தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்

ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்

ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்

இன்றைய பெண்கள், ஆண்களுக்கு இணையாகப் போர் விமானங்களையே ஓட்டுகிறார்கள். இன்னொரு பக்கம், சில கிராமங்களில் இன்னும் பெண்கள் சைக்கிள் ஓட்டுவதையே ‘குத்தம்’ சொல்கிறார்கள். கரூர் மாவட்டம், ராமாக்கவுண்டனூரைச் சேர்ந்த 79 வயது மூதாட்டியான அம்மையக்காளோ, டிராக்டர் ஓட்டி வயலை உழுகிறார். தங்களது ஃபியட் ப்ரீமியர் பத்மினி காரை அட்டகாசமாக ஓட்டுகிறார். ‘`இதெல்லாம் நான் 30 வருஷங்களா ஓட்டுறேனே தம்பி’’ என்கிறார் சாதாரணமாக!

கரூர் பசுபதி பாளை யத்தையொட்டி இருக்கிறது ராமாக்கவுண்டனூர். இந்த குக்கிராமத்தில் வசிக்கிறார்கள், வையாபுரி - அம்மையக்காள் தம்பதி. ஏழு ஏக்கர் நிலத்தில் போட்டிருக்கும் வெள்ளாமையைத் தனியாளாக இருந்து பார்த்துவருகிறார் அம்மையக்காள். கோடை மழை கரூரில் தலைகாட்ட, அந்த ஈரத்தில் தென்னைகளுக்கு இடையில் களைச்செடிகள் மளமளவென வளர்ந்து கிடக்கின்றன. அவற்றை டிராக்டரில் உழுதுகொண்டிருந்த அம்மையக் காளைச் சந்தித்தோம்.

“நான் பொறந்தது, வாக்கப்பட்டதெல்லாம் இதே ஊருதான். மாமன் மகனைத்தான் எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. நான் பெருசா படிக்கலை. ஆனா, எல்லா விஷயத்தையும் சட்டுனு கத்துக்குவேன். எங்களுக்குப் பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணு. பையன் சொந்தமா தொழில் பார்க்குறான். எங்களுக்குச் சொந்தமான இந்த ஏழு ஏக்கர் நெலத்துல நானும் என் வீட்டுக்காரரும் விடாப்பிடியா விவசாயம் பாத்துக்கிட்டிருக்கோம். சின்ன வயசுலயிருந்தே ஆம்பளைக்குச் சமமா நான் எல்லா வேலையையும் பார்ப்பேன். பரிவடம் போட்டு ஏத்தம் இறைக்கிறது, பாத்தி கட்டுறது, வாய்க்கா வெட்டுறது, மாடுகளப் பூட்டி ஏர் ஓட்டுறது, கட்டைவண்டி ஓட்டுறதுன்னு நான் செய்யாத வேலை இல்ல. மத்த பொம்பளப் புள்ளைகயெல்லாம் என்னை ‘ஆ’ன்னு வாய்பிளந்து பார்ப்பாங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படியேதான் இருந்தேன்.

ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்

30 வருஷங்களுக்கு முன்னாடி என் வீட்டுக்காரரு விவசாயத்துக்காக டிராக்டர் வாங்கினாரு. ‘இதை ஓட்ட எனக்கும் கத்துக்கொடுங்க’ன்னு கேட்டு ஓட்டக் கத்துக்கிட்டேன்.

சொந்தக்காரங்க, அக்கம்பக்கம் எல்லாம், ‘பொம்பள பார்க்குற வேலையா இது’ன்னு பேசுவாங்க. அதையெல்லாம் நான் காதுல வாங்குறதே இல்ல. ஆரம்பத்துல டிராக்டர் ஓட்டுறது கஷ்டமாதான் இருந்துச்சு. ஏன்னா, ஆம்பளைங்களையே டிராக்டர் உதறவைக்கும்; தூக்கித் தூக்கிப்போடும். ஆனா, நான் விடல. மரத்துல மோதி, சுவத்துல இடிச்சு ஒருவழியா இதை ஓட்டக் கத்துக்கிட்டேன். இன்னிக்கு வரை, டிராக்டருக்கு நாங்க டிரைவரே வெச்சுக்கல. நானும் என் வீட்டுக்காரரும்தான் மாத்தி மாத்தி உழவு ஓட்டுறோம். கிராமத்துல மட்டுமில்லாம, கரூர் டவுனுக்கும் பல வேலையா அப்பப்ப இந்த டிராக்டரை ஓட்டிக்கிட்டுப் போவேன். அப்போ டவுனுக்காரங்களே, ‘பாத்தீங்களா இந்த அம்முணிக்கு துணிச்சல’ன்னு ஆச்சர்யமா பேசுவாங்க. ஆரம்பத்துல கொழுவு (உழுவதற்காகப் பயன்படுத்தப்படும் இரும்புக் கருவி), கேஸ் வீல்களை எல்லாம் தனியாளா நானே மாட்டிடுவேன். இப்ப என் வீட்டுக்காரரை உதவிக்கு கூப்பிட்டுக்கிறேன்.

அஞ்சு ஏக்கர்ல தென்னை போட்டிருக்கோம். மீதமுள்ள ரெண்டு ஏக்கர்ல சோளம், கடலை, உளுந்து, கம்பு, எள்ளு, வெண்டை, கத்திரின்னு பல பயிர்களை மாத்தி மாத்தி பயிர்செய்வோம். நான்தான் பெரும்பாலும் இதுக்கெல்லாம் ஏர் ஓட்டுவேன். அதேபோல, பாத்தி கட்டுறது, தண்ணி பாய்ச்சுறது, தேங்காய் உரிக்கிறது, மாடுகளை கவனிக்கிறதுன்னு எனக்கு வீட்டுக்கு வெளியில்தான் வேலை அதிகமா இருக்கும், சளைக்காம பார்ப்பேன்’’ என்கிற அம்மையக்காள், பத்மினி கார் ஓட்டக் கற்றுக்கொண்டதன் அவசியம் வந்ததைப் பற்றிச் சொல்கிறார்.

‘`1994-ம் வருஷம் என் வீட்டுக்காரரு பத்மினி காரை புதுசா வாங்குனாரு. கொஞ்ச நாள்லயே அவருக்கு உடம்புக்கு முடியாம போயிடுச்சு. அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டியது இருந்துச்சு. அதனால, ஆத்திர அவசரத்துக்கு காரை நாமளே எடுத்துக்கலாமேன்னு, இந்த வண்டியையும் ஓட்டக் கத்துக்கிட்டேன். அப்போ எங்கூரு பொண்ணுங்க எல்லாம், ‘ஏ யாத்தா, எல்லா வண்டியையும் ஓட்டுறியே! அப்புடியே உன் வீட்டுக்காரரை ரெண்டு டிரெயினையும் மூணு ஏரோபிளேனையும் வாங்கிப்போடச் சொல்லி ஓட்டு’ன்னு நக்கலா பேசுவாங்க. ‘நானா மாட்டேன்னு சொல்லுறேன்? வாங்கிப்போட்டா ஓட்டிப் புடுவேன்ல...’ன்னு நானும் பதிலுக்குச் சொல்லுவேன். கத்துக்கிறதுல ஆம்பள என்ன, பொம்பள என்ன தம்பி... கெட்ட விஷயங்களைத்தான் யாரும் கத்துக்கக் கூடாது’’ - தன் பேச்சாலும் வியந்து பார்க்க வைக்கிறார் அம்மையக்காள்.

ஆச்சர்யம்: வாய்ப்பு கிடைச்சா ஏரோபிளேனே ஓட்டுவேன்! - அம்மையக்காள்

‘`என் வீட்டுக்காரரை எங்க ஊரு பாரதினு சொல்லலாம். அந்த அளவுக்கு பொண்ணுங்க முன்னேற்றத்துல முற்போக்கா யோசிப்பாரு. இன்னிக்கு ஒரு பொம்பள டிராக்டர் ஓட்டுனாலே தீட்டா பார்க்குற சனங்க, 25 வருஷங்களுக்கு முன்னாடி என்னவெல்லாம் பேசியிருப்பாங்க? ஆனா, என் வீட்டுக்காரரு அதுக்கெல்லாம் காது கொடுக்காம, எனக்கு ஒரு நல்ல குருவா இருந்து சொல்லிக்கொடுத்தாரு. அவரு, எனக்குக் கெடச்ச வரம்’’ என்று மகிழ்ந்தவர், ‘`இப்போவெல்லாம் முன்னமாதிரி டிராக்டரை நீக்குபோக்கா ஓட்டமுடியல. வயசாயிட்டுங்கிறது ஒரு காரணம்னா, முதுகுத் தண்டுப் பிரச்னை இன்னொரு காரணம்.

அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி, எங்க வீட்டு மாடு என்னை இழுத்து, கருங்கல்லுல மல்லாக்கத் தள்ளிவிட்டுடுச்சு. அதுல என் முதுகெலும்பு துண்டாயிடுச்சு. அதை கஷ்டப்பட்டு சரி பண்ணினாலும், டிராக்டரில் பழையபடி ஓங்குதாங்கா உக்காந்து ஓட்டமுடியல; மெதுவாதான் ஓட்டுறேன். இருந்தாலும், ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? என் கட்டை மண்ணுல சாயுறவரைக்கும் இந்த வண்டிகளை ஓட்டிக்கிட்டுதான் இருப்பேன்!” - தன் டிராக்டரை செல்லமாக ஒரு தட்டுத் தட்டுகிறார் அம்மையக்காள்.

அம்மையக்காளின் கணவர் வையாபுரி, “என் மனைவி டிராக்டர் ஓட்டக் கத்துக்கொடுக்கக் கேட்டப்போ, அவங்கள வாரியணைச்சுப் பாராட்டத்தான் தோணுச்சு. நாங்க கொள்ளுப்பேரன் வரைக்கும் பார்த்துட்டோம். இன்னமும் என் மனைவி சின்னப்பொண்ணு மாதிரி எல்லா வேலைகளையும் ஓடியாடிப் பண்ணுறாங்க. கம்பீரமா டிராக்டர் ஓட்டுறாங்க. உடம்பு முடியாத என்னைத் தாங்கு தாங்குனு தாங்குறாங்க. வேற என்ன வேணும்’’ என்கிறார் நிறைவிலும் நிறைவாக.

தன் கணவர் அருகில் அமர்ந்துகொள்ள, சடசடவென டிராக்டரை எடுக்கிறார் அம்மையக்காள்.

தென்னைகளுக்கு நடுவில் உறுமியபடிச் செல்கிறது வண்டி!

- துரை.வேம்பையன், படங்கள்: நா.ராஜமுருகன்