தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!

 எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!
News
எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!

- அனுக்ரீத்தி வாஸ்

அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!

‘`இந்திய மாடல்களுக்கு உலக அரங்கில் எவ்வளவு மதிப்பிருக்கு தெரியுமா?’’ என்று கேட்கிறார் ‘மிஸ் இந்தியா’ அனுக்ரீத்தி வாஸ். சென்ற ஆண்டு நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் இந்தியாவின் சார்பாகக் கலந்துகொண்டு தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர். மாடலிங் துறை டிமாண்டு செய்யும் சருமத்துக்கான வரையறையை, தன் திராவிட நிறத்தால் மாற்றியெழுதி, பெண்கள் பலரின் தன்னம்பிக்கையை அதிகரித்தவர்.

‘`உலக அழகியாக நான் வாங்கும் ஒவ்வொரு கைதட்டலும் என் அம்மாவுக்குச் சேர வேண்டியது. என்ன கஷ்டம் வந்தாலும் சின்னச் சிரிப்போடு கடந்துபோகும் அவங்க மனவலிமைதான் என் குணமா மாறியிருக்கு. `எங்கம்மா ஒரு சிங்கிள் மதர்' என்பதை நான் கர்வத்தோடு சொல்கிற அளவுக்கு என்னையும் என் தம்பியையும் அவங்க வளர்த்திருக்காங்க. அவங்களுடைய கனவுகளையெல்லாம் எங்க தேவைகளுக்காகத் தொலைச்சிருக்காங்க. சின்ன வயசுல அப்பா என்கிற உறவின்மேல எனக்கும் ஏக்கம் இருந்துச்சு. ‘அப்பா எங்கம்மா?’னு கேட்டா, பாரின்ல இருக்குறதா சொல்வாங்க. கொஞ்சம் வளர்ந்ததும்தான், எங்கப்பா எங்களை விட்டுட்டுப் போயிட்டாங்க; எங்கம்மா ஒரு சிங்கிள் மதர்னு புரிஞ்சது. ‘ஆண் சம்பாத்தியம் இல்லாத குடும்பம்... என்னால் இவ்வளவுதான் செய்ய முடியும்’னு அம்மா எந்த விஷயத்திலும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கிட்டதே கிடையாது. எங்களுக்கு எல்லாவற்றிலும் `தி பெஸ்ட்'டைக் கொடுப்பாங்க. எங்களுக்கு அப்பா இல்லைன்னே சொல்லமாட்டேன். எங்கம்மாதான் எங்களுக்கு அப்பாவும்’’ - சில நொடிகள் அமைதியாகி மீண்டும் தொடர்கிறார்.

அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!

‘`நாங்க படிச்சது எல்லாம் திருச்சியில். அம்மா, ஆச்சி, தம்பி, நான்னு எங்களுடைய அன்புக்கூடு ரொம்பச் சின்னது. எங்க எல்லாருக்காகவும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிற அம்மா, அவங்களுக்குப் பிடிச்சதைப் பண்ணிக்கிட்டாங்களா? இந்தக் கேள்விக்கு இப்போ வரை எனக்குப் பதில் தெரியாது. ஒருநாள் நைட் நானும் தம்பியும் தூங்கின பிறகு, டி.வி-யில் வால்யூம் குறைச்சுட்டு, அதில் ஒளிபரப்பாகிட்டிருந்த பாட்டுக்கு அம்மா டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க. அப்போதான், அம்மாவுக்கு வேற என்னவெல்லாம் பிடிக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சது என் மனசு. எத்தனை முறை யோசிச்சாலும், எங்களைத் தாண்டி அம்மா தனக்குன்னு எந்த சந்தோஷத்தையும் நினைக்கலைன்னு புரிஞ்சது. அப்பவே முடிவு பண்ணிட்டேன்... அம்மாவுக்காக நான் சாதிக்கணும்னு.

திருச்சியிலேயே பெஸ்ட் ஸ்கூலில்தான் என்னையும் தம்பியையும் அம்மா படிக்க வெச்சாங்க. ‘பொம்பளை சாம்பாத்தியத்துல இவ்வளவு செலவு தேவையா? சாதாரண ஸ்கூலில் படிக்க வைக்கலாம்’னு சொந்தக்காரங்க அடிக்கடி சொல்லுவாங்க. அம்மா எதையும் காதில் வாங்கிக்கிட்டது இல்லை. நான் ஸ்கூலில் எந்தப் போட்டியில் சேர்ந்தாலும் நிச்சயம் பரிசு வாங்கிடுவேன். இருந்தாலும், ‘நான் சிவப்பா இல்லையே’னு என் மனசுல ஒரு சின்ன தாழ்வுமனப்பான்மை இருந்துட்டே இருந்தது. ‘நீங்க கலரா இருக்கீங்க... நான் ஏன் கலரா பிறக்கலை?’ன்னு அம்மாகிட்ட அடிக்கடி கேட்பேன். அந்த எண்ணம் அப்படியே என் மனசுல தங்கிடக் கூடாதுனு, நேரம் எடுத்து என்கூடப் பேசுவாங்க. ‘நீதான் அழகு. கூடவே உனக்கு நிறைய திறமையிருக்கு. எவ்வளவு பரிசு வாங்குற பாரு!’ன்னு என்னை ஊக்கப்படுத்திட்டேயிருப்பாங்க. `அழகு என்பது நிறத்தில் இல்லை; திறமையில் இருக்கு’ன்னு சின்ன வயசில் அம்மா எனக்கு அளித்த தன்னம்பிக்கைதான், என்னை அடுத்தடுத்துப் பயணிக்க வெச்சது. இன்னொருபக்கம், சிவப்புதான் அழகு என்ற மனப்பான்மை நம்ம நாட்டுலதான் இருக்கு. வெளிநாடுகளில், டஸ்கி ஸ்கின்னுக்குத்தான் மதிப்பும் வாய்ப்பும் அதிகம்’’ என்கிறவர் ‘மிஸ் இந்தியா’ வெற்றி நிமிடங்களைப் பகிர்கிறார்.

“சென்னை லயோலா கல்லூரியில் பிரெஞ்சு இலக்கியம் படிச்சிட்டிருந்தேன். அப்போ என் தோழிகூட சேர்ந்து மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். 2018-ம் ஆண்டு உலக அழகிப்போட்டிக்கான தமிழ்நாடு ஆடிஷனுக்கு, என் தோழி லூமா தீவிரமா பயிற்சி எடுத்திட்டிருந்தா. அடுத்தடுத்த சுற்றுக்குப் போவோம் என்ற நம்பிக்கையில், ‘மிஸ் இந்தியா’ இறுதிச் சுற்றுகளுக்கான சிறப்பு  உடைகள்  உட்பட எல்லாமே தயார்செஞ்சு வெச்சிருந்தா. நான் ஒரு பயிற்சிக்காக அதில் கலந்துகிட்டேன். ஆனா, சர்ப்ரைஸிங்கா ‘மிஸ் இந்தியா’ போட்டிக்குத் தமிழ்நாடு சார்பாக நான் தேர்வானேன். உண்மையைச் சொல்லணும்னா, அடுத்தகட்டப் போட்டிகளுக்குத் தேவையான சரியான உடைகள்கூட என்கிட்ட இல்லை. துளிக்கூட தயக்கம் இல்லாம, என் தோழி லூமா அவள் தனக்காகத் தயார்செய்து வெச்சிருந்த  உடைகளை என்கிட்ட கொடுத்து, ‘யார் ஜெயிச்சா என்ன?’னு சொல்லி எனக்குத் துணையா இருந்தா. தமிழ்நாடு ஆடிஷனில் வெற்றி பெற்றதும் அம்மாவுக்குத்தான் முதல்ல போன் பண்ணினேன். ‘சும்மா விளையாடாதே’னு சொல்லி போனை வெச்சுட்டாங்க. அப்புறம் டி.வி-யில் நியூஸ் பார்த்துட்டு போன் பண்ணி அழுதாங்க. தொடர்ந்து, ‘மிஸ் இந்தியா’ போட்டிக்கு 100% உழைப்பு, 100% அர்ப்பணிப்புடன் தயாரானேன். கூடவே, எங்கம்மா கொடுத்திருந்த 100% தன்னம்பிக்கையும் என்னுடன் இருந்தது. ‘மிஸ் இந்தியா அனுக்ரீத்தி வாஸ்’ ஆனேன்!

அடுத்தகட்டமா ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்துக்கான போட்டிகள் சீனாவில் நடைபெற்றது.­­­ நான் தோற்றாலும் ஜெயிச்சாலும் அம்மா அழுவாங்க என்பதால, சீனாவுக்கு என்கூட பிரெண்ட்ஸைத்தான் கூட்டிட்டுப் போனேன். பலரும் நினைக்கிற மாதிரி உலக அழகிப் பட்டம் என்பது, அழகை மட்டும் அளவுகோலா கொண்டு கொடுக்கப்படுறதில்லை. ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வெற்றிபெற்று அங்கு வந்திருக்கும் பெண்களுக்கு, ஒரு மாத காலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். அறிவுத்திறன், பிட்னஸ், நேரமேலாண்மை, பேஷன், மக்கள் வாக்கெடுப்புனு இப்படி எல்லா வரையறைகளிலும் முதன்மையாக இருக்குறவங்களே உலக அழகியா தேர்வு செய்யப்படுவாங்க. அந்தப் போட்டியில் கலந்துக்கிட்டப்போதான், இந்திய மாடல்களுக்கு உலகளவில் இருக்கும் மதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். இன்னொரு முக்கியமான தகவல்... பலரும் சொல்வதுபோல, உலக அழகிப் போட்டியில் பிகினி ஆடை அணிந்து ரேம்ப் வாக் செய்வது போன்ற எந்தவொரு சுற்றும் இல்லை’’ என்கிறவர், எதிர்காலம் பற்றிப் பகிர்கிறார்.

“போன வருஷம் ‘மிஸ் இந்தியா’வாக வாகை சூடியதால, இந்த வருஷம் இந்தியாவில் நடக்கும் ஸ்டேட் லெவல் ‘மிஸ் இந்தியா’ ஆடிஷன்களுக்கு நடுவராகச் சொல்லும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. நிறைய திரைப்பட வாய்ப்புகளும் வந்திட்டிருக்கு. நல்ல கதையாக அமையட்டுமேனு காத்திட்டிருக்கேன். ஆதரவற்ற முதியவர்களும் குழந்தைகளும் சேர்ந்து தங்குற மாதிரியான ஒரு ஹோம் கட்டணும் என்பது அம்மாவின் ரொம்ப நாள் கனவு. அதைச் சீக்கிரமே நிறைவேற்றணும்!’’

- 20 வயது இளம் பெண்ணின் கனவுச் சிறகுகள் படபடக்கின்றன!

-சு.சூர்யா கோமதி 

சமுதாயத்துடன் நிறைய போராட வேண்டியிருந்தது!

அசத்தல் அம்மா-மகள்: எங்கம்மா ஒரு சிங்கிள் மதர் என்பதை கர்வத்தோடு சொல்வேன்!

`பெஸ்ட் மாம்' எனும் சிறப்பான அங்கீகாரத்தை அவள் விகடன் விருதுகள்-2018 நிகழ்ச்சியில் வென்றவர் அனுக்ரீத்தியின் அம்மா சலீனா வாஸ்! அவர் என்ன சொல்கிறார்?

``சிங்கிள் பேரன்ட்டின் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிற மனமாற்றம் இப்போ கொஞ்சம் கொஞ்சமா சமூகத்துக்கு வந்துட்டிருக்கு. ஆனா, 17 வருஷத்துக்கு முன்னால நான் ஒரு சிங்கிள் மதரா நின்றபோது, வாழ்க்கையோடு மட்டுமல்ல... சமுதாயத்துடனும் நிறைய போராட வேண்டியிருந்தது. அந்தச் சூழலில் எனக்கு இருந்த ஒரே ஆறுதலும் நம்பிக்கையும் என் குழந்தைகள்தான். அவங்களுக்காக ஓட ஆரம்பிச்சேன். என்ன கஷ்டம் வந்தாலும் ரெண்டு பேரையும் நல்லா படிக்கவைக்கணும் என்பதில் மட்டும் உறுதியா இருந்தேன். ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பின் பசங்களும் வீட்டின் சூழ்நிலையைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சாங்க. `மூத்த பிள்ளை... அவளுக்கான பொறுப்போட வளர்க்கணும்'னு எந்த முடிவு எடுக்கும்போதும் அனுகிட்ட கருத்துக் கேட்பேன். கல்லூரியில் சேர்ந்ததும் மாடலிங் பண்றேன்னு அவ சொன்னபோது, எனக்கு பயம் இருந்தாலும், அதையும் தாண்டி அவளால் எந்தச் சூழலிலும் தைரியமாகச் செயல்பட முடியும்னு நம்பினேன். ஆனா, அது உலக அழகிப்போட்டிவரை அவளை அழைச்சிட்டுப் போகும்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. அந்த வெற்றி ரொம்ப மகிழ்ச்சியா, நெகிழ்ச்சியா இருந்தது!''