தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
ஹெல்த்
Published:Updated:

வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

``சென்னையில் படிப்பை முடித்து, அமெரிக்காவில் 10 ஆண்டுகள் பணியாற்றி னேன். பிறகு, சென்னையில் குடியேறினேன். 2001-ம் ஆண்டு கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தையைச் சந்தித்தேன். ஆபரேஷன் முடிந்திருந்த அந்தக் குழந்தையை கீமோதெரபி சிகிச்சைக்காக இரண்டு மாதங்கள் அழைத்து வந்தனர் குழந்தையின் பெற்றோர். பிறகு, ஒரு வருடத்துக்குப் பின்னர்தான் அந்தக் குழந்தையை மீண்டும் அழைத்துவந்தார்கள். சரியான சிகிச்சையளிக்காததால், குழந்தையின் உடல் முழுக்க புற்றுநோய் பரவிவிட்டது. `எங்களிடம் பணமில்லாததால்தான் சிகிச்சைக்குக் குழந்தையை அழைத்துவர முடியவில்லை’ என அந்தப் பெற்றோர் கலங்கிய நொடியை மறக்க முடியாது. அடுத்து எதுவும் செய்யமுடியாத கையறு நிலையில், அந்தக் குழந்தையின் மரணம் என்னை மிகவும் பாதித்தது. புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் சென்னையிலுள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று விசாரித்தேன். ஏழ்மையால் முறையான சிகிச்சை பெற முடியாமல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 40% பேர் மட்டுமே குணமடைவதாக அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.

வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

புற்றுநோயாளிகளை உயிர்பிழைக்கச் செய்யும் கீமோதெரபி சிகிச்சைக்கான செலவு அதிகம். நான் பணியாற்றுவது தனியார் மருத்துவமனை என்பதால், அங்கு இலவச சிகிச்சையளிக்க வாய்ப்பில்லை. எனவே, 2002-ம் ஆண்டு, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷ’னைத் தொடங்கினோம். நான் பணியாற்றும் மருத்துவமனைக்குப் புற்றுநோய் சிகிச்சைக்கு வரும் ஏழைக் குழந்தைகளை, எங்கள் ஃபவுண்டேஷன் தத்தெடுத்துக்கொள்ளும். அவர்களின் சிகிச்சை செலவுகளை முழுக்க ஏற்றுக்கொள்கிறோம்” - சொல்லிலும் செயலிலும் அக்கறை, `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் டாக்டர் பிரியா ராமச்சந்திரனுக்கு. இந்த ஃபவுண்டேஷன் மூலம், இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 175 குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது. அதில் பலரும் குணமாகி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

டாக்டர் தம்பதி ராமகிருஷ்ணன் - மாதங்கியின் மகளான பிரியா, அறுவை சிகிச்சை நிபுணர். இவர், 2017-ம் ஆண்டுக்கான `சிறந்த மருத்துவ’ருக்கான அவள் விகடன் விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கொண்ட சவால்கள்?

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை முறைகள் இரண்டுக்கும் அதிக வித்தியாசமிருக்கிறது. எனவே, அனுபவமிக்க புற்றுநோய் மருத்துவரைக் கண்டுபிடிப்பது முதல் சவாலாக இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜூலியஸ் ஸ்காட், ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான புற்றுநோய் சிகிச்சை முறைகளைப் பயின்றவர். அவரைத் தேர்வு செய்தோம். இன்றுவரை அவர்தான் குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு 7 - 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும். எனவே, நிதி திரட்டுவது அடுத்த பெரும் சவால். பிறகு, பெற்றோருக்குத் தொடர்ந்து நம்பிக்கையைக் கொடுத்து குழந்தையை முறையாக சிகிச்சைக்கு அழைத்துவர வைப்பதும் முக்கியமான சவால். கடைசி இரண்டு சவால்கள் இப்போதும் தொடர்கின்றன. ஆனாலும், ஃபவுண்டேஷன் பணியால் உளமார மகிழ்ச்சியடைகிறேன்.

வாவ் டாக்டர்: குழந்தைகளின் மகிழ்ச்சி... ரஜினிக்கு ஆனந்தக் கண்ணீர்! - டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

எந்த வயதில் புற்றுநோய் வரக்கூடும்?

குழந்தைகளுக்குக்கூட வயது வித்தியாசமின்றி புற்றுநோய் வரும் என்பது வேதனையான செய்தி. அம்மா சாப்பிடும் உணவுகள் மற்றும் புறக்காரணிகளைப் பொறுத்து, கருவிலுள்ள குழந்தைக்குப் புற்றுநோய் வருவதற்கான மாற்றங்கள் உருவாகலாம். அது குழந்தை பிறந்த சில வாரங்களில்கூட கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்படலாம். உரிய காலத்தில் கண்டறிந்து நல்ல முறையில் சிகிச்சையளித்தால் புற்றுநோயைக் குணப்படுத்தலாம். பிறகு ஆரோக்கியத்துடன் அந்தக் குழந்தைகள் 18 வயதைக் கடந்துவிட்டால், அவர்களில் 80% பேருக்கு மீண்டும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பில்லை.

உங்கள் ஃபவுண்டேஷன் குழந்தைகளைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கண்கலங்கிய தருணம் பற்றி...

குழந்தைகளுக்கு எங்களால் இலவச சிகிச்சை களைத்தான் கொடுக்க முடியும். ஆனால், குழந்தைகளுக்குப் பிடித்தவர்களால்தான் அவர்களை மகிழ்விக்க முடியும். அதனால் 2014-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் சினிமா பிரபலங்களை வரவழைத்து குழந்தைகளுடன் உரையாட, விளையாட, போட்டோ எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்கிறோம். ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், த்ரிஷா, கார்த்தி, தனுஷ், விஷால் ஆகியோரை வரவழைத்தோம். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த ஆண்டுக்கான விழாவில், ரஜினி சார் கலந்துகொண்டார். தனித்தனியே ஒவ்வொரு குழந்தையுடனும் அவர் போட்டோ எடுத்துக்கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றி நான் பேசும்போது, மேடையில் அமர்ந்திருந்த ரஜினி சாருக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் குழந்தைகள் மகிழ்ச்சியடைய, ரஜினி சாருக்கு மீண்டும் ஆனந்தக் கண்ணீர்!

உங்கள் தமிழ் ஆர்வம் பற்றி...

தமிழ்மொழியின் வளமை தெரியாமல் பள்ளிக் காலத்தை முடித்துவிட்டேன். என் மூத்த மகனுக்குத் தமிழில் எழுத, படிக்கத் தெரியாது. அதற்காக சில நேரங்களில் அவன் வருத்தப்படுகிறான். மகனைத் தமிழில் பேசப் பழக்கப்படுத்தாததில் என் தவறும் இருக்கிறது. காலம் கடந்து என் தவற்றை உணர்ந்து, இப்போது நான் தமிழ் மொழியில் அதிக ஆர்வம்காட்டுகிறேன். ஓராண்டில் மூன்று தமிழ் நூல்களை எழுதினேன். இப்போது இலக்கியக் கூட்டங்களிலும் பேசுகிறேன்!

-கு.ஆனந்தராஜ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்