தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நேசக்காரிகள்: நிற்காத கால்கள்! - ஹேமா

நேசக்காரிகள்: நிற்காத கால்கள்! - ஹேமா
பிரீமியம் ஸ்டோரி
News
நேசக்காரிகள்: நிற்காத கால்கள்! - ஹேமா

நேசக்காரிகள்: நிற்காத கால்கள்! - ஹேமா

ட்டேரி குப்பைமேட்டுக்குப் பின்புறம்தான் ஹேமாவின் வீடு. வீட்டருகே தேங்கி நிற்கும் கழிவுநீர்ப் பிரச்னை, தெருவிளக்கு எரியாமல் இருக்கிறசூழல், ரேஷன் கடைகளில் பொருள்கள் முறையாக விநியோகம் செய்யாமல் இருப்பது, குடித்துவிட்டு கணவன் அடித்தல்... இதுபோன்ற ஏதாவது, தன் பகுதியில் நடக்கிறது எனத் தெரிய வந்தால், அங்கே முதலில் ஓடுகிற கால்கள் ஹேமாவினுடையவை.

ஹேமாவின் அம்மா தேவி, கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் என்பதால், சிறுவயதிலிருந்தே தன் அம்மா வின் செய்கைகளைப் பார்த்து வளர்ந்த ஹேமா, சமூக சேவையில் `நூலைப்போல சேலை' என்கிற முதுமொழிக்கு ஏற்றாற் போலவே செயல்பட்டுவருகிறார்.

நேசக்காரிகள்: நிற்காத கால்கள்! - ஹேமா

அம்மா கவுன்சிலராக இருந்தபோது முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை பெறுவதற்கான வழிகாட்டி முகாம் நடத்தி, பலருக்கு அந்த உதவித் தொகை கிடைக்க வழி செய்திருக்கிறார். அதற்காக நடந்த நன்றி நவில்தல் கூட்டத்தில், ஹேமாவின் அம்மாவை முதியவர்களும் கைம்பெண்களும் கண்ணீர் மல்க கையெடுத்துக் கும்பிட்டிருக் கிறார்கள். சிறுமியாக இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஹேமாவுக்கு அந்தத் தருணத்தில்தான், `நாமும் நம் மக்களுக்கான ஒருத்தியாக இருக்க வேண்டும்' எனத் தோன்றியிருக்கிறது.

தன் ஊரில் எந்தப் பிரச்னை நடந் தாலும், பிரச்னைக்குரியவர் எவ்வளவு பெரிய அதிகாரப் பீடத்தில் இருந்தாலும் அதைப்பற்றி ஹேமா ஒருபோதும் கவலைப்படுவதில்லை. `தப்பு செய்றவனே தைரியமா இருக்கும்போது, அதைத் தட்டிக் கேக்கிற நாம, அவங்களவிட இரண்டு மடங்கு தைரியமா இருக்கணும்'னு சொல்லி வளர்த்த அம்மாவின் பிள்ளை ஹேமா!

இவரின் அரசியல் செயல்பாடு, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சுருங்கி விடவில்லை. சுனாமி வந்த சூழலிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக நம்மைத் தாக்கிய பேரிடர் பொழுதுகளிலெல்லாம் எல்லோர் கவனமும் சென்னையைச் சார்ந்திருக்க, இங்கிருந்து நிவாரணப் பொருள்களை எடுத்துக்கொண்டு கடலூர் மாவட்டக் கிராமங்களுக்குச் சென்று உதவி செய்தவர் ஹேமா. ஒகி புயலின்போது கன்னியாகுமரிக்கும், கஜா புயலின்போது நாகப்பட்டினத்துக்கும் விரைந்தோடியவர். நிவாரணப் பொருள் களைக் கொடுத்துவிட்டு வருவதுடன் நின்றுவிடாமல், முற்றிலும் அழிந்துபோன ஊரைப் புனரமைப்பதில்  தொடங்கி, துப்புரவுத் தொழிலாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்வது வரை அந்தக் கிராமத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதில் ஹேமாவின் பங்கு முக்கியமானது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திலும், இடதுசாரி கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டு களப்பணியில் ஈடுபட்டுவரும் ஹேமா, தற்போது வழக்கறிஞ ராகப் பணியாற்றி வருகிறார். கணவரின் ஒத்துழைப்பு இருப்பதால், ஹேமாவால் சமூகம் சார்ந்து தொடர்ந்து இயங்கிவர முடிகிறது.வடசென்னையில் தன் நண்பர்களுடன் இணைந்து குழந்தைகளுக்காக ‘துளிர்கள்’ என்கிற அமைப்பையும் நடத்தி வருகிறார்.

சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடியமர்த்தப்படும் மக்களுக்கு, அவர்களின் வாழ்வுரிமை முறையாக அங்கே உறுதி செய்யப்படுகிறதா என்கிற ஆய்விலும் இருக்கிறார் ஹேமா.

“இந்த உலகம் எல்லா வகையிலும் பாகுபட்டுக் கிடக்குது தோழர். சக மனுஷன் மீது நாம செலுத்துற அன்பு, அக்கறையை வெச்சுதான் அதை ஈடுசெய்ய முடியும். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்னு நம்புறேன்” என்கிறார் ஹேமா.

பட்டாம்பூச்சிகள் மென்மை யானவை மட்டுமல்ல; உறுதி யானவையும்கூட!

-தமிழ்ப்பிரபா 

படம் : சொ.பாலசுப்ரமணியம்