கட்டுரைகள்
Published:Updated:

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்
பிரீமியம் ஸ்டோரி
News
சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

ப்போதுதான் காயெலிட்ஸா (Khayelitsha) என்ற தென்னாப்பிரிக்க நகரத்துக்குப் புதிதாகக் குடி வந்திருந்தார், ரோஸலியா மாஷால் என்ற ரோஸி. தொடக்கப் பள்ளி ஆசிரியரான அவருக்கு அங்கே கண்ட காட்சிகள் மனதை பாதித்தன.

1989-ம் ஆண்டு... அங்கே பசித்த வயிறுடன் கறுப்பினக் குழந்தைகள் நகரத்தின் குப்பைத் தொட்டிகளைச் சுற்றிச் சுற்றி அலைந்துகொண்டிருந்தார்கள். யாராவது குப்பையைக் கொட்டிவிட்டுச் சென்றால், உடனே தொட்டிக்குள் பாய்ந்து, சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று தேடினார்கள். கொஞ்சம் உணவு கிடைத்தாலும்  அவர்கள் முகத்தில் உண்டாகும் பரவசம், ரோஸிக்கு வலியைத் தந்தது.

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

‘என் வீட்டுக்கு வாருங்கள். நான் ரொட்டி தருகிறேன்’ என்று அந்தக் குழந்தைகளிடம் சொன்னார் ரோஸி.

ரொட்டி என்ற வார்த்தையைக் கேட்டதும் சில குழந்தைகள் எதையுமே யோசிக்காமல் அவருடன் நடக்க ஆரம்பித்தார்கள். தன்னிடமிருந்த ரொட்டித் துண்டுகளைப் பகிர்ந்தளித்தார்.

அதுதான் அந்த காயெலிட்ஸா நகரத்தின் நிலை. அங்கே வாழ்ந்த பெரும்பாலான கறுப்பின மக்களுக்கு வேலையில்லை. வறுமை வாட்டியது.  எய்ஸ் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருந்தார்கள். அதற்குக் குழந்தைகளும் தப்பவில்லை. பகலில் பெற்றோர் வேலை தேடிச் சென்றுவிட, பசியில் குழந்தைகள் குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடி அலையும் அவல நிலை.

ரோஸி, அந்தக் குழந்தைகளைப் பகல் நேரத்தில் பராமரிப்பதற்காக ஒரு மையத்தை தன் வீட்டிலேயே தொடங்கினார். தினமும் புதிய குழந்தைகள் ரோஸியின் வீட்டுக்கு வர ஆரம்பித்தனர்.

‘‘எனக்கும் ரொட்டி தருவீர்களா?’’ எனத் தயங்கித் தயங்கிக் கேட்டார்கள். ரோஸி புன்னகை செய்தார். ஒரே வாரத்தில் 36 குழந்தைகள் ரோஸியின் மையத்துக்கு வந்துசேர்ந்தார்கள். அவர்களுக்குத் தன்னால் இயன்ற உணவை வழங்கினார். பாடல்களும் விளையாட்டுகளும் சொல்லிக்கொடுத்தார். பாடமும் சொல்லிக்கொடுத்தார்.

தனக்கு உதவியாக அந்தப் பகுதியிலிருந்த சில பெண்களைச் சேர்த்துக்கொண்டார். தொடர்ந்து 10 ஆண்டுகள் இந்தச் சேவையைச் செய்தார் ரோஸி. கல்வி அறிவற்ற பல குழந்தைகள், ரோஸியின் முயற்சியால் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தன.

‘போதும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை மூடிவிடலாம்’ என்று ஒருமுறை தோன்றியது.

2000-ம் ஆண்டு பிறந்தது. ஒருநாள் காலை. ரோஸி தன் வீட்டு வாசலைத் திறந்ததும் அதிர்ந்து நின்றார். அங்கே 2 வயதுள்ள ஆண் குழந்தை ஒன்று துணியே இல்லாமல் உடலில் காயங்களுடன் கிடந்தது. பதற்றத்துடன் அந்தக் குழந்தையை வாரி அணைத்தார் ரோஸி. முதலுதவி செய்து, ஆடை அணிவித்து, உணவு கொடுத்தார்.

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

அந்தக் குழந்தையுடன் தெருத் தெருவாகச் சென்று, ‘இது உங்கள் குழந்தையா?’ எனக் கேட்டார். எல்லோருமே மறுத்தார்கள். காவல் நிலையத்துக்குச் சென்றால், ‘குழந்தையின் பெற்றோரைத் தேடிப் பிடிப்பது கஷ்டம். நீங்களே வளர்த்துக்கொள்ளுங்கள்’’ என்றார்கள்.

பாபூமெலெலெ (Baphumelele) என்ற குழந்தைகள் காப்பகம் பிறந்தது. இதற்கு, ‘நீ முன்னேறுகிறாய்!’ என்று அர்த்தம். தென்னாப்பிரிக்காவில் மட்டும் 37 லட்சம் ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறார்கள். அதில், பாதிக் குழந்தைகளின் பெற்றோர் எய்ட்ஸால் இறந்து போனவர்கள் என்கிறது, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF). இப்படிப்பட்டக் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் மையமாகத்தான் 2000-ல் பாபூமெலெலெ செயல்பட ஆரம்பித்தது.

அடுத்தடுத்த மாதங்களில் ஆதரவற்ற சில குழந்தைகள் அந்தக் காப்பகத்தில் இணைந்தன. ‘இங்கே  யாருமில்லா குழந்தை ஒன்று இருக்கிறது. வந்து எடுத்துக்கொள்கிறீர்களா?’ என்று அழைப்புகள் வரும். 2001 ஆம் ஆண்டு, 67 ஆதரவற்ற குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார் ரோஸி. 

தந்தை அல்லது தாய், யாரோ ஒருவரை இழந்த ஏழைக் குழந்தைகளும் பாபூமெலெலெ காப்பகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளிடம்  நிதி திரட்டினார் ரோஸி. அர்ப்பணிப்புடன் இயங்க ஆரம்பித்தார்.

பல குழந்தைகள் பாபூமெலெலெ மையத்தால் மறுவாழ்வு பெற்றன.  காயெலிட்ஸா நகரக் குழந்தைகள் மட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவே ‘மாமா ரோஸி’ என்று அவரை அழைக்க ஆரம்பித்தது. ‘அம்மா ரோஸி’ என்று அர்த்தம்.

இதுவரை 5,000 குழந்தைகள் ரோஸியின் பாபூமெலெலெ அமைப்பால் புது வாழ்வு பெற்றுள்ளார்கள். காப்பகத்தில் வளர்ந்த பல குழந்தைகள், பாபூமெலெலெ அமைப்பிலேயே தன்னார்வலராகவும், பிற அமைப்புகளில் சமூக சேவகர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.

சூப்பர் ஹீரோஸ்! - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்

பவுண்டேஷன் ஆஃப் ஹோப் (Foundation of Hope) என்ற அமைப்பை ஆரம்பித்து, 18 முதல் 21 வயது இளைஞர்களுக்குத் தொழிற் பயிற்சி, கணினி மற்றும் விவசாயப் பயிற்சியுடன் வேலைவாய்ப்புகளை அளிக்கிறார். ‘பாபூமெலெலெ பேக்கரி’ ஒன்றும் இயங்கிவருகிறது. அதில், குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உணவுப்பண்டங்கள் செய்யும் பயிற்சி வழங்கப்படுகின்றது.

‘பாபூமெலெலெ மருத்துவ மையம்’ மூலம், எய்ட்ஸ், கேன்சர், காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது. தவிர, பகல் நேரத்தில் சிறு குழந்தைகளைப் பராமரிக்கும் மையத்தையும் தொடர்ந்து இயக்கிவருகிறார் ரோஸி.

சமூக சேவைக்கான பல்வேறு விருதுகள் மாமா ரோஸியைத் தேடிவருகின்றன. தான் வளர்க்கும் குழந்தைகளின் வருங்காலக் கனவுகள் நிறைவேற தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்கிறார் ரோஸி.

அவருக்குப் பெரிய கனவு ஒன்று இருக்கிறது. தான் வளர்த்த குழந்தைகளில் ஒன்று, தென்னாப்பிரிக்காவின் வருங்கால அதிபராக வர வேண்டும் என்பதே அது. கனவு நிறைவேறட்டும்!

-முகில்