
4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்!
தாய்க்கு மகளாக இருப்பதற்கும், குழந்தைக்கு அம்மாவாக இருப்பதற்கும் என்ன வித்தியாசம்?

சுதா ரகுநாதன், பாடகி: ஒரு மகளாக, தாயிடம் எப்படி வேண்டுமானாலும் கோவிச்சுக்கலாம்; கொஞ்சிக்கலாம்... எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொன்றையும் யோசித்துப் பேசவேண்டிய அவசியம் கிடையாது. அவ்வளவு சுதந்திரம் தாயிடம் கிடைக்கிறது.
என்னுடைய பிள்ளைகளுக்குத் தாயாக இருக்கும் இந்த நேரத்தில், ஒரு தலைமுறையே மாறியிருக்கிறது. காலம் மாறியிருக்கிறது. இன்றைய குழந்தைகளை வளர்ப்பதும், அவர்களுடைய கேள்விகளையும் நடத்தைகளையும் எதிர்கொள்வது மிகப்பெரிய சவால்தான். அம்மாவுக்கு நான் மகளாக இருந்த காலத்தை எண்ணிப்பார்க்காமல் காலத்துக்கு ஏற்றாற்போல நம்முடைய மனத்தையும் எண்ணங்களையும் தயார்படுத்திக்கணும்!
காதல் உலகம் எப்படிப்பட்டது?

ஆலியா மானசா, நடிகை: ரொம்ப அழகானது; அன்பால் நிறைந்தது. அன்றாடம் நம்முடைய வாழ்க்கை மாறுகிறது; கலாசாரம் மாறுகிறது. ஆனால், அந்தக் காலம்தொட்டு இன்றுவரை காதல் மட்டும் மாறாமல் தொடர்ந்துவருகிறது. காதலருடனான காதல் மட்டுமல்ல...அம்மாவுடனான காதல், உடன்பிறந்தவர்களுடனான காதல் என எல்லா காதல்களும் அவ்வளவு உயிர்ப்பானது. காதல்களே மனிதர்களைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன!
பிடித்த திரைப்படப் பெண் கதாபாத்திரம்?

தமயந்தி, எழுத்தாளர்: அனுராக் காஷ்யப்பின் That Girl in Yellow Boots படத்தில் இடம்பெறும் கல்கி கோச்லின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆங்கிலோ இந்தியப் பெண் ஒருத்தி, பல இடர்பாடுகளைக் கடந்து, தன் அப்பாவைத் தேடிக்கொண்டே ஒரு மசாஜ் பார்லரில் வேலை பார்த்துக்கொண்டிருப்பாள். நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கும். தன்னிடம் மசாஜ் செய்துகொள்ள வரும் ஒருவரே தன் அப்பா என்பது பின்னர் அவளுக்குத் தெரிய வரும். அப்பா - மகள் உறவை வேறொரு கோணத்தில் சிறப்பாக அணுகியது இந்தப் படம். இதில், கல்கி கோச்லின் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்!
ஓர் அம்மாவாக பிள்ளைகளிடம் நீங்கள் வலியுறுத்தும் விஷயம் எது?

தனம், யூடியூப் ஆர்ட்டிஸ்ட் (நக்கலைட்ஸ்): எனக்கு இரண்டு மகன்கள். அவங்ககிட்ட, ‘ஒரு பெண்ணுக்கான மரியாதையை யார் தர்றாங்களோ அவங்கதான் சிறந்த மனிதர்களாக இருக்க முடியும். நண்பர்களாகட்டும், தங்கைகளாகட்டும்... எந்த உறவாக இருந்தாலும் சரி, ஒரு பெண்ணை மரியாதையா நடத்தணும். அவங்களை சரிசமமா மதிக்கணும்’னு சின்ன வயசுல இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்க்கிறேன்.