தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி

காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி
பிரீமியம் ஸ்டோரி
News
காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி

குறையொன்றுமில்லை

காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண்ணில்லை என்றாலும் காதலுண்டு; வெற்றியுண்டு என்று சாதித்தவர்கள், சென்னையைச் சேர்ந்த குமார் - விஜி தம்பதி.

‘`என்னை வளர்க்கச் சிரமப்பட்ட பெற்றோர், அஞ்சு வயசிலேயே என்னை ஸ்பெஷல் ஸ்கூலில் சேர்த்துட்டாங்க. அங்க ஹாஸ்டலில் இருந்தபடி ப்ளஸ் டூ வரை படிச்சேன். போராட்டத்துடனேயே தொடர்ந்து பி.ஏ படிச்சு, சேல்ஸ் எக்ஸிக் யூட்டிவ்வாக பல நிறுவனங்கள்ல வேலை செய்தேன். ஆனா, அங்கெல்லாம் என் பார்வைக் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி புறக்கணிக்கப்பட்டேன். இந்த நிலையில், என்னைப்போலவே  விழிச் சவாலுடைய ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு நினைச்சேன். நண்பர் ஒருத்தர் மூலம் 2012-ம் ஆண்டு விஜியைப் பற்றித் தெரிஞ்சுக்கிட்டேன். காதலில் விழுந்தேன்” என்று முன்கதை சொல்கிறார், குமார்.

காதலால் வாழ்கிறோம்... காதலால் காண்கிறோம்! - குமார் - விஜி

‘`பெற்றோர் இல்லாத என்னை வளர்த்து வந்த என் தாய்மாமா, நாலு வயசில் என்னை ஸ்பெஷல் ஸ்கூல்ல சேர்த்துட்டார். ப்ளஸ் டூ வரை படிச்சிட்டு, அதே ஸ்கூல்ல வேலை செய்தேன். இவர் போன் பண்ணி காதலைச் சொன்னபோது இனம்புரியாத ஓர் உணர்வு. பார்வையுள்ளவர்களின் காதல் வாழ்க்கை வெற்றிபெறவே அதிக சிரமங்கள் உண்டாகும் சூழலில், இதெல்லாம் நமக்குச் சரிவருமானு கவலை இருந்துச்சு. அதனால, நான் எந்தப் பதிலும் சொல்லலை. என்றாலும், ‘உங்க எண்ணங்கள் அழகானவை’ன்னு சொன்னேன். அப்புறம் வாரத்துல ஒருநாள் போன்ல பேசுவோம். ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் நான் என் காதலைச் சொன்னேன். 2013-ம் ஆண்டு சர்ச்சுல கல்யாணம் செய்துக்கிட்டோம்”
- வெட்கச் சிரிப்புடன் தங்கள் காதல் கதையை ரீவைண்ட் செய்கிறார், விஜி.

மணவாழ்க்கையை ஆரம்பித்த இருவரும் டீ விற்பனை, ஸ்டேஷனரி பொருள்கள் விற்பனை, தின்பண்டங்கள் விற்பனை எனப் பல்வேறு குறுதொழில்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், பார்வைத்திறன் இல்லாத காரணத்தால் ஏமாற்றப்பட்டு, கடனாளியாகியிருக்கிறார்கள். 2015-ம் ஆண்டு வசிக்க வீடு இல்லாத நிலைக்குச் சென்றவர்கள், மதுரையில் குடியேற முடிவெடுத்து ரயில் பயணம் மேற்கொண்ட அந்நாள், அவர்களின் இரண்டாம் ஆண்டு திருமண நாள்.
 
‘`அன்னிக்கு ஒருவேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம இருந்தோம்.  `நாம யாரையும் ஏமாத்தலை, பார்வையுள்ளவங்கதான் நம்மளை ஏமாத்திடுறாங்க. ஒருநாள் நாம வெற்றி பெறுவோம்’னு சொன்னேன். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னை வந்து பல சிறு தொழில்கள் ஆரம்பிச்சோம். மீண்டும் மீண்டும் ஏமாற்றம்; கடன்தான். இப்படி வாழ்க்கையே போராட்டமா இருந்தாலும், மனம்தளராம வேலை செய்தோம். பி.ஏ பட்டதாரியான என் கணவருக்கு, பண்பலைத் தொகுப்பாளர் மற்றும் சினிமா டைரக்டராவது பெருங்கனவு. `எஃப்.எம் பிராட்காஸ்ட்டிங் அண்டு வாய்ஸ் பேஸ்டு அட்வர்டைஸ்மென்ட்’ என்ற மத்திய அரசின் பண்பலை பணிக்கான சான்றிதழ் பெற்றிருக்கார். ஆனா, பார்வை இல்லாததால், எந்தப் பண்பலையிலயும் இவருக்கு வேலை கிடைக்கலை. என்றாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆர்.ஜே-வுக்கான பயிற்சி கொடுத்திருக்கார். அதில் பலரும் இன்னிக்கு ஆர்.ஜே-வாக வேலை செய்றாங்க” என்று கணவரின் திறமையை விவரிக்கிறார், விஜி.

மனைவியின் ஊக்கத்தால் இந்தியாவின் முதல் பார்வையற்ற குறும்பட இயக்குநராகிச் சாதித்திருக்கிறார், குமார். ``பாலு மகேந்திரா சார் கலந்துக்கிட்ட பயிற்சிப்பட்டறை ஒன்றில் அவர்கிட்ட, `பார்வையற்றவர்கள் இயக்குநராவது சாத்தியமா? அதற்கு என்ன செய்யணும்?’னு கேட்டேன். `உங்க எண்ணங்களைப் பிரதிபலிக்கிற ஒளிப்பதிவாளர் கிடைச்சால் இது சாத்தியம்’ என்றவரிடம், இயக்குநருக்கான அடிப்படை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். பிறகு ஒரு குறும்படத்தை இயக்கினேன். அதை ஒளிப்பதிவாளர் திருட்டிட்டுப் போயிட்டார். அப்போ நொறுங்கிப்போன என்னை, `உங்க திறமையை யாரும் திருட முடியாது’னு தேற்றினவங்க விஜிதான். பிறகு, பார்வையில்லாதவங்களாலும் கனவு காண முடியும்கிற கதையுடன் ஒரு குறும்படத்தை இயக்கினேன். என் மனைவி, பார்வையில்லை என்றாலும் வீட்டுல இருந்தபடியே டெய்லரிங் பண்றாங்க. நான் ஸ்டேஷனரி பொருள்களை விற்கிறேன். இன்னிக்கு ஓரளவுக்கு நல்லா இருக்கோம். கஷ்டங்கள் இருந்தாலும், எங்க காதலால் நம்பிக்கையுடன் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். நிச்சயம் ஒருநாள் நான் சினிமா இயக்குநராவேன். நாங்க நல்ல நிலைக்கு உயர்வோம்” என்று மனைவியின் கரம் பற்றி நம்பிக்கையுடன் சொல்கிறார், குமார்.

ஜெயிப்பார்கள்!

  -கு.ஆனந்தராஜ் 

படம் : ஆ.வள்ளிசெளத்திரி