பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...
கெட்டிமேளம் கொட்டப்போகும் நந்தினியின் காதல்!
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருபவர் நந்தினி. மதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான நந்தினி, தன் தந்தையுடன் இணைந்து மதுவிலக்குக்காக உண்ணா விரதப் போராட்டம் நடத்தியவர். மதுவிலக்குக்காக மட்டுமல்ல, மக்களுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படும்போதெல்லாம், அதை எதிர்த்துப் போராட்ட அறிவிப்பை முதலில் வெளியிடுவது நந்தினிதான்! ஒவ்வொரு முறையும் கைது, சிறை என்று அடக்குமுறையைச் சந்தித்தாலும், அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், அடுத்த போராட்டத்துக்குத் தயாராகிவிடுவார் நந்தினி. இதுவரை கிட்டத்தட்ட 50 முறை சிறை சென்றிருக்கிறார்.

போராட்டங்கள் பற்றிய அறிவிப்பையே வெளியிட்டு வந்த நந்தினி, முதன்முறையாகத் தன் திருமண அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தன் நண்பரான குணா ஜோதிபாசுவை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கிறார் நந்தினி. “மூன்று வயது முதலே நாங்கள் நண்பர்கள். எங்கள் இருவரின் தந்தையரும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். இதுவரை என் போராட்டங்களுக்குத் தன்னாலான உதவிகள் பலவற்றைச் செய்து வந்த குணா, இனி என்னுடன் சேர்ந்து இந்தப் போராட்டங்களில் பங்கெடுப்பார். சமூக அக்கறையுடன் திருமணத்துக்குப் பின்னும் எங்கள் பணியைத் தொடர்வோம். இன்னும் ஆறு மாதங்களுக்குள் எங்கள் திருமணம் நடக்கும்” என்று அறிவித்திருக்கிறார் நந்தினி.
வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்!
அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல்... களத்தில் கமலா!
1959-ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா - பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் மாணவியாகக் கால்பதித்தார் சென்னையில் பிறந்த தமிழ்ப் பெண் ஷியாமளா கோபாலன். 22 வயதில் அமெரிக்கா வந்த ஷியாமளா, படிப்பை முடித்தவுடன் இந்தியா திரும்பாமல், அங்கேயே ஆப்பிரிக்க அமெரிக்கரான டொனால்டு ஹாரிஸைக் காதல் திருமணம் செய்துகொண்டார். “தன் ஆசைப்படி மன உறுதியுடன் காதல் திருமணம் செய்துகொண்டார் என் அம்மா. இங்கேயே தங்கிவிட்ட கோடிக்கணக்கான குடியேறிகள்போல அவரது இந்த மன உறுதிதான், என்னையும் அமெரிக்கர் ஆக்கியது” என்று தெரிவித்திருந்தார் கலிஃபோர்னியாவின் இப்போதைய செனட்டர் கமலா ஹாரிஸ்.

சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் 2020-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் கமலா. ஏற்கெனவே நான்கு பெண்கள் இந்தப் போட்டியில் இருப்பதால், விறுவிறுப்படைந்திருக்கிறது அமெரிக்கத் தேர்தல் களம். அமெரிக்க சிறுபான்மையினப் பெண் என்பதால், ஆப்பிரிக்க மற்றும் இந்திய வம்சாவளி மக்களின் ஏகோபித்த ஆதரவு கமலாவுக்கு இருக்கும் என்று கருதுகிறார்கள் பார்வையாளர்கள். சான் ஃபிரான்சிஸ்கோவின் மாவட்ட அட்டர்னியாக 2004 முதல் 2011 வரை பணியாற்றியுள்ள கமலா, கலிஃபோர்னியாவின் முதல் கறுப்பின அட்டர்னி ஜெனரல் என்ற பெருமையையும் பெற்றவர். அண்மையில் ஓக்லாண்ட் நகரில் தன் பிரசாரத்தைத் தொடங்கிய கமலா, ` மக்களுக்காக கமலா ஹாரிஸ் (ஃபார் தி பீப்பிள்)' என்கிற பிரசாரத்தை முன்னெடுத்திருக்கிறார்.
ஆல் தி பெஸ்ட், தமிழ்ப் பெண்ணே!
`பீரியட்' குறும்படம் ஆஸ்கர் பரிசுக்குப் பரிந்துரை!
இரானிய - அமெரிக்க திரைப்பட இயக்குநரான ராய்கா செதாப்சி இயக்கியுள்ள குறும்படம் `பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்'. `லஞ்ச் பாக்ஸ்' திரைப்படத்தைத் தயாரித்த குனீத் மோங்கா இந்தக் குறும்படத்தின் தயாரிப்பாளர். டெல்லி அருகில் உள்ள ஹாபூர் கிராமத்தில் பேட் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை நிறுவி அதன் மூலம் அந்தப் பெண்கள் அடையும் விடுதலை உணர்வை விவரிக்கிறது இந்தக் குறும்படம்.

மிகவும் பின்தங்கிய பகுதியான ஹாபூரில் பெண்களுக்கு மாதவிடாயைச் சமாளிக்க சரியான வசதிகள் இல்லை. அதனால் பெண்கள் பலர் பள்ளிப்படிப்பை பாதியில் விட நேர்கிறது. `பீரியட்' என்ற சொல்கூட அங்கு மிகவும் ரகசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சொல்லைக் கேட்கும் இளைஞர்கள்கூட பொருள் தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
இந்தக் கிராமத்தில் பேட் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட, அதை இயக்கி தங்களுக்கான குறைந்த விலை சானிட்டரி நாப்கின்களைத் தயாரிக்கத் தொடங்குகிறார்கள் பெண்கள். `ஃப்ளை' என்று அவர்கள் பெயரிடும் இந்த நாப்கின் அவர்களுக்கு உடல் மற்றும் பொருளாதார விடுதலை உணர்வைத் தருகிறது. இந்த முயற்சி அவர்களது வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருகிறது என்பதை கண்முன் காட்சியாக்குகிறது இந்த 26 நிமிடக் குறும்படம். ஆஸ்கருக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் 10 குறும்படங்களில் ஒன்று இந்த `பீரியட். எண்டு ஆஃப் சென்டன்ஸ்'. பேட் மேன் அருணாசலம் முருகானந்தமும் இந்தப் படத்தின் சில காட்சிகளில் தோன்றுகிறார்.
அட்வான்ஸ் ஆஸ்கர் வாழ்த்துகள்!
கவிஞர் சல்மாவுக்கு கன்னையாலால் சேத்தியா விருது !
ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்ற ஜெய்ப்பூர் லிட்ஃபெஸ்ட் நிகழ்ச்சியில், நான்காவது மகாகவி கன்னையாலால் சேத்தியா விருது தமிழ் எழுத்தாளரும் கவிஞருமான சல்மாவுக்கு வழங்கப்பட்டது. இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு நாவல்கள் என்று பல வடிவங்களில் எழுதி வரும் சல்மா, பல புத்தக விழாக்கள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டிருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் லக்ஷ்மி ஹால்ஸ்ட்ராம் மொழிபெயர்த்த சல்மாவின் `தி ஹவர் பாஸ்ட் மிட்நைட்' (இரண்டாம் ஜாமங்களின் கதி) நாவல் கிராஸ்வேர்ட் புக் மற்றும் மேன் ஏசியன் விருதுகள் பட்டியலில் இடம்பிடித்தது. சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய நார்மன் கட்லர் கருத்தரங்கில் கலந்துகொண்டு தன் படைப்புகளைப் பற்றி உரையாற்றிய ஒரே தமிழ்ப் படைப்பாளர் சல்மா.

பொன்னம்பட்டி பஞ்சாயத்தின் தலைவராகவும் தமிழக சமூகநல வாரியத்தின் தலைவராகவும், பணியாற்றி யிருக்கிறார் இந்தப் படைப்பாளர். ஒவ்வோர் ஆண்டும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா இந்தியாவின் சிறந்த கவிஞர்களை கன்னையாலால் சேத்தியா விருது வழங்கிக் கௌரவித்துவருகிறது. ராஜஸ்தானிய மற்றும் இந்தி மொழியில் சிறந்த கவிஞரான கன்னையாலால் சேத்தியாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
கவிஞருக்கு மனம் கனிந்த வாழ்த்துகள்!
மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜுக்கு `பத்ம' விருதுகள்!
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் பட்டியலில் ஏழு தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர். அவர்களில் நம் கவனம் ஈர்ப்பவர்கள் மதுரை சின்னப்பிள்ளை மற்றும் நர்த்தகி நட்ராஜ். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயதான சின்னப்பிள்ளை, கடந்த முப்பது ஆண்டுகளாகத் தன்னை சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார். `களஞ்சியம்' என்ற பெயரில் மகளிர் சுயஉதவிக் குழு ஒன்றை அமைத்து நிர்வகித்து வரும் இவர், தமிழகம் முழுவதும் சுமார் 2,000 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்க உதவியிருக்கிறார். மரபுசார் வேளாண்மை மீது கொண்ட ஈடுபாட்டால் அது குறித்த விழிப்பு உணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறார். தமிழகத்தில் மருத்துவ முகாம்களை நடத்தவும் உதவுகிறார். கடந்த 2000-வது ஆண்டு ஸ்த்ரீ புரஸ்கார் என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்த அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இவரது சமூக சேவையைப் பாராட்டி சின்னப்பிள்ளையின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

மதுரையைச் சேர்ந்த 54 வயது நடனக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ். தஞ்சையின் சிறப்பான `நாயகி பாவம்' நடன முறையில் கைதேர்ந்த நர்த்தகி. பழம்பெரும் நடனக் கலைஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையிடம் ஆடல் கலையைக் கற்றுத் தேர்ந்தவர். தஞ்சை நால்வரின் நாட்டிய மரபை செல்லும் இடமெல்லாம் பரவலாக ஆடி வரும் நர்த்தகி, சங்க காலத்து ஆடல் கலை குறித்த ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது நடனப் பள்ளியில் உலகெங்கும் இருந்து வரும் மாணவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிறந்த நடனக் கலைஞரான நர்த்தகி, `பத்ம' விருதைப் பெறும் முதல் திருநங்கையும் ஆவார்.
பத்மஸ்ரீகளுக்குப் பாராட்டுகள்!
குடியரசுதின அணிவகுப்பில் கலக்கிய பெண்கள் படை!
டெல்லி ராஜபாட்டையில் நடைபெற்ற குடியரசுதின கொண்டாட்ட அணிவகுப்பில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்கள் பெண்கள். நாட்டின் 70-வது குடியரசு தின கொண்டாட்டத்தில் முதன்முறையாக பல ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகள் பெண்களின் தலைமையில் வெற்றிநடை போட்டன. இந்தியாவின் பழம்பெரும் துணை ராணுவப் படையான அசாம் ரைஃபிள்ஸ் பிரிவில் மிக அதிக அளவில் 144 பெண்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். அவர்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்திச் சென்றவர், 30 வயதான மேஜர் குஷ்பு. அவரின் தந்தை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர். கணவர் ராணுவ அதிகாரி.

ஆர்மி சர்வீஸ் கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த 144 ராணுவ வீரர்கள் பிரிவைத் தலைமையேற்று அணிவகுத்தவர் லெஃப்டினன்ட் பாவனா கஸ்தூரி. முழுக்க முழுக்க ஆண்களைக்கொண்ட இந்தப் பிரிவுக்கு, தான் தலைமை தாங்கியது ராணுவத்தில் பாலின வேறுபாடு இல்லை என்பதைக் காட்டுகிறது என்று கூறியிருக்கும் பாவனா, “நிறைய கனவு காணுங்கள்; காணும் கனவுகளைத் துரத்துங்கள். அதைவிட உயரம் தொடுவீர்கள்” என்று நாட்டின் இளம் பெண்களுக்கு அறிவுறுத்துகிறார். ஆர்மி டேர்டெவில்ஸ் மோட்டார் சைக்கிள்ஸ் பிரிவைத் தலைமையேற்றவர் கேப்டன் ஷீகா சுரபி. 9 இருசக்கர வாகனங்களில் 32 ராணுவ வீரர்கள் பிரமிடு அமைப்பில் தொடர்ந்துவர, அவர்களுக்கு முன்னே கம்பீரமாகத் தன் வாகனத்தை ஓட்டிச் சென்றார் சுரபி. செயற்கைக் கோள் முனையப் பிரிவை முன்னின்று வழிநடத்திய கேப்டன் பாவனா சியால், “இத்தனை பெண் அதிகாரிகள் பங்கேற்பதைப் பார்த்து இன்னும் அதிக பெண்கள் ஆர்வத்துடன் ராணுவப் பணிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார். இவர்கள் தவிர 144 கப்பல் படை வீரர்கள் பிரிவைத் தலைமையேற்று அணிவகுத்த லெஃப்டினன்ட் அம்பிகா சுதாகரனையும் மக்கள் கூட்டம் உற்சாகப்படுத்தியது.
சாதனை படைப்போம் பெண்களே!
- நிவேதிதா லூயிஸ்