தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

முதல் பெண்கள்: வி.எஸ்.ரமாதேவி

முதல் பெண்கள்: வி.எஸ்.ரமாதேவி
பிரீமியம் ஸ்டோரி
News
முதல் பெண்கள்: வி.எஸ்.ரமாதேவி

ஹம்சத்வனி

நாட்டின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி; மாநிலங்களவையின் முதல் பெண்
பொதுச் செயலாளர்; கர்நாடகாவின் முதல் பெண் ஆளுநர்

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களிடம்தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும். ஆளுநர் பதவி அரசுக்குத் தேவையற்றது. பாதுகாப்பு மற்றும் இதர செலவுகளால்தான் அந்தப் பதவி தேவையற்றது என்று சொல்கிறேன். இரண்டு மாநிலங்களின் ஆளுநராக இருந்திருக்கிறேன். ஆனால்,  அதைப்
பெரிய சாதனை என்று நான் கருதவில்லை. சுயசரிதை எழுதும் எண்ணம் துளிகூட இல்லை. அப்படி எழுதும் அளவுக்கு நான் எதுவும் பெரிதாக சாதித்துவிடவில்லை. ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம் குறித்து புனைவு வேண்டுமானால் எழுதலாம்… அதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.''

- வி.எஸ்.ரமாதேவி


அன்றைய மதராஸ் மாகாணத்தின் செப்ரோலு நகரில் 1934-ம் ஆண்டு ஜனவரி 15 அன்று பிறந்தார் ரமாதேவி. தந்தை வி.வி.சுப்பையா, தாய் வி.வேங்கட ரத்னம்மா. கல்வியில் ஈடுபாடுகொண்ட ரமாதேவியை சட்டம் படிக்கவைப்பது என்ற தீர்மானத்துடன் இருந்த சுப்பையா, ஏலூரு சட்டக்கல்லூரியில் சேர்த்தார். ரமாதேவி எம்.ஏ., எல்.எல்.எம் கற்றுத்தேர்ந்தார். சட்டப் படிப்பு முடித்ததும் ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார்.

முதல் பெண்கள்: வி.எஸ்.ரமாதேவி

வி.எஸ்.ராமவதார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ராகேஷ் என்ற மகனும் ரேகா, ராதிகா என்ற இரண்டு மகள்களும் பிறந்தனர். பெண்கள், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள்மீது பெரும் அன்பும் அக்கறையும் கொண்டவர் ரமாதேவி. வழக்கறிஞராக மட்டுமே தன் பணியைத் தொடர்வதைவிடவும், அரசு அதிகாரியானால் விரும்பும் மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்று நம்பினார். விளைவு... மத்திய அரசின் போட்டித் தேர்வுகள் எழுதி குரூப் ஏ அதிகாரியாகத் தேர்வானார். இந்திய சட்ட சர்வீஸ் (ஐ.எல்.எஸ்) அதிகாரியாகப் பணியாற்றினார். சட்டத் துறையின் சிறப்புச் செயலர் பதவியில் சிறிது காலம் பணியாற்றியவர், சட்டக் கமிஷனின் உறுப்பினர் - செயலராகவும் பணியாற்றினார். மத்திய அரசின் சட்டத் துறைச் செயலர் பதவியும் வகித்தார்.  சுங்கவரி மற்றும் கலால் துறை தீர்ப்பாயத்தின் உறுப்பினர் பதவியிலும் சில காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.

1990-ம் ஆண்டு, காங்கிரஸ் ஆதரவுடன் சமாஜ்வாடி ஜனதா கட்சி அரசு அமைத்தது. சந்திரசேகர் பிரதமரானார். வி.பி.சிங் தலைமையிலான ஜனதாதள் அரசு, ஓராண்டு முழுதாகப் பதவியில் நீடிக்க இயலாத நிலையில் பதவியேற்றிருந்தார் சந்திரசேகர். இப்படி அரசியலில் பெரும் குழப்பம் நிலவிய காலகட்டத்தில்தான், தேர்தல் கமிஷனிலும் இந்தியத் தேர்தல் சட்டத்திலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

தலைமைத் தேர்தல் கமிஷனருக்கு உதவியாக இரு தேர்தல் ஆணையர்களை நியமித்தது, வாக்களிக்கும் வயதை  பதினெட்டாகக் குறைத்தது என, அப்போது தலைமைத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றிக்கொண்டிருந்த ஆர்.வி.எஸ்.பெரி சாஸ்திரி கலக்கிக்கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, சாஸ்திரி கேன்சர் நோயால் 1990 நவம்பர் 25 அன்று மரணமடைந்தார். அடுத்த நாளே ரமாதேவியைத் தலைமைத் தேர்தல் அதிகாரி (பொறுப்பு) பதவியில் நியமித்தார் அன்றைய குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

நிலையான ஒருவர் அந்தப் பதவிக்கு வர வேண்டும் என்ற அழுத்தத்தின் பேரில் டி.என்.சேஷனை உடனடியாக அந்தப் பதவியில் நியமிக்க நெருக்கடி தரப்பட, பதவியில் அமர்ந்து இரண்டே வாரங்களில் அதை இழந்தார் ரமாதேவி. 1990 டிசம்பர் 12 அன்று பதவியேற்றார் சேஷன்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராகப் பதவியேற்ற முதல் மற்றும் ஒரே பெண் ரமாதேவிதான். 1993-ம் ஆண்டு, மாநிலங்களவையின் முதல் பெண் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இன்று வரை அந்தப் பதவியை வகித்த ஒரே பெண்மணி என்கிற பெருமையையும் பெற்றுள்ளார்.

அன்றைய பிரதமர் ஐ.கே.குஜ்ராலின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார் ரமாதேவி. ஒட்டுமொத்தமாக மாநிலங்களவையின் நிர்வாகத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என்றாலும், அதை லாகவமாகச் செய்தார்.

1997-ம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார். கூடுதலாக, தேசிய மகளிர் ஆணையத்தின் கௌரவ ஆலோசகராகவும் பணியாற்றினார்.

1997-ம் ஆண்டு, இவரது நிர்வாகத் திறமைக்குப் பரிசாக இமாச்சலப்பிரதேச மாநில ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது.

1999-ம் ஆண்டு வரை அங்கு பணியாற்றியவர், 1999-ம் ஆண்டு, டிசம்பர் 2 அன்று கர்நாடக மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர், ரமாதேவிதான். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தையும்  குற்றச்சாட்டுகளையும் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்தார் ரமாதேவி. 2001-ம் ஆண்டு, அக்டோபர் 8 அன்று கணவர் ராமவதார் காலமாக, சோகத்தில் ஆழ்ந்தார் ரமாதேவி.

நிலம் கையகப்படுத்தல் குறித்து சர்ச்சை, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்க ஆளுநருக்கு இருந்த அதிகாரக் குறைப்பு என்று அதிரடி பிரச்னைகள் கிளம்ப, மனம் வெறுத்துப்போன ரமாதேவி, 2002-ம் ஆண்டு, ஆகஸ்ட் 20 அன்று தன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். ஹைதராபாத்தில் மகனுடன் வசிக்கத் தொடங்கியவர், தன் முதல் காதலான வாசிப்பு மற்றும் எழுத்தைத் தொடர்ந்தார்.

தெலுங்கு மொழியில் புலமை பெற்றிருந்த ரமா, எண்ணற்ற சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், நாடகங்களை எழுதித் தள்ளினார். தொடர்ச்சியாகப் பத்திரிகைகளிலும் எழுதிவந்தார். 1961-ம் ஆண்டு, இவர் எழுதி வெளிவந்த `தேவுடிக்கி உத்தரமு' ஆதர்ச கிரந்த மண்டலியால் பதிப்பிக்கப்பட்டது.

இவரது தெலுங்கு மொழிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து `Contemplation / My Melting Dreams' என்ற பெயரில் 2016-ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார் அவரின் மகளான வி.எஸ்.ரேகா. இந்தப் புத்தகத்தில் பெண்களின் பொருளாதார நிலை, வரதட்சணை, சாதி மறுப்பு மற்றும் மத மறுப்பு திருமணங்களின் சட்டபூர்வ நிலை, பெண் கல்வி, `ஸ்த்ரீ தானம்' என்ற மகளிர் சொத்து, விதவைகளின் சொத்துரிமை, பெண்கள் குறித்த சட்ட வரைவுகள், புத்தரின் அறிவுரைகள், ஆண் மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கிடையேயான இலக்கிய ஒப்பீடுகள் என்று தன் 20 வயது முதல் பல ஆண்டுகளாக ரமாதேவி எழுதியவற்றைத் தொகுத்திருக்கிறார் வி.எஸ்.ரேகா.

2011-ம் ஆண்டு, ஏ.டி.ராமமூர்த்தி என்பவர் தன் நிலத்தை ரமாதேவி ஆளுநராக இருந்தபோது கையகப்படுத்திவிட்டார் என்று ஊடகங்களில் புகார் சொல்ல, யாரும் எதிர்பாராவண்ணம் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த ரமாதேவி, ஊடகங்களைச் சந்தித்து பேட்டியளித்தார். சம்பந்தப்பட்ட சொத்தின் உரிமையாளர் யார் என்பதை நிரூபிக்கும் மியூட்டேஷன் ரிஜிஸ்டரின் நகலை அவர்களிடம் காட்டியவர், நான்கு ஏக்கர் சொத்தும் ராமராவ் என்பவரின் மனைவியான ரமாதேவி வசம் இருப்பதை சந்தேகத்துக்கு இடமின்றி செய்தியாளர் சந்திப்பில் நிரூபித்தார்.

``எல்லா ரமாதேவியும் முன்னாள் ஆளுநர் ரமாதேவி அல்ல. 76 வயதான எனக்கு அடுத்தவர் சொத்தை ஏமாற்றிப் பறிக்கும் அவசியமும் இல்லை; இதுபோன்ற தேவையற்ற விவகாரங்களில் நான் தலையிட விரும்புவதும் இல்லை'' என்று நேரடியாகவே எச்சரித்தார்.

வெறும் ரப்பர் ஸ்டாம்ப்பாக மட்டுமே ஆளுநர்கள் நடத்தப்படுவதை எதிர்த்து ஆளுநர் பதவியைத் துறந்தவர், 76 வயதிலும் பொது மக்கள் முன்னிலையில் தன் நேர்மையைப் போராடி நிரூபித்தவராக, தன் வாழ்க்கையை நீதி வழுவாமல் கட்டமைத்துக்கொண்டவர், 2013-ம் ஆண்டு,  ஏப்ரல் 17 அன்று மாரடைப்பால் காலமானார்.

 ஓவியம்: பிரேம் டாவின்சி