தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

காணாமல் போகுமோ காபி?

காணாமல் போகுமோ காபி?
பிரீமியம் ஸ்டோரி
News
காணாமல் போகுமோ காபி?

ஆசியாவின் காபி சுவைக்கும் முதல் பெண் சுனாலினி மேனன்வித்தியாசம்

‘`பிளாக் காபிதான் பெஸ்ட்!” என்று ஆரம்பித் தார் சுனாலினி மேனன். இந்தியாவின் குறிப்பிடத்தக்க காபி சுவைப்பாளர் (Coffee Taster). குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற ‘ஆசியாவின் காபி சுவைக்கும் முதல் பெண்’ என்ற சிறப்பு விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எனப் பல மகுடங்களுக்குச் சொந்தக்காரர். பெங்களூருவில் வசிப்பவரிடம் பேசினோம்.

‘`என் தந்தை வங்கியில் பணியாற்றினார். பல நகரங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்தேன். ஃபுட் டெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றேன். பெங்களூருவில் வசித்தபோது  காபி போர்டில் காபி சுவைப்பாளர் பணிக்கு ஆள்கள் தேவை என விளம்பரம் பார்த்தேன். அந்தப் பணிக்கு விண்ணப்பித்த ஒரே பெண் நான்தான். ஆண்கள் மட்டுமே கோலோச்சிய பணியில் ஒரு பெண் நியமிக்கப்பட்டது அதுவே முதன்முறை” என்கிற சுனாலினி, தன் பணிச் சூழல் பற்றிப் பகிர்கிறார்.

காணாமல் போகுமோ காபி?

‘`அன்றாட அலுவலகப் பணியில், ஒரு பெண்ணின் கீழ் பணிபுரிய பல ஆண்கள் விரும்பவில்லை. அதனால், உடன் பணிபுரிந்தவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் பணிபுரிந்த பின், சொந்தமாக Coffee Lab Ltd என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறேன்’’ என்கிறவர் கூறும் காபி தகவல்கள், கசப்பும் இனிப்பும் கலந்த சுவாரஸ்யம்!

இனி சுனாலினியுடன் ஒரு காபி பிரேக்...

அதிகபட்சமாக எத்தனை வகை காபிகளை தினமும் சுவைப்பீர்கள்?

எத்தனை வகை என்பதைவிட, எத்தனை டம்ளர் காபி சுவைப்பேன் எனச் சொல்ல முடியும். நூற்றுக்கும் மேற்பட்ட காபிகளைக்கூட ஒரே நாளில் சுவைக்க நேரும். இதனால் தூக்கம் வராமல் தவிப்பேன்.

நீங்கள் விரும்பிக் குடிக்கும் காபி?

பொன்வறுவலாக வறுத்த காபி பொடியில் தயாரித்த டிகாக்க்ஷன் மற்றும் சூடான எஸ்ஃப்ரெஸ்ஸோ!

காபி நல்லதா, கெட்டதா?

நம் புராண, இதிகாசங்களில் எங்குமே பால், காபி இவற்றைப் பருகிய குறிப்புகள் இல்லை. வெண்ணெய் கடைந்த மோரை மட்டுமே நம் முன்னோர் சாப்பிட்டிருக்கிறார்கள். இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு உகந்த பானமும் அதுவே. ஆங்கிலேயர், தங்கள் நாட்டில் உற்பத்திசெய்த பால் பொருள்களை இந்தியாவில் சந்தைப்படுத்தியதன் விளைவாக அறிமுகமானவைதான், பாலுடன் சீனி மற்றும் டிகாக்க்ஷன் கலந்து காபி குடிக்கும் பழக்கம்.

பலதரப்பட்ட காபி அரைக்கும் மெஷின்களில் (Grinder), சிறந்ததாக எதைப் பரிந்துரைப்பீர்கள்?

என் அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வாங்கிய காபி அரைக்கும் மெஷின்கள் இருக்கின்றன. எகிப்து தேசத்து காபி மெஷின்கள் மிகச்சிறந்த தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

காபியின் எதிர்காலம்?

பருவநிலை மாற்றம் மட்டுமே காபி உற்பத்திக்கு மிகப் பெரிய சவால். அடுத்த 50 - 80 வருட காலத்துக்குள் காபி என்ற பயிரே இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு மாற்றாக வேறு ஏதாவது உற்சாக பானம் அறிமுகமாகலாம்!

அடுத்து..?

காபி எப்படிப் பருக வேண்டும் என்கிற விழிப்பு உணர்வை சர்வதேச அளவில் ஏற்படுத்துவது, தரமான காபி உற்பத்திக்கான வழிவகைகளை ஆராய்வது, சர்வதேச தரக்கட்டுப்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்துவது, காபி விவசாயிகளை ஊக்கப்படுத்தி புதிய காபி வகைகளைப் பயிரிடவைப்பது... இவையே என்முன் இருக்கும் பணிகள்!

-ஸ்ரீஅகத்திய ஸ்ரீதர்

காணாமல் போகுமோ காபி?