தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்

வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்

வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்

மன அழுத்தம் நிறைந்த தொழில்களில் மருத்துவமும் ஒன்று. அந்த மன அழுத்தத் துக்குக் காரணம், மருத்துவர்களின் லட்சிய விரட்டல்கள்... அடுத்தடுத்து சிறப்புப் படிப்புகள், அனைத்தையும் வெளிநாடுகளில் முடிப்பது, சொந்தமாக கார்ப்பரேட் மருத்துவமனை, வாரிசுகளையும் அதே லட்சியப்பாதைக்குத் தயார்படுத்துவது என அந்தப் பட்டியல் நீளமானது. அரிதாக வெகுசில மருத்துவர்களே இவற்றிலிருந்து வித்தியாசப்படுத்துகிறார்கள்; விலகி நின்று வியக்கவைக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வேலூரைச் சேர்ந்த மருத்துவர் கீதா மத்தாய்.

மெல்லிதயம்கொண்ட குழந்தைகள்நல மருத்துவராக மனம்கவரும் கீதா, கராத்தே, நீச்சல், சிலம்பப் பயிற்சிகளில் சாதனைகளைத் தொடர்கிற இரும்பு மனுஷியாகவும் கவனம் ஈர்க்கிறார்!

‘`பிறந்தது கேரளாவில். டெல்லியிலேயும் அமெரிக்காவிலும் படிப்பை முடிச்சிட்டு, வேலூர் சிஎம்சியில் குழந்தைகள்நல மருத்துவத்தில் ஸ்பெஷலைஸ் பண்ணினேன். என்னுடைய கிளாஸ்மேட்டையே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நான் போஸ்ட் கிராஜுவேஷன் படிச்சிட்டிருந்தபோது ரெண்டு குழந்தைங்க பிறந்துட்டாங்க. ‘இனிமே அவ்வளவுதான்... வாழ்க்கையே முடிஞ்சுபோச்சுனு நினைச்சேன்.  பிரைவேட் பிராக்டிஸ் ஆரம்பிச்சேன். ஆனா, நான் பயந்தமாதிரி தாய்மையோ, குழந்தைங்களைப் பார்த்துக்கிற பொறுப்போ, வாழ்க்கையின் எந்த ஆர்வத்துக்கும் தடையா இருக்கிறதில்லைங் கிறதை அப்புறம்தான் புரிஞ்சுக்கிட்டேன்.

வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்

ஸ்கூல் படிக்கும்போதிலிருந்தே நான் ஸ்போர்ட்ஸ்ல ஆர்வமா இருந்திருக்கேன். என் மகள் அப்போ மூணாங்கிளாஸ் படிச்சிட்டிருந்தாள். நியூஸ் பேப்பர், டி.வி நியூஸ்னு எல்லாத்திலும் தினமும் பெண் குழந்தைகளுக்கு எதிரா நடக்கிற கொடுமைகளும் வன்முறைகளுமே செய்திகளா இருந்தன. அந்தச் செய்திகள் எல்லாம் `இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான இடமில்லை' என்கிற எண்ணத்தை உருவாக்கின. வரதட்சணை கொடுமை, பாலியல் வெறி... இப்படி இன்னும் பல காரணங்களுக்காக பிறந்த குழந்தையி லிருந்து பாட்டிகள்வரைக்கும் எல்லாப் பெண்களும் வன்முறைகளுக்கு உள்ளாகிறாங்க. என் மகளுக்குப் பாதுகாப் பான வாழ்க்கையைத் தரணும்னு நினைச்சு, அவளையும் என் மகனையும் கராத்தே கிளாஸ்ல சேர்க்கக் கூட்டிட்டுப் போனேன்.

அங்கே பயிற்சி எடுத்துகிட்டிருந்த ஆண்கள் ஆஜானுபாகுவா இருந்தாங்க. அவங்களைப் பார்த்ததும் ஏதோ ஒரு பயம். என் பசங்களோடு நானும் கராத்தே சேர்ந்துட்டேன். நாங்க மூணு பேரும் ஒண்ணா கராத்தே பயிற்சி முடித்து ஒண்ணா பிளாக் பெல்ட் வாங்கினோம்’’ - முதல் சாதனையை சத்தமின்றி சாத்தியமாக்கிய டாக்டருக்கு, அடுத்தடுத்து அது தொடர்கதையானது சுவாரஸ்யமாக இருக்கிறது.

‘`பிள்ளைங்க ரெண்டு பேரும் வளர்ந்து அவங்கவங்க துறைகளில் பிசியானாங்க.  நான் மட்டும் கராத்தேவைத்  தொடர்ந்துக்கிட்டிருந்தேன். அதுல மூணு ஸ்ட்ரைப்ஸ் வாங்கிட்டேன். என் கராத்தே மாஸ்டர், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகணும்னு சென்னைக்குக் கிளம்பிட்டார். அதனால நான் கராத்தேவைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டியதாச்சு. சும்மா இருக்க முடியாம மராத்தான் ஓட ஆரம்பிச்சேன்.

64 ஹாஃப் மராத்தான் ஓடியிருக்கேன். சின்ன வயசுலயே நீச்சலும் கத்துகிட்டேன்.

25 வயசுக்கு மேல ஒருத்தர் மாஸ்டர் ஸ்விம்மர் ஆகலாம். அப்படிப் பயிற்சிகள் எடுத்ததுல ஸ்விம்மிங்ல கோல்டு மெடல் வாங்கிய ரெக்கார்ட்ஸ் எனக்கு உண்டு. இப்படி ஆக்டிவா இருந்தபோதுதான் அந்தச் சம்பவம் நடந்தது’’ - பேச்சில் ‘பாஸ்’ பட்டனை அழுத்தி, சில நொடிகளுக்குப் பிறகு தொடர்கிறார் கீதா.

‘`வீட்டுல ஒருநாள் லைட் போடாம படிக்கட்டுல இறங்கினபோது கால் தவறி விழுந்துட்டேன். கண்விழித்துப் பார்த்தபோது நான் படுக்கையில் இருந்தேன். குதிகால் தசைநார் நரம்பு கட்டாயிடுச்சு, தொடை நரம்பு செயலிழந்துபோச்சு. ‘இனிமே உங்களால் நடக்க முடியாது’னு சொன்னாங்க டாக்டர்ஸ். கிட்டத்தட்ட மூணு மாசம் பெட் ரெஸ்ட்ல இருந்தேன்.

வாவ் டாக்டர்: எந்த வயதிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை! - டாக்டர் கீதா மத்தாய்

இயல்பிலேயே நான் ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. எங்க அப்பா சுதந்திரப் போராட்ட தியாகி. அவரின் மகளான எனக்கும் போராட்ட குணம் அதிகம். உடம்புக்கு முடியாம படுக்கையில இருந்தபோதும் என் போராட்ட குணம் என்னைவிட்டுப் போகலை.  `மறுபடியும் நடந்தே தீருவேன்'னு உறுதியா இருந்தேன். பிசியோதெரபிஸ்ட் உதவியோடு ஒரு வருஷம் பயிற்சி எடுத்தேன். கட்டை வெச்சுக்கிட்டு நடக்க முயற்சி பண்ணினேன். அப்படி நடந்து வந்தே கிளினிக்கையும் பார்த்துக்கிட்டேன். ஒரே வருஷத்துல முழு வீச்சில் தயாரானேன். 

என்னால மாரத்தானில் மறுபடி ஓட முடியல. ஆனா, இப்போதும் ஸ்விம்மிங் பண்றேன். ‘மராத்தான் ஓட முடியாது. கராத்தே மாஸ்டரும் இல்லை... நான் என்ன பண்ணப்போறேன்’னு யோசிச்சேன். அப்பதான் வேலூரில் உள்ள பழைமையான சிலம்பப் பயிற்சி பள்ளி பற்றித் தெரியவந்தது. முதல் சந்திப்பிலேயே என் வயசைக் கேட்டாங்க. ‘மார்ஷியல் ஆர்ட்ஸுக்கு வயசு முக்கியமில்லை’னு  சொன்னேன். என் தன்னம்பிக்கையைப் பார்த்துட்டு எனக்கு சிலம்பம் கற்றுக்கொடுக்க சம்மதிச்சாங்க. எனக்கு இடது கால் முழுமையா குணமடையலை. என்னால குதிக்க முடியாது. குச்சிகளைவெச்சு செய்யும் சிலம்பப் பயிற்சிகளை என்னால் பண்ண முடியாது. அதனால எனக்கு ஸ்வார்ட்ஸ்னு சொல்ற வாள் பயிற்சி மட்டும் சொல்லிக் கொடுத்தாங்க. வாள்கள் ஒவ்வொன்றும் இரண்டு முதல் மூன்றரை கிலோ இருக்கும். அவற்றைவெச்சுப் பயிற்சி எடுத்ததுல இப்ப எங்க சிலம்பப் பயிற்சிப் பள்ளி சார்பா கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு முடிச்சிட்டு வந்திருக்கேன். என் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையும் பார்த்த மாஸ்டர் விக்னேஷ்வர ராவ் அடுத்து எனக்கு மான்கொம்புப் பயிற்சி கற்றுக்கொடுக்கறதா சொல்லியிருக்கார். இந்த எல்லா விஷயங்களையும் செய்யணும்னா எனக்கு உடம்புல பேலன்ஸ் வேணும். அதுக்காக ஜும்பா டான்ஸ் பிராக்டிஸ் ஆரம்பிச்சிருக்கேன்’’ - ஆச்சர்யங்களை அடுக்கும் ஆர்வங்களின் காதலிக்கு 67 வயது! இவரது ‘ஸ்டேயிங் ஹெல்த்தி இன் மாடர்ன் இந்தியா’ புத்தகம், அமேசானின் பெஸ்ட் செல்லர்களில் ஒன்று.

‘`பெண்கள் எந்த வயசிலும் எந்த விஷயத்தைச் செய்யவும் தயங்க வேண்டியதில்லை. அவங் களுக்குப் பிடிச்ச விஷயங்களை தாராளமா செய்யலாம். தற்காப்புக் கலைகள் கத்துக்கப் போறவங்களுக்கு சேலை சரியா வராது. பேன்ட் போட்டுக்கிட்டுதான் பண்ண முடியும். ஸ்விம்மிங் கத்துக்கணும்னு விரும்பும் பெண்கள் ஸ்விம்சூட் போட்டுதான் ஆகணும். அடுத்தவங்க நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்களோ, ஆம்பளைங்க தப்பா பார்ப்பாங்களோன்னு யோசிக்க வேண்டியதில்லை. உங்க உடம்பை ஓர் ஆண் முறைச்சுப் பார்க்கறானா... கோளாறு அவன்கிட்டதான், உங்கக்கிட்ட இல்லை.

இந்தியச் சமூகத்தில் பெண்களைப் பல விஷயங்களைச் செய்யவிடாமல் தடுப்பது அவங்களுடைய குடும்பச் சூழல். குறிப்பா அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுடைய ஈகோவும் சந்தேக புத்தியும். ‘இவள் என் மகள், என் சகோதரி, என் வீட்டுப்பெண் என்ற  எண்ணம் ஒவ்வோர் ஆணுக்கும் இருக்கணும். ஆணின் தப்பான பார்வைக்குப் பெண்களும் பயப்படக் கூடாது. ஒரு முயலுக்கு எதிரில் ஒரு புலி வருதுன்னு வெச்சுப்போம். அந்த முயல் நினைத்தால் அந்தப் புலியிடமிருந்து தன்னைக் காப்பாத்திக்க  முடியும். புலியோடு சண்டை போட்டு ஜெயிக்கணும்னு அவசியமில்லை. பயந்து பின்வாங்காமல் புலிகிட்ட தன்னுடைய பற்களை மட்டும் காட்டினாலே போதும்.  புலிக்கு பயம் வரும். மனுஷங்களுக்கும் இது பொருந்தும். உங்களை யாராவது தாக்க வந்தாங்கன்னா பயந்து ஓட வேண்டாம். முகத்தில் பயத்தைக்  காட்டாமல் தைரியமா நின்றாலே போதும்’’ - ‘வேலூர்’ நாச்சியாராக அட்வைஸ் செய்கிறவர், தன்னிடம் சிகிச்சைபெற வரும் குழந்தைகளிடம் அம்மாவாக, பாட்டியாக, தோழியாக அன்பு அவதாரம் எடுக்கிறார்.

‘`எனக்குக் குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். குழந்தைகள்நல மருத்துவரா மூன்று தலைமுறைகளைப் பார்த்துட்டேன். என்கிட்ட சிகிச்சைக்கு வரும் குழந்தைங்க என் குழந்தைங்க மாதிரிதான்.  என்னை டாக்டரா பார்த்து மிரளவோ, அழவோ மாட்டாங்க. முதல் விசிட்டிலேயே என்கிட்ட ஒட்டிப்பாங்க. நானும் அவங்களுக்கு இணையா குழந்தையா மாறிடுவேன். குழந்தைகளின் உலகத்தில் இருக்கிற வாய்ப்பு அலாதியானது’’ - கைகளில் சிலம்பமும் முகத்தில் சிரிப்புமாக மனதை நிறைக்கிறார் இந்த மருத்துவர்!

-ஆர்.வைதேகி, படங்கள்: ச.வெங்கடேசன்