
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி

அம்மாக்களுக்கு பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளை வளர்ப்பதுதான் உண்மையில் சிரமமானது. ஏனெனில், ஆண் குழந்தையின் பயாலஜியைப் பற்றியோ, சைக்காலஜியைப் பற்றியோ அம்மாக்களின் புரிந்துணர்வு குறைவாகவே உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
அந்தக் கால அம்மாக்கள், ஆண் குழந்தைகளை வளர்ப்பதில் அதிகம் திணறவில்லை; தடுமாறவில்லை. காரணம், ஒரு பெண்ணுக்கு ஏற்கெனவே தம்பி, சகோதரியின் மகன், சகோதரனின் மகன் என்று ஓர் ஆண் குழந்தையையாவது வளர்த்த அனுபவம் இருக்கும். விளைவாக, ஓர் ஆண் குழந்தையின் வளர்ச்சி, ஆணின் இயல்பு என்ன என்பதைப் பற்றியெல்லாம் தங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் மற்றும் ஆண்களிடமிருந்து அதிகம் உள்வாங்கினார்கள். ஓர் ஆணின் பார்வை, எண்ணம் இவைதாம் என்று எதார்த்தத்தில் அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஓர் ஆணின் பாலியல் தேவை பற்றியும் அந்தக் கால அம்மாக்களுக்கு தெளிவாகப் புரிந்திருந்தது.
இந்தத் தலைமுறை மம்மிகளுக்கு, பள்ளியில் படித்த இனப்பெருக்க உறுப்புகள் பாடம் தவிர, ஆண் பெண் உடலியல் பற்றி எந்த விழிப்புணர்வும் கிடையாது. தன்னைச் சுற்றியுள்ள உலகம் மூலம் அதை அறிவதற்கான வாய்ப்பும் அற்ற தனிக்குடித்தனங்களில் வளர்ந்தவர்கள் அவர்கள். திருமணம், குழந்தைப்பேறு என்பவையெல்லாம் அவர்கள் அறிவுபூர்வமாகச் சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து நடந்துவிடுகின்றன. இந்தச் சூழலில், ஓர் ஆண் குழந்தையின் அம்மாவாக, தன் மகன் பதின்பருவத்தை எட்டும்போது, அதைக் கையாள்வதற்கோ, எதிர்கொள்வதற்கோ எந்த அனுபவ அறிவும் அவர்களுக்கு இருப்பதில்லை.

அந்தக் கால அம்மாக்களுக்கு, ஒரு பையன் இந்த வயதில் வயதுக்கு வருவான்; அப்போது, அவனுக்குள் நடக்கும் பாலியல் மாற்றங்களால் பல நேரங்களில் கோபப்படுவான்; தேவைப்படும் நேரங்களில் அவனிடம் அமைதிகாத்து, அரவணைத்து, மெச்சி, அவன் போக்கிலேயே விட்டு, அவனை வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற பக்குவம் இருந்தது. இன்றைய ‘வொர்க்கிங் மம்மீஸ்’ ஏற்கெனவே பல சுமைகளில் இருக்கிறார்கள். ‘நாம இவ்வளவு கஷ்டப்படுறோம்... இவன் புரிஞ்சுக்கலையே’ என்று வருத்தப்படும் அவர்கள், தங்களின் ஆண்பிள்ளையின் பருவ மாற்றத்தைத் தான் புரிந்துகொள்ளவில்லை என்பதை உணர்வதில்லை.
‘சரி, நாங்கள் என்ன செய்யணும்?’ என்று கேட்கும் அம்மாக்களுக்கு, வெல்கம்!
பதின்பருவத்தில் ஆண் குழந்தைக்குள் ஏற்படும் உடல் மாற்றங்கள், ‘நான் வளர்கிறேன்’ என்ற பெருமையை அவனுக்குத் தருவதைவிட, ‘நான் நல்லாதான் இருக்கேனா?’ என்ற அச்சத்தையும் சுய விமர்சனத்தையுமே அவனுக்குள் உண்டாக்கும். இந்தத் தாழ்வுமனப்பான்மையின் பிடியில் இருப்பதால், கொஞ்சம் எரிச்சலாகவும் சிடுசிடுப்பாகவும்தான் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘சொன்ன பேச்சைக் கேட்கவே மாட்டேங்கிறே’ என்று அம்மாவின் குரல் ஓங்கினால், அவர்கள் அதைவிட எகிறுவார்கள். கதவை `டமால்' என்று அடைப்பது, `வீட்டைவிட்டு வெளியே போகிறேன்' என்று சொல்வது என்றிருப்பார்கள். அம்மாவை உதாசீனப்படுத்திப் பேசுவார்கள். ‘உங்களை யாரு என்னைப் பெத்துக்க சொன்னா?’ என்பார்கள்.
ஆண் குழந்தைகள் இயல்பு மாறி அம்மாவிடம் முறுக்கிக் கொள்ளும் இந்தச் சூழலில், அப்பாக்கள் அம்மாக்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். ‘அம்மா சொன்னா கேளு’, ‘அம்மா சொன்னா செய்’ என்று தங்கள் ஆண்பிள்ளைகளை வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் நடக்கும் சண்டையில், ‘உங்கப்பா சரியில்ல; எதுக்கும் லாயக்கில்ல’ என்று அம்மா நெகட்டிவாகச் சொல்லியிருப்பார். இப்போது அவையெல்லாம் அந்த அம்மாவையே பாதிக்க ஆரம்பிக்கும். அதாவது, ஆண்பிள்ளை அம்மாவிடம் அராஜகமாக நடந்துகொள்ளும்போது, அவனைத் தட்டிக் கேட்பதற்கான இடம் அப்பாவுக்கு இல்லாமல்போய்விடும். ‘அப்பா இருக்கிறார் அம்மாவைப் பாதுகாப்பதற்கு; அம்மாவிடம் மரியாதை யாகத்தான் பேச வேண்டும்; அம்மாவை நாம் வேலை வாங்க முடியாது; அப்பா வந்து நம்மைத் திட்டுவார்’ என்கிற பயம் ஆண் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். இல்லை யென்றால், அம்மாவை ஓர் அடிமைபோல நடத்த ஆரம்பிப்பார்கள்.
அம்மாக்கள் பையனிடம் மிகவும் அடிபணிந்து போகக் கூடாது. அதே நேரம், `பையன் குணம்கெட்டுப் போய்விட்டானே' என்று அங்கலாய்க்காமல், அவனுக்குள் டெஸ்டோஸ்டீரோன் அதன் வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். `நம் பையன் வயதுக்குவரும் பருவத்தில் இருக்கிறான்; இப்போது இப்படித்தான் இருப்பான்; நாம் சகித்துக்கொள்ள வேண்டும்; காலப்போக்கில் சரியாகிவிடும்’ என்கிற மன முதிர்ச்சியுடன் இதைக் கையாள வேண்டும். ஆம், இவையெல்லாம் கடந்துசெல்லக்கூடிய விஷயங்கள்தாம். ஐந்து ஆண்டுகள் கழித்து, அவர்கள் தங்கள் பெற்றோரின் அன்பையும் அருமையையும் புரிந்து கொள்வார்கள்!
கவுன்சலிங் எப்போது தேவை?
ஓர் ஆண் பிள்ளை சராசரி கோபத்தைத் தாண்டி எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, பொருள்களை உடைப்பது, பெற்றோரை அடிக்க கை ஓங்குவது, அடிப்பது, கெட்ட வார்த்தை பேசுவது, சில பழக்க வழக்கங்கள் மாறியிருப்பது, மிகவும் பதற்றமாக இருப்பது, கோபமாக இருப்பது, உணர்ச்சிநிலை அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பது என இப்படியெல்லாம் இருந்தால், அது மனநலக் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். ‘எல்லாம் வயசுக் கோளாறு... சரியாகிடும்’ என்று விடக்கூடிய பிரச்னை இல்லை இது. லாஜிக்கே இல்லாத கோபம், வித்தியாசமான செயல்பாடுகள், அதிலிருந்து மீண்டு வர அவனுக்கே தெரியாத சூழல் என இதுபோன்ற அதீதம் எல்லாம், மனநல ஆலோசனை தேவைப்படும் நிலை. அப்படிப்பட்டவர்களை கவுன்சலிங் அழைத்துச்செல்ல வேண்டியது அவசியம்.
ஆண் குழந்தைகளுக்குத் தனி அறை தேவையா?
பதின்பருவ ஆண்பிள்ளை களுக்குப் பாலுணர்வு ஏற்படும். அது சார்ந்த விரக்தியும் உண்டாகும். உரிய காரணம் இல்லாமல் கடுகடுப்பாவது, கத்துவது எல்லாம் அவர் களுக்குப் பாலுணர்வு ஏற்படத் தொடங்கியுள்ளதன் வெளிப்பாடே என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். 10, 20 நிமிடங்கள் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் தனிமையில் விடலாம். ஆனால், அரை நாள், ஒரு நாள் எல்லாம் தனிமை கொடுப்பது அநாவசியமானது.
முடிந்தவரை பதின்பருவக் குழந்தைகளுக்குத் தனியாக ஓர் அறை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அந்த மேற்கத்திய கலாசாரம் நம் நாட்டுக்குத் தேவையற்றது. ஆடம்பரம், வசதி என்ற பெயரில் பெற்றோர்களே பிள்ளைகளுக்குத் தனி ரூம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.