர்த் போட்டோகிராபி. குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு எதிர்பார்ப்புகளும் திட்டமிடல்களும் இல்லாத தருணம் அது. கிட்டத்தட்ட எனக்குமே அப்படித்தான் இருந்தது. சினிமாவிலும், டி.வி நிகழ்ச்சிகளிலும் நாம் பார்த்த காட்சிகள், பிரசவவலியால் பெண் துடிக்கிறதையும், அலறுவதையும் அழுவதையும்தான் நம் மனசுல பதியவெச்சிருக்கு.

சொன்னா நம்பமாட்டீங்க... ஹிப்னோ பர்த்திங் முறையில் குழந்தை பெத்துக்கிட்ட பெண் சின்னதாக்கூட சிணுங்கலை. அவங்க கிட்ட அவ்வளவு அமைதி. பக்கத்துலேயே நின்னு தைரியம் சொன்ன கணவரின் பொறுமையைப் பார்த்து பிரமிச்சுப்போனேன். அதுலேருந்து பர்த் போட்டோகிராபியில ஆர்வம்காட்ட ஆரம்பிச்சேன். ஒவ்வொரு பிரசவமும் ஒரு கதை சொல்லும். அந்தப் பெண்ணுக்கு அவள் உடலைப் பற்றித் தெரிஞ்சுக்கிற வாய்ப்பைக் கொடுக்கும். சந்தோஷமான, ஆரோக்கியமான குழந்தையை இந்த உலகத்துக்கு வரவேற்கும் தருணத்தை டாகுமென்ட் பண்ற, கர்ப்பிணிகளின் பயத்தைப் போக்கி நம்பிக்கையைக் கொடுக்கிற இந்த வேலையை நான் அவ்வளவு நேசிக்கிறேன்’’ அனுபவச் சிலிர்ப்புகள் பகிர்பவருக்கு, இந்த வேலையில் சவால்களுக்கும் குறைவில்லை.
``பர்த் போட்டோகிராபிக்கு சம்மதிக்க வைக்கிறது மட்டுமில்லை, அதுக்குப் பிறகுதான் இருக்கு உண்மையான சவாலே! முதலில் ஓகே சொல்லிட்டு, கடைசி நிமிஷத்தில் அந்த முடிவை மாத்திக்கிட்ட தம்பதியர் பலரைப் பார்த்திருக்கேன். அதையெல்லாம் தாண்டி பிரசவத்தை லைவா படம்பிடிக்கிற அந்த த்ரில் வேற லெவல்’’ - வார்த்தைகளின் ஊடே அந்த த்ரில்லை நம்மையும் உணரச்செய்கிற நேஹாவைப் பிரபலப்படுத்தியவை அவர் எடுத்த பிரெஸ்ட் ஃபீடிங் புகைப்படங்கள்தாம்.

``என் குழந்தை நூருக்கு, ஐந்து வயசாகிற வரைக்கும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுக்கணும்னு நினைச்சாலும் அதுக்கான வாய்ப்பும் விழிப்புஉணர்வும் இல்லாத பல அம்மாக்களை நான் பார்த்திருக்கேன். ஆபரேஷன் ஆன காரணத்தால சிலரால் தாய்ப்பால் கொடுக்க முடியறதில்லை. பால் சுரக்கலைங்கிறதுக்காக பால் கொடுக்கிறதைச் சீக்கிரமே நிறுத்துறவங்களும் இருக்காங்க. குழந்தை வளர்ந்துடுச்சுனு நிறுத்துறவங்க இன்னொரு ரகம். ஆகமொத்தத்துல, இந்தச் சமூகம் தவறான கற்பிதங்களின் மூலமும், தவறான வழிகாட்டுதல்களின் மூலமும் பெண்களின் நம்பிக் கையைச் சிதைச்சு, அவங்களை குற்ற உணர்வுக்குள் தள்ளுது.
இதையெல்லாம்விட, பொதுவெளிகள்ல தாய்ப்பால் கொடுக்கிறதுல அம்மாக்களுக்கு உள்ள அநியாயத் தயக்கம்தான் தாய்ப்பால் கொடுக்காததற்கு மிகப்பெரிய காரணமா இருக்கு. அந்தத் தயக்கத்தை விட்டொழிச்சாதான் தாய்ப்பால் கொடுக்கிறது இயல்பான விஷயமா மாறும்னு நினைச்சேன்.

ஃபேஸ்புக்கில் `பிரெஸ்ட் ஃபீடிங் அவேர்னெஸ் புராஜெக்ட்’ இயக்கம் என்னைக் கவர்ந்தது. இதற்காக பொது இடங்கள்ல பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் படங்களை எடுக்க ஆரம்பிச்சேன். இந்தப் படங்கள் மூலமா தாய்ப்பால் ஊட்டுவதைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்தி, அதைக் கொண்டாடும் ஒரு செயலா பார்க்க வைக்கிறதுதான் என் படங்களின் நோக்கம். `என் உடல் என் உரிமை’ என்பதை ஒவ்வொரு பெண்ணும் உணரணும். கணவர் உட்பட வேறு யாரும் அவளது உடல் தொடர்பான விஷயங்களுக்குக் கட்டுப்பாடுகள் போட அனுமதியில்லை. எத்தனை மாசத்துக்கு தாய்ப்பால் கொடுக்கணும் என்பது அவளுடைய தனிப்பட்ட முடிவு. தாய்ப்பால் கொடுக்கிறதுல மட்டுமல்லாம, பெண்ணுடல் குறித்த பரிகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதுக்கான முயற்சியாகவும் இந்த போட்டோகிராபியைப் பார்க்கிறேன்.’’
நேசமான முயற்சியால் நெஞ்சம் நிறைக்கிறார் நேஹா!
- ஆர்.வைதேகி