மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சட்டம் பெண் கையில்! - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..? - 22

சட்டம் பெண் கையில்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டம் பெண் கையில் ( யாழ் ஶ்ரீதேவி )

வழக்கறிஞர் வைதேகி பாலாஜி, ஓவியங்கள்: அரஸ்

குழந்தை இல்லா தம்பதிகள், ஏற்கெனவே குழந்தை இருந்தும் சேவை நோக்கத்துடன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் தம்பதிகள், குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும் தனித்து வாழும் ஆண்கள், பெண்கள் என... ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கான சட்ட நடைமுறைகள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் அதுகுறித்த விவரங்களைப் பேசுகிறார், வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

சட்டம் பெண் கையில்! - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..? - 22

இந்துப் பெண் தத்தெடுப்பதற்கான சட்ட நிபந்தனைகள்

•  மேஜரான பெண் திருமணமானவராக இருந்து, கணவரிடமிருந்து அவர் சட்டப்படி விவாகரத்து வாங்காமல் திருமண உறவிலிருந்து தனித்து வாழ்பவராக இருக்கும் பட்சத்தில், அவரின் கணவரின் சம்மதத்துடன் தத்தெடுத்திருந்தாலும் அத்தகைய தத்து சட்டப்படி செல்லாது.

• விவாகரத்தானவராகவோ, கணவரை இழந்தவராகவோ, திருமணமாகாத பெண்ணாகவோ இருந்தால், அவர் தன் விருப்பப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுப்ப தற்கு எவரின் சம்மதமும் பெறவேண்டிய தேவையில்லை. 

• தத்தெடுக்கும் பெண், அவர் தத்தெடுக்கும் குழந்தையைவிட 21 வயது மூத்தவராக இருக்க வேண்டும்.

• வாழ்க்கைத் துணை இல்லாமல் தனித்து வாழும் பெண், ஓர் ஆண் குழந்தையைத் தத்தெடுக்க மறுப்பில்லை. 

 

• ஆண் குழந்தையைத் தத்தெடுக்கும் பெண்ணுக்கு, ஏற்கெனவே ஆண் குழந்தையோ, மகன் வழிப் பேரனோ இருக்கக் கூடாது. அவர் பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் அதற்கு முன்பு அவருக்குப் பெண் குழந்தையோ, அவரின் மகன் வழிப் பேத்தியோ இருக்கக் கூடாது.

சட்டம் பெண் கையில்! - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..? - 22

தத்துக் கொடுப்பவருக்கான சட்ட நடைமுறைகள்

• இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் 1956-ல் விளக்கப்பட்டுள்ளபடி ஒரு குழந்தையின் தந்தை, தாய், கார்டியன் ஆகியோர் மட்டுமே தத்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர்களாவார்கள்.

• குழந்தையின் தந்தை உயிருடன் இருந்தால் தத்துக் கொடுக்கும் உரிமை அவருக்கு உண்டு. மேலும், குழந்தையின் தாயின் சம்மதமும் அவசியம். தாய் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ, இந்து மதத்தைத் துறந்தவ ராகவோ இருந்தால், தாயின் சம்மதம் பெறவேண்டிய அவசியமில்லை

 

• குழந்தையின் தந்தை உயிருடன் இல்லாவிட்டாலோ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நீதிமன்றத்தின் மூலம் சான்றளிக்கப்பட்டவராக இருந்தாலோ, இந்து மதத்தைத் துறந்தவராக இருந்தாலோ மட்டுமே வாழ்க்கைத் துணையின் சம்மதம் பெறா மல் குழந்தையின் தாய் தன்னிச்சையாகத் தத்துக் கொடுக்க முடியும்.

• தாயும் தந்தையும் உயிருடன் இல்லாதபோது, தகுந்த நீதிமன்றத்தின் மூலம் குழந்தைக்கு கார்டியனாக நியமனமாகும் ஒருவர், நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே தத்துக் கொடுக்க முடியும்.

• திருமணமான மகனையோ, மகளையோ தத்துக் கொடுக்க முடியாது. என்றாலும், சம்பந்தப்பட்ட வர்களின் மத சம்பிரதாயங்கள் அனுமதித்தால், அதற்கு வாய்ப்புள்ளது என்று தத்தெடுப்புச் சட்டப் பிரிவு 10(iii) மற்றும் 10(iv)-ல் விளக்கப்பட்டுள்ளது.

சட்டம் பெண் கையில்! - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..? - 22

‘தத்து செல்லாது’ - ஒரு தீர்ப்பு!

ஒரு குழந்தையைத் தத்தெடுக்க மனைவி விருப்பப்பட்டு அதற்கு கணவனும் சம்மதித்து தத்தெடுக்கும்பட்சத்தில், அந்த தத்தெடுப்புச் சட்டப்படியானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், கணவனின் சம்மதத்தைப் பெற்ற பிறகும் மனைவி எடுத்த தத்து செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பு (மாலதி ராய் சவுத்ரி வெர்சஸ் சுதிந்திரநாத் மஜும்தார்), இதில் உள்ள சட்ட விதிகளைக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது.

திருப்தி என்பவர் தன் கணவரின் சம்மதத் துடன் மாலதி என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். மாலதியின் பெற்றோரும் முறைப்படி மத சம்பிரதாயங்களைப் பின்பற்றி, தன் பெண்ணை திருப்திக்குத் தத்துக்கொடுத்தனர். பள்ளி ஆவணங்களும் மாலதி திருப்தியின் வளர்ப்பு மகள் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் இருந்தது. திருப்தி காலமான பிறகு, அவரின் இறுதிச் சடங்குகளை மாலதிதான் செய்தார். அவரின் ஒரே வாரிசு தத்துப் பெண்தான் என்பதால், தன் வளர்ப்பு அன்னை  விட்டுச்சென்ற சொத்துகள் தன்னைச் சேர வேண்டும் என்று விண்ணப்பித்தார் மாலதி. 

வழக்கில் எதிர்த்தரப்பினர், திருப்தியின் கணவரின் உறவினர்கள். ‘இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி திருப்தி விட்டுச்சென்ற சொத்துகளுக்கு நாங்கள்தான் வாரிசு. திருமணமான திருப்தி தன் கணவரை விவாகரத்துச் செய்யாமல் வாழ்ந்துவந்த நிலையில், அவர் கணவருடன் வாழ்பவராகவே கருதப்படுவார். அதனால், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டப்பிரிவு 8-ன்படி, அவர் மாலதியைத் தத்தெடுத்தது சட்டபூர்வமானது அல்ல’ என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

இந்த நிலையில், கீழமை நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்காததால், மாலதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கில் தொடர்புடைய வர்களை விசாரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆவணங்களைச் சரிபார்த்து, இறுதியாக மாலதியைத் திருப்தி தத்தெடுத்தது செல்லாது என்ற தீர்ப்பே வழங்கப்பட்டது.

சட்டம் பெண் கையில்! - தத்துக் குழந்தையின் சொத்துரிமையை உறவுகள் மறுத்தால்..? - 22

அதாவது, திருப்தியின் வளர்ப்பு மகளாக வளர்ந்த மாலதிக்கு அன்னையின் சொத்தில் எந்தவித உரிமையும் இல்லை.காலமான திருப்தி விட்டுச்சென்ற அவர் பெயரிலிருக்கும் சொத்துகளைப் பராமரித்து நிர்வகிப்பவராக மாலதி செயல்படலாம். சொத்துகள் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு திருப்தியின் கடன்களை பைசல் செய்து, அவற்றுக்குண்டான கணக்கை மாலதி ஆறுமாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், ‘திருப்தியின் கணவர் உயிரோடு இல்லை. வளர்ப்பு மகளும் அவர் சொத்தை அடைய முடியாது என்கிற நிலை. இந்தச் சூழலில், குழந்தையில்லாத திருப்திக்கு வாரிசுரிமைச் சட்டப்படி அடுத்தபடியாக வரும் மற்ற வாரிசுகள் அவசியம் ஏற்பட்டால், மறைந்த திருப்தியின் சொத்துகளைத் தற்போது நிர்வகிக்கும் மனுதாரர் மாலதியை நீக்க விண்ணப்பிக்கலாம்’ என்று தீர்ப்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பைப் போல பல தீர்ப்புகள் உள்ள நிலையில், இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், ‘கணவனுடன்தான் நாம் சேர்ந்து வாழவில்லையே, அதனால் தன்னிச்சையாக தத்தெடுத்துக் கொள்ளலாம்’ என்று பெண்கள் அஜாக் கிரதையாக இருந்துவிடக் கூடாது. இதுபோன்ற சூழலில், தங்களை நம்பி வளர்ப்புக் குழந்தையாக வந்தவர்களை ஆதர வற்றவர்களாகத் தவிக்கவிடும் நிலையைத் தவிர்க்கவேண்டுமானால், சட்டம் சொல்லும் ஷரத்துகளைப் பின்பற்றி, முறையாகத் தத்தெடுக்க வேண்டும்.

இதர மதத்தினர் தத்து எடுப்பதற்கான சட்ட நடைமுறைகள், ஜுவனைல் ஜஸ்டிஸ் என்று அறியப்படும் இளவர் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் அதன் திருத்தச் சட்டங்கள், `கார்டியன்ஸ் அண்டு வார்ட்ஸ் ஆக்ட் 1890' என இந்தச் சட்டங்கள் விளக்கும் விதிமுறைகளைப் பற்றி வரும் இதழ்களில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

சட்டத்தில் சில திருத்தங்கள்!

 1956-ல் கொண்டுவரப்பட்ட இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் 2010-ல் சில திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதன்படி பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

 திருத்தப்பட்ட சட்டப் பிரிவுகளின்படி,  நல்ல மன ஆரோக்கியத்துடன் இருக்கும் மேஜர் வயதுடைய பெண், அவர் விருப்பப்படி ஆண் குழந்தையையோ பெண் குழந்தையையோ தத்தெடுக்கலாம்.

 குழந்தையைத் தத்துக்கொடுப்பதில் உயிரோடு இருக்கும் குழந்தையின் தாய், தந்தை இருவரும் சமமான உரிமையைப் பெற்றவர்கள் என்று திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

 காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் பழைய பிரிவுகளை நீக்குவதும் புதிய பிரிவைச் சேர்ப்பதும் எனத் தொடர்ந்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.