வாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்! - ப்ரீத்தி சின்ஹா

வாய்ப்புகள் ஆயிரம்: ஜிம்முக்குச் சென்றேன்... பிசினஸ் ஐடியா பிடித்தேன்! - ப்ரீத்தி சின்ஹா
‘`எடையைக் குறைக்க ஜிம்மில் சேர்ந்தேன். அங்கே எனக்கு இப்படி ஒரு வெற்றிகரமான பிசினஸ் ஐடியா கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” - பூரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் ப்ரீத்தி சின்ஹா. தன் பருமனைக் குறைக்க, அமெரிக்காவிலிருந்து சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பியவர். அந்த ஆரோக்கியப் பயணத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் ‘உணவே மருந்து’ கான்செப்ட்டில் உணவு வகைகளைத் தயார்செய்யும் பிசினஸ் ஆரம்பித்து அசத்திவருகிறார்.

‘`பி.டெக் முடித்த பின்னர் வங்கி நிர்வாகப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றேன். அமெரிக்கா சென்று பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தேன். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பின்னர், எடை அதிகரித்து பருமன் பிரச்னையால் அவதிப்பட்டேன். இடுப்புப் பிடிப்பு, மூச்சுவிட சிரமம், சோர்வு எனப் பல அசௌகரியங்களும் பருமனால் ஏற்பட்டன. எடையைக் குறைப்பதற்காக ஏரோபிக்ஸ் வகுப்பில் சேர்ந்து பயிற்சிசெய்தேன். அங்கு பயிற்சிக்கு வந்த மற்ற பெண்களிடம் பேசியபோது, உடற்பயிற்சியுடன் சரிவிகித உணவு உட்கொள்வதும், ஆரோக்கியம் தரக்கூடிய காய்கனிகளைத் தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை உணர்ந்தேன். அனுபவமிக்க பெண்களின் ஆலோசனைப்படி சத்தான சாலட் வகைகளைச் செய்து சாப்பிட ஆரம்பித் தேன். நல்ல மாற்றம் தெரிந்தது. மூன்று மாதங்களுக்குள் 15 கிலோ எடை குறைந்தேன்; என் உடல்நலப் பிரச்னைகளும் விலகின.
நம் முன்னோர் வாழ்ந்துவந்த `உணவே மருந்து’ கோட்பாட்டில் ஆர்வம்கொண்டு, அதைக் கற்றுக்கொண்டேன். அதன் அடிப்படையில் சாலட் வகைகளைத் தயாரித்து, ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு வரும் பெண்களுக்குக் கொடுத்தேன். அவர்கள் கொடுத்த ஃபீட்பேக் உற்சாகம் அளிக்கவே, ஒவ்வொருவரின் உடல் பிரச்னைக்கும் நிவாரணம் அளிக்கக்கூடிய சாலட் வகைகளை அவரவர்களுக்கென பிரத்யேகமாகத் தயாரித்து விற்க ஆரம்பித்தேன். டிமாண்டு அதிகமாக, வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி ஆர்டர்களைப் பெற்றேன்’’ என்று சொல்லும் ப்ரீத்திக்கு, எட்டு மாதங்களில் ஏழு வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிக்கும் அளவுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன.

‘`ஆரம்பத்தில் நானே நேரடியாகக் காய் கனிகளை ஆர்கானிக் விவசாயிகளிடமிருந்து வாங்கி, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று டெலிவரிசெய்தேன். அப்போது வாடிக்கையாளர்கள் பலரும் லஞ்ச் மற்றும் டின்னரும் தயாரித்துத் தரும்படி கேட்க, தொழிலை விரிவுபடுத்த முடிவெடுத்தேன். ஊட்டச்சத்து நிபுணர்கள், சமையற்கலைஞர்கள், ஆர்கானிக் விவசாயத்தில் பயிற்சிபெற்றவர்கள், டெலிவரி பணியாளர்கள் கொண்ட குழுவை ஏற்படுத்தினேன். வாடகைக் கட்டடத்தில் எங்கள் அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது. ஸொமாட்டோ, ஸ்விகி, ஊபர் ஈட்ஸ், ஹங்கர் பாக்ஸ் போன்ற ஆன்லைன் டெலிவரி பணியாளர்கள் மூலம் ஹைதராபாத் நகரம் முழுவதும் எங்கள் உணவு வகைகளை கிடைக்கச் செய்தேன். greensandmore.in என்ற எங்கள் வலைதளத்தில் பிசினஸ் அமோகமாக வளர்ந்தது.
வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள 10 மாதங்களுக்கு ஒருமுறை மெனுகார்டை புதுப்பிக்கிறோம். ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட பிரச்னைக்கும் (நீரிழிவு, இதயநோய், பருமன், குழந்தையின்மை, புற்றுநோய்) தீர்வு தரும் வகையிலான பிரத்யேக உணவுகளை வழங்குகிறோம். வயதான மருத்துவர்கள் பலர் ஆங்கில மருந்துகளில் நிவாரணம் கிடைக்காமல், எங்கள் உணவுகளை முயன்றுபார்த்தார்கள். அவர்கள் நலம் பெற்றதுடன், அவர்களிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடமும் எங்கள் உணவு வகைகளைப் பரிந்துரைப்பது எங்களுக்கான பெரிய அங்கீகாரமாக இருக்கிறது.
இந்தியா முழுக்கவும் மற்றும் வெளிநாட்டிலும் என் தொழிலை விரிவாக்க வேண்டும். அதற்காக முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். தரத்தில் சமரசம் செய்துகொள்ளாமல், உணவே மருந்து என்ற உண்மையை உலகெங்கும் ஒலிக்கச் செய்வதே என் நோக்கம்’’ என்கிறார் ப்ரீத்தி சின்ஹா!
-ஸ்ரீ அகத்தியஸ்ரீதர்