மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என் டைரி - 268

தவறு அவன் மீதா... என் மீதா?

வாசகிகள் பக்கம்

##~##

வயது 35 ஆகிறது எனக்கு. இந்த வயதில் எதிர்பாராத ஒரு பிரச்னையைச் சந்தித்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேன். நீங்கள் தெளிய வைப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு, அதை இங்கே இறக்கி வைக்கிறேன்!

வழக்கமாக எங்கள் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, திருவிழாவுக்கு அன்னதானம் செய்ய ஒவ்வொரு வீடாகச் சென்று நன்கொடை வசூல் செய்வார்கள். அப்படித்தான் அன்று எங்கள் வீட்டுக்கும் வந்தார்கள். அதில் பல இளைஞர்களும் நான் அறிந்தவர்களாக இருந்தாலும், ஒருவன் மட்டும் முன், பின் பார்த்திராதவனாக இருந்தான். அவர்கள் நன்கொடையாக கொடுக்க வலியுறுத்திய தொகை அப்போது என்னிடம் இல்லாததால், மற்றொரு சமயம் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறினேன். மறுநாள், பணம் பெறுவதற்காக வந்தது... அந்த இளைஞன்தான்.

என் கணவர் அலுவலகம் சென்றிருக்க, குழந்தைகள் பள்ளி சென்றிருக்க, அவனை ஹாலில் அமரவைத்துவிட்டு, பணத்தை எடுத்து வந்து கொடுத்தேன். ''கொஞ்சம் தண்ணி ஆன்ட்டி...'' என்றான். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தபோது, ''உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். பெட்ரூமுக்கு வர்றீங்களா?'' என்றான். திடுக்கிட்ட நான் என் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, ''மரியாதையா இங்க இருந்து போயிடு...'' என்று கூச்சலிட்டபடியே, சட்டென வீட்டைவிட்டு வெளியேறி வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு, கூச்சல் போட்டேன். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனே வந்து போலீஸுக்கு போன் செய்து, அவனை ஒப்படைத்தனர். சம்பவத்துக்குப் பின், என் கணவர் எனக்கு ஆறுதல் கூறி அமைதிப்படுத்தினார்.

என் டைரி - 268

ஆனால், அதில் இருந்து என் நிம்மதியே போய்விட்டது. 'இளைஞர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லையா... அவன் என் வீட்டுக்கே வந்து இவ்வளவு நடத்தைக் குறைவாகப் பேசும் தைரியம் வருமளவுக்கு என் நடவடிக்கையில் ஏதேனும் தவறு செய்துவிட்டேனா... அல்லது அவன் ஏதாவது சொல்ல முயன்று, நான் தவறாக நினைத்துவிட்டேனா?’ என்று கேள்விகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன.

இன்னொரு பக்கம், வீட்டை விட்டு வெளியேறி தெருவில் இறங்கி நடந்தாலே, எதிர்படுகிறவர்கள் எல்லாம் என்னை வேடிக்கை பொருளாகப் பார்ப்பதாகவும், யாராவது இருவர் பேசிக்கொண்டிருந்தாலே என்னைப் பற்றித்தான் பேசுகிறார்களோ என்றும் தவிக்கிறது மனம்.

இந்தக் கொடுமையில் இருந்து நான் எப்படி விடுபடுவது தோழிகளே..?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு

என் டைரி 267-ன் சுருக்கம்...

''எம்.எஸ்ஸி படிக்கும்போது பழக்கமான தோழிக்கு சமீபத்தில் திருமணம் முடித்தார்கள். பாசத்தைக் கொட்டும் கணவர் கிடைத்தும், ஏதோ ஒன்றை பறிகொடுத்தவளாகவே காணப்பட்டாள். தீர விசாரித்தபோதுதான்... பி.எஸ்ஸி படிக்கின்ற காலத்தில் தோழிக்கு ஒருவரைப் பிடித்துப் போக, 'படித்து முடித்த பிறகு பேசலாம்' என்று பெரியவர்கள் தந்த தைரியத்தில் காதலித்திருக்கிறாள். எதிர்பாராத விபத்தொன்றில் பையன் இறந்து போக, இரண்டு வருடங்களில் தோழிக்கு வேறு மாப்பிள்ளையை திருமணம் முடித்திருக்கிறார்கள் பெற்றோர். காதலன் இறந்த வலி, அடுத்து நடந்த திருமணம்... என அதிர்ச்சியில் இருந்து வெளியில் வர முடியாமல் தவிப்பதுதான் தற்போதைய பிரச்னை. எதையும் மறக்க முடியவில்லை என்று அழுகிறாள். அன்புக்காக காத்திருக்கும் கணவர்... பழையதை நினைத்தே புதைகுழியில் புதைந்து கிடக்கும் மனைவி...

இச்சிக்கலில் இருந்து எப்படி மீட்க என் தோழியை?''

வாசகிகள் ரியாக்ஷன்...

காதலனின் விருப்பமும் இதுவே!

உங்கள் தோழி சந்தித்திருப்பது பலத்த அதிர்ச்சிதான். அதற்காக அன்பையும், காதலையும் மட்டுமே எதிர்பார்த்தும் எந்தப் பாவமும் அறியாத கணவரை வதைப்பது நியாயமில்லையே..! கணவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை தெரிந்து கொண்டபின், எல்லாவற்றையும் அவரிடம் பகிர்ந்து கொண்டிருந்தால், இந்தப் பிரச்னையே வந்திருக்காது! சரி, இதுவரை போனது போகட்டும். இனியாவது, கவனமாக அடியெடுத்து வைக்கச் சொல்லுங்கள். உடனடியாக கணவர் மேல் காதல் வரவேண்டும் என்பதில்லை. நண்பருடன் பழகுவது போல பழகினால்,  நாளடைவில் துக்கம் மறையத் துவங்கும். கணவருடன் சந்தோஷமாக வாழ்வதைத்தான், இறந்து போன காதலரும் விரும்புவார்.

- அவள் விகடன் பேஸ்புக் மூலமாக அத்ரி ராஜ்

மனநிலை தெளிவு பெறச் செய்யுங்கள்!

மனைவியின் மனதை புண்படுத்தாமல், அவருடைய மனதிலிருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில் இருந்தே, உங்கள் தோழியின் கணவர் எத்தனை உயர்ந் தவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நினைப்பாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. காதலித்த வரை மட்டுமேதான் திரு மணம் செய்து கொள்ள வேண்டும் என்றால்... இந்த உலகில் பலருக்கு திருமணமே ஆகியிருக்காது என்கிற உண்மையை, உங்கள் தோழிக்கு முதலில் புரிய வையுங்கள். உங்களால் முடியாதபோது மற்றவர்களின் உதவியை நாடுவதிலும் தவறில்லை. எனவே மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச்சென்று தெளிவு பெறச் செய்யுங்கள்!

- கவிதா, கோவை

அவரவர் வாழ்க்கை... அவரவர் கையில்!

இறந்து போன காதலனை மறக்க முடியாத உங்கள் தோழி, நிச்சயமாக இன்னொருவரை மணக்கச் சம்மதித்திருக்க கூடாது. பெற்றோரிடம் தன் நிலையை எடுத்துச் சொல்லி திருமணத்தை தவிர்த்திருக்க வேண்டும். திருமண விஷயத்தில் தவறான முடிவெடுத்த தோழி, எதுவுமே அறியாத கணவரை தவிக்கவிட்டு மீண்டும் ஒரு தவறு செய்கிறார். இதை அவருக்கு பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கிறது. 'விவாகரத்துதான் முடிவு' என்று உங்கள் தோழியின் கணவர் முடிவெடுத்தால்... அதன் பிறகு உங்கள் தோழியின் நிலை என்னவாகும்? அவருடைய பெற்றோரின் கௌரவம் என்னவாகும்?

இதையெல்லாம் எடுத்துச் சொல்லியும் தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால்... நீங்கள் விலகி விடுங்கள். காலமும், கணவனின் அன்பும் அவரை மாற்றி, கணவருடன் சந்தோஷமாக வாழ வைத்துவிடும்.

- விஜயலஷ்மி, மதுரை