
பெண் சக்தி!: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்! - அருள்மொழி
‘36 வயதினிலே’ படத்தில், குடியரசுத் தலைவர் சந்திக்க விரும்புவ தாக அதிகாரிகள் தெரிவித்ததும் ஜோதிகா எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ, அதுபோலவே அருள்மொழிக்கும் நிகழ்ந்திருக்கிறது. பின்னே, ‘மதுரைக்கு வருகைதரும் பிரதமர் மோடி உங்களைச் சந்திக்க விரும்புகிறார்’ என்று சொன்னால் அவருக்கு எப்படியிருந்திருக்கும்!
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனவரி 27 அன்று பிரதமர் மோடி மதுரை வந்தபோது, அவர் சந்தித்துப் பேசியது அருள்மொழியைத்தான்! யார் இந்தப் பெண்? மதுரை டி.ஆர்.ஓ காலனியில் வசிக்கும் அருள்மொழியிடம் பேசினோம்.
‘`உசிலம்பட்டி பக்கத்துல இருக்கிற பின்தங்கிய கிராமமான தொட்டப்பநாயக்கனூர்ல பிறந்த என்னை, பிரதமர் சந்திச்சது இப்பவும் கனவு போலத்தான் இருக்கு’’ என்கிறவர், இந்தச் சந்திப்பு அவருக்கு அமைந்ததற்கான பின்புலம் பற்றிப் பேசினார். ‘`பிரதமர் என்னை சந்திக்கக் காரணம், நான் செய்துவர்ற இ-மார்க்கெட்டிங் பிசினஸ்தான். அரசு அலுவலகங்களுக்குத் தேவையான பொருள்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று அனுப்புகிற அரசின் இ-மார்க்கெட்டிங்கை (GEM - Government E Marketplace) கடந்த நாலு வருஷமா செய்துட்டு வர்றேன். ரெண்டு வருஷத்து முன்னாடி, தெர்மோ ஃப்ளாஸ்க்குகள் வேணும்னு பிரதமர் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கொடுத்தப்போ என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. கூடவே, ரொம்பவும் நெகிழ்ந்துட்டேன். காரணம், பிரதமர் மோடி கொண்டுவந்த ‘முத்ரா’ திட்டத்தில் 50,000 ரூபாய் லோன் பெற்று, அவர் உருவாக்கிய இ-மார்க்கெட்டிங் மூலம் அரசு அலுவலகங்களுக்குப் பொருள்கள் சப்ளை செய்யும் திட்டத்தில், அவருடைய அலுவலகத்துக்கே பொருள் அனுப்பப் போறோம்னு நினைச்சப்போ நான் அடைந்த உத்வேகத்தையும் நன்றியுணர்வையும் ஒரு கடிதமாக எழுதி, பார்சலோடு வைத்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.

வாங்கிய ஃப்ளாஸ்க்குக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பணத்தை உடனே அனுப்பிட்டாங்க. கடிதத்துக்குப் பதில் இல்லை. நானும் அடுத்தடுத்து ஆர்டர்களைப் பிடிப்பதில் பிஸியாகிட்டேன். இந்த நிலையில்தான் என் கடிதத்தைக் குறிப்பிட்டு, கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒலிபரப்பான ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டிப் பேசினார். அந்தப் பாராட்டு, என்னைப் பலரும் அறியும் வகையில் ஆக்கியது. 18 மாதங்களுக்கு அப்புறம், இப்போ பிரதமரைச் சந்திச்சுப் பேசியதன்மூலம் உலகளவில் பிரபலமாகிட்டேன்.
உசிலம்பட்டி பள்ளியில் ப்ளஸ் டூ முடிச்சதும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட் டாங்க. நான் இந்த நிலைக்கு உயர்வதற்கு கணவர் சரவணன்தான் முழுக் காரணம். திருமணத்துக்குப் பிறகுதான் டீச்சர் ட்ரெய்னிங் முடிச்சேன். ரெண்டு குழந்தைகள் பிறந்ததும், வீட்ல இருந்துட்டே ஏதாச்சும் தொழில் செய்ய லாம்னு யோசிச்சேன். எனக்கு இணையத்தைப் பயன்படுத்தும் பழக்கம் உண்டு. ஏதாச்சும் ஆன்லைன் பிசினஸ் செய்யலாமானு யோசிச்சிட்டிருந்த நேரம். 2014-ல் மோடி பிரதமரானதும், மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் மிகக்குறைந்த விலையில் அலுவலகத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கணும்கிறதுக்காக ‘கவர்ன்மென்ட் இ-மார்க்கெட் பிளேஸ்’ தொடங்கினாங்க. அதைச் சரியா பயன்படுத்திக்கிட்டேன்.
எப்படி?
கவர்மென்ட் இ-மார்க்கெட் இணைய தளத்தின் விற்போர் பட்டியலில் என்னுடைய சிறு நிறுவனத்தை உடனே பதிவு செஞ்சேன். தமிழகத்திலிருந்து பதிவுசெய்த முதல் ஆள் நான்தான். இந்த டெண்டர் முறையில், விற்கும் பொருளையும் அதன் விலையையும் ஒவ்வொரு நிறுவனமும் பதிவிட்டிருப்பாங்க. யார் குறைந்த விலையைக் குறிப்பிடுறாங்களோ, அவங்களுக்கு ஆர்டர் கிடைக்கும். விற்பனையாளர்களுக்கு 20 நாள்களுக்குள் பணம் கிரெடிட் ஆகிடும் என்பதால், குறைந்த விலை பொருட்டில்லை.
கடையில் நாம 10 ரூபாய்க்கு வாங்குற பேனாவை, இதில் நாலு ரூபாய்க்குக் கொடுக் கணும். ரூ. 3.90-க்கு தரவும் ஆள் இருப்பாங்க. தயாரிப்பாளர்கள்கிட்டயிருந்தே மொத்தமா கொள்முதல் செய்யும்போது, இப்படி குறைந்த விலைக்கு வாங்கி விற்க முடியும். குறைந்த லாபம், அதன் மூலமா அடுத்தடுத்த ஆர்டர்கள், அதிக விற்பனை என்பதுதான் லாஜிக்.
இப்போது தொழில் எப்படி இருக்கிறது?
டெல்லி ஹெல்த் டிபார்ட்மென்ட்டிலிருந்து 10 ஸ்டாம்ப் பேடு ஆர்டர் வந்ததுதான் என் முதல் ஆர்டர். தொடர்ந்து பேனா, பென்சில், பேப்பர் ரோல்னு ஜனாதிபதி அலுவலகம், நிதித் துறை, உள்துறை, பாதுகாப்புத் துறைனு பல அலுவலகங்களிலிருந்தும் ஆர்டர்கள் கிடைச்சது. காஷ்மீர், அஸ்ஸாம், உ.பி, உத்தரகாண்ட்னு எல்லா மாநிலங்களிலிருந்தும் இப்போ ஆர்டர் வருது. 20 மாநில அரசுகளும் இந்த நெட்வொர்க்கில் இணைஞ்சுட்டாங்க. இ-மார்க்கெட்டிங்கில் நான் சேர்ந்தபோது மொத்தம் 5,000 பேர்தான் பதிவு செய்திருந்தாங்க. இப்போ, ஒன்றரை லட்சம் பேர் இருக்காங்க. ‘மான் கி பாத்’தில் பிரதமர் என்னைப் பற்றி பேசியதும், அரசு வங்கிகளுடன் தனியார் வங்கிகளும் முன்வந்து ‘லோன் தர்றோம்’னு சொன்னாங்க. வருங்காலத்தில் சிறு வியாபாரிகளும் இதில் இணைஞ்சு லாபம் பார்க்கணும்.
பிரதமர் அன்று உங்களிடம் என்ன பேசினார்?
‘நலமாக இருக்கிறீர்களா? வியாபாரம் எப்படிப்போகிறது?’னு கேட்டார். நல்லபடி யாக போகுதுனு சொன்னேன். ‘குடும்பத்தினர் நலமா?’னு அவர் கேட்டப்போ, நான் பூரிப்பும் படபடப்புமா நின்னேன். ‘சிறப்பா தொழில்செய்ய வாழ்த்துகள்’னு சொல்லிட்டுக் கிளம்பினார். இது என் வாழ்நாளுக்குமான பொக்கிஷ சந்தோஷம். பிரதமரை சந்திப்பேன்... அவர்கிட்ட பேசுவேன்னு எல்லாம் நான் நினைச்சுக்கூட பார்த்ததில்லை’’ - இன்னமும் பிரமிப்பு விலகவில்லை அருள்மொழிக்கு!
-செ.சல்மான்
படம் : வீ.சதீஷ்குமார்