
மாற்றம் நல்லது: பிங்க் டாக்ஸி பெண்களால்... பெண்களுக்காக!
இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் கோவை என்று, 2015-ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவுகள் ஆவணம் தெரிவித்திருந்தது. 2019-ம் ஆண்டிலோ நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கு, துடியலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு என்று கோவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
கல்வி நிறுவனங்கள் தொடங்கி ஐ.டி நிறுவனங்கள் வரை பெண்கள் பல துறைகளில் வளர்ந்துவரும் பகுதியாக இருக்கிறது கோவை. இப்போது அதிகரித்துவரும் குற்றங்களால், பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. இந்த நிலையில்தான், பெண்களுக்காக, பெண்களால் இயக்கப்படும் பிரத்யேக ‘பிங்க் டாக்ஸி’சேவை கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேரளம் மற்றும் வடமாநிலங்களில், பெண்களுக்காக பிரத்யேக ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவைகள் இருந்தாலும், தமிழகத்தில் கோவையில்தான் இந்த வசதி முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் ஒன்பது கார்கள். கோவையில் இயங்கி வரும் ‘ரெட் டாக்ஸி’ நிறுவனமே, இந்த ‘பிங்க் டாக்ஸி’யை அறிமுகப்படுத்தியுள்ளது.

“சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதால், ‘பிங்க் டாக்ஸி’ சேவையைத் தொடங்கியுள்ளோம். முழுக்க முழுக்க பெண்களுக்கான டிரான்ஸ்போர்ட் இது. 10 வயதுக்குக்கீழ் இருக்கும் சிறுவர்களை மட்டும் காரில் ஏற அனுமதிக்கிறோம். எங்கள் ஓட்டுநர்கள் அனைவரும் பெண்களே என்பதால், அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
8 மணி நேர பணி. அதற்கு மேல் அவர்களாக விருப்பப்பட்டால் பணியைத் தொடரலாம். அதற்குத் தனி ஊதியம் உண்டு. ஆண் ஓட்டுநர்களைவிட, இந்தப் பெண்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கிறோம்.
பிங்க் டாக்ஸியில் ‘பேனிக் பட்டன்’ என்கிற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆபத்து காலங்களில், ஓட்டுநர் அந்த பட்டனை அழுத்தினால், எங்களது சர்வருக்கு தகவல் வந்துவிடும். உடனடியாக அவர்களது பிரச்னை என்னவென்று பார்த்து சரி செய்வோம். எங்களின் ஆண் ஓட்டுநர்களும் இவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். இந்தப் பெண் ஓட்டுநர்கள், அவசரத் தேவைக்கு பெட்ரோல் பங்க், பெரிய மருத்துவமனைகளில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்திவருகிறார்கள். ஆபத்தான பகுதி என்றால், `எம்ப்டி ட்ரிப்'புக்கு நிறுவனமே கட்டணம் செலுத்திவிடும்’’ என்கிறார் ‘பிங்க் டாக்ஸி’ பொறுப்பாளர் சுகன்யா.
‘பிங்க் டாக்ஸி’ ஓட்டுநர்களில் ஒருவரான நித்யா, “கோவைப் பெண்கள் இந்தச் சேவைக்கு நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். முன் சீட்டில் அமர்ந்துகொண்டு, எங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். கோவைப்புதூர் பகுதி யில் பெரியவர் ஒருவரிடம் ரூட் கேட்டேன். ரூட் சொல்லிவிட்டு, ‘நீங்களெல்லாம் மேல வாங்கம்மா’ என்று வாழ்த்தி அனுப்பினார். பல வாடிக்கையாளர்கள், ‘அடுத்த முறையும் நீங்களே வாங்க...’ என்று மகிழ்ச்சியுடன் விடைபெறுகின்றனர். நான் சொந்தமாக ஆம்னி வைத்திருந்தேன். ஸ்கூல் ட்ரிப் அடித்துக்கொண்டிருந்தேன். அதில் வருமானம் குறைவுதான். முன்பு சம்பாதித்ததைவிட இப்போது இதில் அதிகமாகச் சம்பாதிக்கிறேன்’’ என்றார் உற்சாகத்துடன்.

“நான் எம்சிஏ முடித்துவிட்டு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்’’ என்று ஆரம்பித்த சந்தியா, ‘பிங்க் டாக்ஸி’யில் வாடிக்கையாளராக வந்து, இப்போது ஓட்டுநராக மாறியிருப்பவர். ‘`சென்னை வேலையை விட்டுவிட்டு கோவைக்கு வந்திருந்தபோது, பேருந்து நிலையத்துக்குச் செல்வதற்காக ‘பிங்க் டாக்ஸி’ புக் செய்திருந்தேன். நித்யா அக்காதான் வந்தார். இந்த வேலை பற்றி அவர் சொன்ன பல விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன. ஏற்கெனவே எனக்கு டிரைவிங்கில் ஆர்வம் அதிகம் என்பதால், நானும் இங்கு பணிக்குச் சேர்ந்துவிட்டேன். வாடிக்கையாளர்களாக வரும் பெண்கள் எங்களிடம் மிகவும் அன்பாக இருக்கிறார்கள். மன பாரங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருநாள், என் அம்மா என்னுடன் பயணம் செய்தார். அவருக்கும் இது மிகவும் பிடித்துவிட்டது. எந்த வேலையையும் பிடித்துச் செய்யும்போது கஷ்டம் தெரியாது” என்கிறார்.
மற்றொரு ஓட்டுநர் கௌரி கலா, “நானும் வாடிக்கையாளராகத்தான் ‘பிங்க் டாக்ஸி’க்கு வந்தேன். பல நிறுவனங்களில் பணியாற்றியுள்ளேன். எல்லா இடங்களிலும் டார்ச்சர்தான். ஆனால், இங்கு சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது. ஆரம்பத்தில் என் கணவர் கொஞ்சம் பயந்தார். பிறகு, இங்கு பெண் ஓட்டுநர்களுக்காகச் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களைப் பார்த்து சமாதானமாகிவிட்டார். என் இரண்டு பிள்ளைகளும், ‘எங்கம்மா டாக்ஸி ஓட்டுறாங்க’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள். வாடிக்கையாளராக வந்த கர்ப்பிணி ஒருவர், ‘பிரசவத்துக்கும் குழந்தை பிறந்த பிறகும் உங்களைத்தான் அழைப்பேன்’ என்று உரிமையுடன் சொல்லிச் சென்றார். இப்படி வேலை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்று முடிக்கிறார்.
``ஆமாம்... ஆமாம்'' என ஆமோதிக்கிறார் இன்னுமொரு ஓட்டுநரான பிரியா.
போலாம் ரைட்!
- இரா.குருபிரசாத், படங்கள்: தி.விஜய்