தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்

இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்

வித்தியாசம்

வேறு எவரும் ஈடுபட தயங்கும் அரிதான ஆபத்தான செயல்களை, துணிச்சலான சில பெண்கள் அநாயாசமாகச் செய்து வரலாறு படைத்துவருகின்றனர். அப்படிப்பட்ட சாதனைப் பெண்களில் ஒருவர்தான் லியா விஸின்ஸ்.

தனி ஒருவராகக் குதிரையில் சவாரி செய்துகொண்டே, தன்னை மூர்க்கத்தனமாகத் தாக்க வரும் காளையிடமிருந்து தப்பி, அதைத் தோற்கடிக்க வேண்டும். அதேநேரம், தான் சவாரி செய்யும் குதிரையை காளையின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் வகையில் லாகவமாகச் செலுத்த வேண்டும். இந்த சாகச விளையாட்டில் சாதித்துக் காட்டி, லட்சக்கணக்கான ரசிகர்களைத் தன்வசம் வைத்திருக்கிறார் பிரான்ஸைச் சேர்ந்த லியா.

இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்

குதிரைகளைப் பழக்கும் குடும்பத்தில் பிறந்ததால், லியாவுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே குதிரைகள்மீது தனி ஈடுபாடு. கட்டுக்கோப்பான செயல்களைச் செய்ய குதிரையைப் பழக்குவதிலும், முறையாகப் பயிற்சி அளித்து ஈக்வெஸ்ட்ரியன், போலோ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதிலும் முதன்மைத் தேர்ச்சிபெற்றார் லியா.

இவருடைய அசாத்திய திறமையை அறிந்த குதிரை பயிற்சியாளர் டான் ஏஞ்சல் பெரால்டா, தன்னுடைய குழுவில் லியாவைச் சேர்த்துக்கொண்டார். குதிரையில் சவாரி செய்தபடியே காளையை அடக்கும் போட்டியிலும் சிறப்புப் பயிற்சி அளித்தார். நான்கு ஆண்டுகளாக, தினமும் 10 மணி நேரம் மேற்கொண்ட பயிற்சி, லியாவை காளைச் சண்டை விற்பன்னராக  மாற்றியது.

இன்று ஸ்பெயின் நாட்டின் மிகப் பெரிய திறந்தவெளி அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரங்களுக்கு இடையில் காளைகளை அநாயாசமாக அடக்கிப் புகழ்பெற்ற வீராங்கனையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் லியா. இதுவரை 27 சண்டைகளில் 70-க்கும் மேற்பட்ட காளைகளை வீழ்த்தியுள்ளார்.

``உலகம் முழுவதும் என் வயதில் உள்ள பெண்கள் என்ன செய்வார்களோ, அதையே நான் செய்ய விரும்பவில்லை. காளைச் சண்டையில் உயிருக்கு ஆபத்து என்பது நிதர்சனம். ஆனால், இதிலிருக்கும் த்ரில் வேறு எதிலும் இல்லையே!'' என்கிறார் லியா.

இந்த த்ரில் வேறு எதிலும் இல்லை! - காளைச் சண்டையில் சாதனை படைக்கும் வீராங்கனை லியா விஸின்ஸ்

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு சண்டையின்போது, மரணத்தின் விளிம்பு வரை சென்றுள்ளார். ஈட்டியால் தாக்கப்பட்டு பலமாக காயமடைந்த ஒரு காளை, திடீரென இவரது குதிரையைத் தாக்கி, இவரைத் தூக்கி வீசியது. மண்ணில் விழுந்தவரை, அது மீண்டும் மூர்க்கத்தனமான தாக்கியது. மயிரிழையில் உயிர் தப்பிய அவர், காளையைக் கொன்று வாகை சூடினார்.

``காளைச் சண்டையின்போது, மாட்டின் தோளில் ஈட்டியைக் குத்தும் ஒரு வீராங்கனையாக மாற துணிச்சல், மன உறுதி, அர்ப்பணிப்பு ஆகியவை தேவை. திருமணம், குடும்பம், குழந்தைகள் என்பதெல்லாம் எனக்கு இப்போது இரண்டாம்பட்சம்தான். பிற்காலத்தில் நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன்” என்கிறார் லியா.

இன்று பல இளம் காளைச் சண்டை வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளராகவும் லியா  செயல்படுகிறார். தடைகளை உடைத்தெறிந்து, வழக்கத்துக்கு மாறான துறைகளில் சாதனை புரிய விரும்புபவர்களுக்கு, லியா ஒரு சிறந்த வழிகாட்டி!

-  கே.ராஜு